நம்பிக்கைக்கும் அவநம்பிக்கைக்கும் இடையில் அல்லாடுகின்றார்கள்!

You are currently viewing நம்பிக்கைக்கும் அவநம்பிக்கைக்கும் இடையில் அல்லாடுகின்றார்கள்!

நான் இலங்கையில் காணாமல்போன பலரின் குடும்பங்கள் தமது உறவுகள் எங்கே? என்ற கேள்விக்கான பதிலையே அவர்கள் கோருகின்றார்கள். அதற்குரிய பதிலின்றி அவர்கள் தினமும் துன்பப்படுவதுடன் நம்பிக்கைக்கும் அவநம்பிக்கைக்கும் இடையில் அல்லாடுகின்றார்கள் என்று ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் ஹம்டி சுட்டிக்காட்டியுள்ளார்.

அதுமாத்திரமன்றி காணாமல்போனோருக்கு என்ன நேர்ந்தது என்பதைக் கண்டறிவதற்கும், பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீட்டை வழங்குவதற்கும், குற்றவாளிகளை சட்டத்தின் முன்நிறுத்துவதற்கும் அவசியமான நடவடிக்கைகளை அரசாங்கம் உடனடியாக மேற்கொள்ளவேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் ஹம்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

உலகளாவிய ரீதியில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமானது வலிந்து காணாமலாக்கப்படல்கள் இடம்பெறுவதைத் தடுப்பதுடன் இம்மோசமான குற்றச்செயலுக்கு உரியவாறான தண்டனை வழங்கப்படவேண்டியதன் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காண்பிக்கின்றது.

அதேவேளை தமது அன்பிற்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பது தெரியாமல் துன்புற்றுவரும் பெருமளவான குடும்பங்கள் மற்றும் சமூகங்களையும் நாம் இன்றைய தினத்தில் நினைவுகூருகின்றோம்.

நான் இலங்கையில் காணாமல்போன பலரின் குடும்பங்களைச் சந்தித்திருக்கின்றேன். அவர்களைப் பொறுத்தமட்டில் அவர்களது அன்பிற்குரியவர்களின் இருப்பின் நிலையற்றதன்மையானது அவர்கள் மத்தியில் இன்னமும் ஆறாத, வலிமிகுந்த காயமாகவே இருந்துவருகின்றது.

தமது உறவுகள் எங்கே? என்ற கேள்விக்கான பதிலையே அவர்கள் கோருகின்றார்கள். அதற்குரிய பதிலின்றி அவர்கள் தினமும் துன்பப்படுவதுடன் நம்பிக்கைக்கும் அவநம்பிக்கைக்கும் இடையில் அல்லாடுகின்றார்கள். உண்மையையும் நீதியையும் கோரிய போராட்டத்திற்கு மத்தியில் அவர்கள் அவ்வப்போது வெகுவாகப் பாதிப்படைந்திருக்கின்றார்கள்.

வலிந்து காணாமலாக்கப்படல்களிலிருந்து அனைத்து நபர்களும் பாதுகாப்புப்பெறுவதற்கான சர்வதேச பிரகடனத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு கைச்சாத்திட்டதன் மூலம் வலிந்து காணாமலாக்கப்படல்கள், அதுகுறித்த விசாரணைகளின் முன்னேற்றம் மற்றும் முடிவு, காணாமல்போன நபரின் நிலை ஆகியவற்றை அறிந்துகொள்வதற்கு அவர்களது குடும்பத்தாருக்கு இருக்கின்ற உரிமையை ஏற்றுக்கொண்டு, அதனை நோக்கிய பாதையில் இலங்கை முதல் அடியை எடுத்துவைத்தது.

காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்டமையானது சரியான பாதையில் வைக்கப்பட்ட அடுத்த அடி என்பதுடன் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்திற்குக் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் மற்றும் காணாமல்போனோரின் விபரங்கள் என்பன வெளியிடப்பட்டமையானது மிகவும் பயனுடையதோர் அடிப்படையாகும்.

இருப்பினும் காணாமல்போனோரின் குடும்பங்களின் நம்பிக்கையை வென்றெடுப்பதற்கு இன்னும் பல விடயங்களைச் செய்யவேண்டியிருப்பதுடன் சர்வதேச நியமங்களுக்கு அமைவாக அவர்களது பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதற்கு நம்பகத்தன்மைவாய்ந்த செயன்முறையொன்றை முன்வைக்கவேண்டும்.

இவ்வாறானதொரு பின்னணியில் நாம் வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோர் மற்றும் அவர்களின் குடும்பத்தாருடனான எமது ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தும் அதேவேளை, காணாமல்போனோருக்கு என்ன நேர்ந்தது என்பதைக் கண்டறிவதற்கும், பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீட்டை வழங்குவதற்கும், குற்றவாளிகளை சட்டத்தின் முன்நிறுத்துவதற்கும் அவசியமான நடவடிக்கைகளை அரசாங்கம் உடனடியாக மேற்கொள்ளவேண்டுமென வலியுறுத்துகின்றோம் என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை இதுகுறித்து இலங்கையிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் அதன் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளது.

‘வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமான இன்று அண்மையில் கவனயீர்ப்புப்போராட்டங்கள் மூலம் 2,000 நாட்களைப் பூர்த்திசெய்த வடக்கு, கிழக்கில் வாழும் குடும்பங்கள் உள்ளடங்கலாக நாடளாவிய ரீதியிலுள்ள பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எமது ஒருமைப்பாட்டை வெளிப்படுத்துகின்றோம். தமது அன்பிற்குரியவர்களை நினைவுகூருவதற்கு அனைத்து சமூகங்களும் கொண்டிருக்கும் உரிமைக்கு மதிப்பளிக்கப்படவேண்டும்’ என்று அப்பதிவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments