நியூயார்க் மாகாணத்தில் 2 நிமிடத்துக்கு ஒருவர் வீதம் பலி!

You are currently viewing நியூயார்க் மாகாணத்தில் 2 நிமிடத்துக்கு ஒருவர் வீதம் பலி!
நியூயார்க் மாகாணத்தில் 2 நிமிடத்துக்கு ஒருவர் வீதம் பலி! 1

நியூயார்க் மாகாணத்தில் கொரோனா வைரசுக்கு 2½ நிமிடத்துக்கு ஒருவர் வீதம் பலியாகி வருகின்றனர்.அமெரிக்காவில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்தை நெருங்கி வருகிறது. பலியானோர் எண்ணிக்கை 9 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.

நியூயார்க் மாகாணம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 4 ஆயிரத்தை எட்டியது. நோய் உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1½ லட்சத்தை நெருங்கி வருகிறது.

நியூஜெர்சி, மிச்சிகன், கலிபோர்னியா, லூசியானா, புளோரிடா, மசாசுசெட்ஸ், பென்சில்வேனியா ஆகிய மாகாணங்கள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகளுடன் திணறி வருகின்றன.

நியூயார்க் மாகாணத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 630 பேர் பலியாகி உள்ளனர். நாள்தோறும் இதே அளவுக்கு பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சராசரியாக, 2½ நிமிடங்களுக்கு ஒருவர் வீதம் உயிரிழந்து வருகிறார்கள்.

இன்னும் 7 நாட்களில், நியூயார்க் மாகாணத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு, உச்சத்தை எட்டும் என்று அம்மாகாண கவர்னர் ஆன்ட்ரூ குவோமோ தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது:-

நியூயார்க் மாகாணத்தில் டாக்டர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு முக கவசங்கள், கவச உடைகள், பாதுகாப்பு உபகரணங்கள் ஆகியவை பற்றாக்குறையாக உள்ளன. இவற்றை அமெரிக்க நிறுவனங்கள் தயாரிக்க முடியாதது ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது.

இந்த பொருட்களை சீனாவில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டி இருப்பது வேதனையாக உள்ளது. நியூயார்க் மாகாணம் ‘ஆர்டர்’ செய்த 17 ஆயிரம் செயற்கை சுவாச கருவிகள் போதுமானவை அல்ல.

சீனா நன்கொடையாக அளித்த ஆயிரம் செயற்கை சுவாச கருவிகள் வந்து சேர உள்ளன. இதற்காக சீன அரசுக்கும், அலிபாபா நிறுவனத்துக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

பட்டம் பெற தயாராக இருக்கும் மருத்துவ மாணவர்களை மருத்துவம் பார்க்க அனுமதிக்கும் உத்தரவில் கையெழுத்திட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

பகிர்ந்துகொள்ள