நியூ யோர்க் நகரத்தை சட்டை செய்யாத அமெரிக்க அதிபர்! நியூ யோர்க் நகரபிதா கண்டனம்!!

You are currently viewing நியூ யோர்க் நகரத்தை சட்டை செய்யாத அமெரிக்க அதிபர்! நியூ யோர்க் நகரபிதா கண்டனம்!!

அமெரிக்காவின் நியூ யோர்க் நகரத்தில் தற்போது ஏற்பட்டுள்ள அவசரநிலை தொடர்பில், அதிபர் “டொனால்ட் ட்ரம்ப்” அக்கறை கொள்ளவில்லையென, நியூ யோர்க் நகரபிதா கண்டனம் தெரிவித்துள்ளார்.

“கொரோனா” பரவலால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நியூ யோர்க் நகரத்தில் தற்போதுள்ள மருத்துவ உபகரணங்கள் வெறும் பத்து நாட்களுக்கு மட்டுமே தாக்குப்பிடிக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ள நகரபிதா, அமெரிக்க அதிபர் விரைந்து உடனடி நடவடிக்கைகளை எடுக்கவேண்டுமென வேண்டுகோளும் விடுத்துள்ளார்.

நியூ யோர்க் நகரத்திலுள்ள வர்த்தக நிலையங்கள், உணவகங்கள், திரையரங்குகள் உள்ளிட்ட அனைத்தும் பூட்டப்பட்டுள்ள நிலையில், நகரத்தின் தெருக்கள் யாவும் வாகனங்கள் ஏதுமின்றி வெறிச்சோடிப்போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படும் அதேவேளையில், நியூ யோர்க் நகரத்தில் எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் நிலைமை இன்னும் மோசமாகும் எனவும், நகரத்து மக்கள் வருவதை எதிர்கொள்வதற்கு தம்மை தயார்ப்படுத்திக்கொள்ளவேண்டுமெனவும் நகரபிதா தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவெங்கும் 33.018 பேர் “கொரோனா” தொற்றினால் பீடிக்கப்பட்டுள்ளதாகவும், 428 பேர் மரணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படும் அதே வேளையில், நியூ யோர்க் நகரத்தில் மாத்திரம் 20.000 பேர் தொற்றுக்கு உள்ளாகியிருப்பதாகவும், 157 பேர் மரணமாகியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நியூ யார்க், கலிபோர்னியா மற்றும் வொஷிங்டன் ஆகிய மாநிலங்கள் பாதிப்புக்குள்ளான பிரதேசங்களாக அமெரிக்க அதிபர் அறிவித்துள்ள போதிலும், தேவையானளவு உதவிகளையோ அல்லது பொருளாதாரத்தையே அமெரிக்க அதிபர் ஒதுக்கவில்லையென கவலை தெரிவிக்கும் நியூ யோர்க் நகரபிதா, அமெரிக்க அதிபர் விரைந்து அவசரகால நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், நியூ யோர்க் நகர மக்களில் அதிகம் பேர் மரணமாகிவிடும் ஆபத்து தோன்றியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நியூ யோர்க் வைத்தியசாலைகளில் மிகக்குறைந்தளவு அவசர மருத்துவ உபகரணங்களே இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பகிர்ந்துகொள்ள