நிலச்சரிவு அனர்த்த இடத்தில் தொடரும் மீட்பு நடவடிக்கைகள்! மேலும் பல வீடுகள் நாசமாகலாம்!!

You are currently viewing நிலச்சரிவு அனர்த்த இடத்தில் தொடரும் மீட்பு நடவடிக்கைகள்! மேலும் பல வீடுகள் நாசமாகலாம்!!

நோர்வேயின் கிழக்குப்பகுதியில், தலைநகர் ஒஸ்லோவை அண்டிய “Gjerdrum” பகுதியில் நேற்றுமுன்தினம் அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவின் பின்னான தொடர் மீட்ப்புப்பணிகள் இரவு பகலாக தொடர்ந்தவண்ணமுள்ளன.

தொடர்பில்லாமல் போயுள்ளதாக கருதப்படும் 10 பேர் தொடர்பில், உறுதியான தகவல்களெதுவும் இதுவரை வெளியிடமுடியாத நிலையில், சுமார் 20 மீட்டர்கள் ஆழம்வரை புதைந்திருப்பதாக சொல்லப்படும் வீடுகளின் இடிபாடுகளுக்கிடையில் சென்று தேடுதல்களை நடத்துவதற்கான முயற்சிகளின் ஒரு அங்கமாக, சதுப்பு நிலப்பகுதியாகவும், மிகவும் வழுக்கும் தன்மையும் கொண்டுள்ள அப்பகுதிக்குள் செல்வதற்காக தற்காலிக பாதை / பாலம் போன்றவற்றை அமைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என தெரிவிக்கப்படுகிறது.

இன்னமும் கண்டுபிடிக்கப்பட முடியாமல் இருப்பவர்கள் பற்றி, உறவினர்களும் அயலவர்களும் கவலை கொண்டுள்ள நிலையில், இவ்வாறானதொரு சூழ்நிலையில், இடிபாடுகளில் சிக்கிக்கொள்ளக்கூடியவர்கள், தொடர்ந்து சில நாட்களுக்கு உயிரோடு இருப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நிலச்சரிவு அனர்த்த இடத்தில் தொடரும் மீட்பு நடவடிக்கைகள்! மேலும் பல வீடுகள் நாசமாகலாம்!! 1

நோர்வே இராணுவம் பயன்படுத்தும் தற்காலிக பாலம் அமைக்கும் உபகரணங்களை பயன்படுத்தியும், பாரிய “ரெஜிபோர்ம்” தட்டுக்கள் போன்ற மெது பொருட்களை பயன்படுத்தியும், கீழிறங்கிய நிலப்பகுதிக்குள் மீட்ப்புப்பணியாளர்கள் செல்லக்கூடிய விதத்தில் காரியங்கள் நடைபெறுவதாக செய்தியூடகங்களுக்கு காவல்துறை தெரிவித்துள்ளது.

இதேவேளை, நிலச்சரிவு ஏற்பட்ட இடத்துக்கு அருகிலிருக்கும் வேறும் சில இடங்களும் நிலச்சரிவுக்கு உள்ளாகலாமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், அப்பகுதியிலுள்ள குடியிருப்பாளர்கள் அவதானமாக இருக்கும்படி சொல்லப்பட்டிருக்கிறது.

அனர்த்தம் ஏற்பட்ட குறித்த பகுதி சதுப்புநிலமாக இருந்தாலும், அதில் இயற்கையாகவே இருக்கக்கூடிய உவர்த்தன்மையால் சதுப்புநிலம் ஓரளவுக்கு உறுதிப்பாட்டோடு இருக்கும் என்றும், எனினும் மழைநீரோ அல்லது நன்னீரோ அதிகமாக இச்சதுப்பு நிலத்துக்குள் செல்லும்போது, சதுப்பு நிலத்திலுள்ள உவர்த்தன்மை குறைவடைவதால், அதன் உறுதிப்பாடு குலைந்து மிக இளகிய தன்மையை அடைவதால் நிலச்சரிவு ஏற்படுவது தவிர்க்க முடியாததாக ஆகிவிடுமெனவும், நேர்வேயின் புவியியல் ஆய்வு மையம் தெரிவிக்கிறது.

வழக்கமாக இக்காலப்பகுதியில் அனர்த்தப்பகுதியிலும் அதனை அண்டியுள்ள பகுதியிலும் இருக்கக்கூடிய பனிப்பொழிவு இம்முறை குறைவாகவும், ஆனால், அதிகளவிலான மழைப்பொழிவும் இருந்ததால், அவ்விடத்தில் மழை நீரோட்டம் அதிகளவில் இருந்துள்ளதாகவும், இவ்வதிகமான மழை நீரோட்டமும் அனர்த்தம் ஏற்படுவதற்கான காரணமாக இருந்திருக்குமெனவும் எதிர்வுகூறப்படுகிறது.

இதேவேளை, நோர்வே முழுவதும் சுமார் 90.000 மக்கள், இவ்வாறு சதுப்பு / களிமண் பிரதேசங்களின்மேல் அமைக்கப்பட்ட குடியிருப்புக்களில் வசித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

நிலச்சரிவு அனர்த்த இடத்தில் தொடரும் மீட்பு நடவடிக்கைகள்! மேலும் பல வீடுகள் நாசமாகலாம்!! 2

இந்நிலையில், இயற்கை பாதுகாப்பு ஆர்வலரும், நீரியல் நிபுணரும், உயர்நிலை பொறியியலாளருமான “Steinar Myrabø” என்பவரது கருத்துப்படி, குறித்த அனர்த்தம் நடைபெற்ற பகுதியில் இயற்கை பாதுகாப்பு ஆர்வலராக தான் பணியாற்றிய வேளையில், அவ்விடத்தில் குடியிருப்புக்கள் அமைக்கப்பட்டபோது, அவ்விடத்தில் விரைவான மண்ணரிப்புக்கள் / மண்சரிவுகள் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும், ஆதலால் அதையிட்டு கவனம் செலுத்தப்பட வேண்டுமென்றும், அதற்கான துறைசார் ஆலோசனைகளை வழங்க தான் தயாராக இருந்ததாகவும் அவ்விடத்தின் நகராட்சிக்கு அறிவித்ததாகவும், எனினும் தனது எச்சரிக்கை மதிப்பக்கடவில்லையென்றும் விசனம் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, அனர்த்தம் ஏற்பட்ட பகுதியில் குடியிருப்புக்கள் அமைக்கப்படுவது தொடர்பில், 2004 மற்றும் 2005 ஆகிய ஆண்டுகளிலும் எச்சரிக்கை விடுக்கப்பட்டபோதும் 2008 ஆம் ஆண்டிலிருந்து மேலதிகமாக அவ்விடத்தில் குடியிருப்புகளால் அமைக்கப்பட்டது தொடர்பில் இப்போது தொடர் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுவரும் நிலையில், இதுவிடயத்தில் நகராட்சியும் கவனயீனமாக இருந்திருப்பதாக விசனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

அனர்த்தம் ஏற்பட்ட இடத்தின் நில உறுதித்தன்மை தொடர்பில் புதிய ஆய்வுகள் செய்யப்படவேண்டுமென சமீபத்தில் முடிவு எடுக்கப்பட்டிருந்ததாகவும், இதற்கான இறுதி நாளாக 12.01.2021 குறிக்கப்பட்டிருந்ததாகவும், எனினும் துரதிஷ்டவசமாக அதற்கு முன்னதாகவே அனர்த்தம் நடந்திருப்பதாகவும் இப்போது தெரிவிக்கப்படுகிறது.

அனர்த்தம் ஏற்பட்டதை விளக்கும் மாதிரி காணொளி:

https://www.vgtv.no/video/210645/ny-grafikk-viser-skredomraadet

(நன்றி: www.vgtv.no)

செய்தி மேம்பாடு:

14:40 – 01.01.2021

அனர்த்தப்பகுதிக்கு உயிர்காப்பு உலங்குவானூர்தி (Ambulance Helicopter) வரவழைக்கப்பட்டுள்ளதாக இறுதித்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலச்சரிவு அனர்த்த இடத்தில் தொடரும் மீட்பு நடவடிக்கைகள்! மேலும் பல வீடுகள் நாசமாகலாம்!! 3
மேலதிக தகவல்களுக்காக காத்திருக்கும் உயிர்காப்பு உலங்குவானூர்தி.
பகிர்ந்துகொள்ள