நீண்டகால எரிமலைக்குமுறலை சந்திக்கும் ஐஸ்லாந்து! 10 செ.மி. உயர்ந்துள்ள நிலப்பரப்பு!!

You are currently viewing நீண்டகால எரிமலைக்குமுறலை சந்திக்கும் ஐஸ்லாந்து! 10 செ.மி. உயர்ந்துள்ள நிலப்பரப்பு!!

நீண்டகாலத்துக்கு நீடிக்கும் எரிமலைக்குமுறலை சந்திக்கும் அபாயத்தில் ஐஸ்லாந்து உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாட்டின் பிரதான விமான நிலையமான “Keflavik” விமான நிலையத்தை அண்டியுள்ள பகுதிகளில் நிலப்பரப்பு சுமார் 10 சென்டி மீட்டர்கள் உயர்வடைந்துள்ளதாகவும், நிலத்தடியில் குமுறும் எரிமலைக்குழம்புகள் எந்நேரமும் வெடித்து கிளம்புவதற்கான அறிகுறிகளில் ஒன்றாகவே இவ்விடயத்தை பார்க்க வேண்டுமெனவும் ஐஸ்லாந்தின் புவியியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஐஸ்லாந்தின் இக்குறிப்பிட்ட நிலப்பரப்பின் அடியில் சுமார் 45 கி.மி. நீளத்திலும், 15 கி.மி. அகலத்திலும் அமைந்துள்ள கொதிக்கும் எரிமலைக்குழம்புகள் சுமார் ஒவ்வொரு 1000 வருடங்களுக்கு ஒருமுறை வெடித்து கிளம்பியிருப்பதாக வரலாற்றுப்பதிவுகள் சொல்வதாக குறிப்பிட்டுள்ள ஐஸ்லாந்தின் சூழலியல் ஆய்வாளர்கள், கடந்த 10 ஆம் நூற்றாண்டிலிருந்து 13 ஆம் நூற்றாண்டுவரை இப்பகுதியிலிருக்கும் எரிமலைகள் தொடர்ச்சியாக உயிர்ப்புடன் இருந்ததாகவும், இறுதியாக எரிமலைக்குழம்புகளை கக்கிய எரிமலைகள், அமைதியாவதற்கு சுமார் 300 வருடங்கள் ஆகியிருந்ததாகவும் குறிப்பிடுகின்றனர்.

ஐஸ்லாந்தின் பிரதான விமான நிலையமான “Keflavik” இலிருந்து சுமார் 15 கி.மி. தூரத்திலிருக்கும் எரிமலையானது, சுமார் 800 வருடங்கள் வரை அமைதியாக இருந்துள்ளதோடு இப்போது வெடித்துக்கிளம்பும் அறிகுறிகளை வெளிப்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படும் நிலையில், சுற்றாடல் பகுதிகளின் நிலமட்டம் சுமார் 10 செ.மி. வரை உயர்வடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நீண்டகால எரிமலைக்குமுறலை சந்திக்கும் ஐஸ்லாந்து! 10 செ.மி. உயர்ந்துள்ள நிலப்பரப்பு!! 1

எதிர்பார்க்கப்படுவதுபோல் எரிமலைக்குழம்புகள் வெளிப்பட்டால், விமானநிலைய சுற்றாடல் உட்பட, பெரும்பகுதி எரிமலைக்குழம்புகளால் சூழப்படுவதோடு, ஐரோப்பாவுக்கான விமான சேவைகளும் பாதிக்கப்படும் எனவும், ஐஸ்லாந்தின் நீர்விநியோகம் உட்பட பல்வேறு சிக்கல்களை நாடு எதிர்கொள்ளும் எனவும் அஞ்சப்படுகிறது. எனினும், எரிமலைக்குழம்புகள் வெளிப்படுவதற்கு 6 மாதகாலம் கூட ஆகலாமெனவும் தெரிவிக்கப்படுகிறது.

பகிர்ந்துகொள்ள