நைஜீரியா கிராமத்தில் 59 பேர் கொன்று குவிப்பு ; பயங்கரவாத தாக்குதல்!

  • Post author:
You are currently viewing நைஜீரியா கிராமத்தில் 59 பேர் கொன்று குவிப்பு ; பயங்கரவாத தாக்குதல்!

நைஜீரியா நாட்டில் உள்ள கிராமத்தில், போகாஹரம் பயங்கரவாதிகள் புகுந்து நடத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களில் அப்பாவி மக்கள் 59 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். அங்கிருந்து கால்நடைகளையும் அவர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

நைஜீரியா நாட்டில் மத அடிப்படையிலான ‘போகோ ஹரம்’ பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

இவர்களது அடிப்படை நோக்கம், அங்கு மத சட்டத்தை நடைமுறைப்படுத்துவதாகும். தலைமையோ, ஒழுங்கான கட்டமைப்போ இந்த பயங்கரவாதிகளுக்கு இல்லை என்றாலும், அவ்வப்போது வன்முறை செயல்களை நடத்தி கதிகலங்க வைக்கின்றார்கள்.

அந்த வகையில் நேற்று முன்தினம் மதியம் போர்னோ மாகாணத்தில் உள்ள பதுமோ கொலோராம் என்ற கிராமத்துக்கு ஏராளமான போகோ ஹரம் பயங்கரவாதிகள் வாகனங்களி ல் சென்று திடீரென புகுந்து ஏ.கே. 47 துப்பாக்கிகள் மூலம் அந்த கிராம மக்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தி, அவர்களை ரத்த வெள்ளத்தில் சாய்த்தனர். அதைத் தொடர்ந்து அங்கிருந்து 1,200 கால்நடைகளையும், ஒட்டகங்களையும் பயங்கரவாதிகள் கொள்ளையடித்து சென்றுள்ளனர் .

அவர்கள் ஈவிரக்கமின்றி, காட்டுமிராண்டித்தனமாக நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 59 அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

இதை பொதுமக்கள் கூட்டு பணிக்குழு உறுப்பினர் ஒருவரும், படை வீரர் ஒருவரும் உறுதி செய்துள்ளனர்.

இந்த கிராமத்தை சேர்ந்தவர்கள், போகோஹரம் பயங்கரவாதிகள் நடமாட்டம் குறித்து பாதுகாப்பு படை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல்களை அளித்ததாக சந்தேகப்பட்டுதான் இந்த கொடூர தாக்குதல்களை அவர்கள் நடத்தி உள்ளனர் என தெரி ய வந்துள்ளது.

இதுபற்றி கூட்டு பணிக்குழு உறுப்பினர் கச்சல்லா பூமு கூறும்போது, “ இந்த கொடிய செயலை நாங்கள் பார்த்த இந்த நாள் ஒரு துரதிர்ஷ்டவசமான நாள். இந்த ஊர் மக்கள் ஆயுதங்கள் வைத்திருக்கிறார்கள். இதற்கு முந்தைய தாக்குதல்களை தடுத்தும் இருக்கிறார்கள். ஆனால் இந்த முறை பயங்கரவாதிகள், பெருங்கூட்டத்துடன் வந்து இந்த கொடிய தாக்குதல்களை நடத்தி சென்றிருக்கிறார்கள்” என குறிப்பிட்டார்.

இந்த தாக்குதல் நடந்த கிராமமே பெருத்த சோகத்தில் மூழ்கி உள்ளது.

இந்த பயங்கரவாதிகள் இதற்கு முன்னரும் ஆயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்து இருக்கிறார்கள். இவர்களது தாக்குதல்களுக்கு பயந்தே லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை காலி செய்து விட்டு, பாதுகாப்பைத் தேடி இடம் பெயர்ந்து சென்று விட்டனர்.

கடந்த 2 ஆண்டுகளில் ராணுவத்துக்கு எதிராக பல முறை இவர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர். சமீபத்திய மாதங்களில்தான் பொதுமக்கள் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்தி உள்ளனர். கடந்த மார்ச் மாதம் நடத்திய தாக்குதலில் 47 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இவர்களின் 10 ஆண்டு கால தாக்குதல்களில் 36 ஆயிரம் பேர் கொல்லபட்டுள்ளனர். 20 லட்சம் பேர் இடம் பெயர்ந்து சென்று விட்டனர்.

தற்போது போகோ ஹரம் பயங்கரவாதிகள் நைஜீரியாவில் மட்டுமல்லாது அதன் அண்டை நாடுகளான நைஜர், சாத், கேமரூன் ஆகிய நாடுகளிலும் கால் பதித்து பயங்கரவாத செயல்களை நடத்தி வருகின்றனர். கடந்த மார்ச் மாதம் சாத் நாட்டில் ராணுவத்துக்கு எதிராக கடும் தாக்குதல் நடத்தி சுமார் 100 வீரர்களை கொன்றது, இந்த பயங்கரவாதிகள் எவ்வளவு கொடூரமானவர்கள் என்பதற்கு சான்றாக அமைகின்றது.

பகிர்ந்துகொள்ள