நோர்வேயில் ஊரடங்கு உத்தரவு! சட்ட விதிகளை ஆராயும் அரசு!!

You are currently viewing நோர்வேயில் ஊரடங்கு உத்தரவு! சட்ட விதிகளை ஆராயும் அரசு!!

பெருகிவரும் “கொரோனா” தொற்றை கட்டுக்குள் கொண்டுவரமுகமாக, நோர்வேயில் ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்துவது தொடர்பில் நோர்வே நீதியமைச்சு ஆராய்ந்து வருவதாக நோர்வேயின் தேசியத்தொலைக்காட்சியான “NrK / Norsk Riks Kringkasting” தெரிவித்துள்ளது.

நோர்வேயின் நீதியமைச்சர் “Monica Mæland” அம்மையார் இதுவிடயம் தொடர்பிலான தகவல்களை வெகு விரைவில் வெளியிடுவாரெனவும் தெரிவித்துள்ள மேற்படி ஊடக நிறுவனம், ஐரோப்பிய நாடுகளில் இருக்கும் நோர்வே தூதுவராலயங்கள், அந்தந்த நாடுகளில் “கொரோனா” தடுப்புக்காக அமுலாக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு பற்றியும், ஊரடங்கு உத்தரவு அந்நாடுகளில் எவ்வாறு அமுல்படுத்தப்படுகிறது போன்ற விடயங்களில் நோர்வே நீதியமைச்சுக்கு ஆலோசனங்களை வழங்குமாறும் நோர்வே நீதியமைச்சு கேட்டுக்கொண்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கிறது.

நோர்வேயில் ஊரடங்கு அமுல்படுத்தப்படுவது தொடர்பிலான தனது வகிபாகத்தை அரசுக்கு வழங்கியுள்ளதாக தெரிவித்திருக்கும் நோர்வே சுகாதார நிறுவனத்தை (FHI) சேர்ந்த முதன்மை வைத்தியரான “Preben Aavitsland”, எனினும், மேலதிக விபரங்களை தன்னால் வெளியிட முடியாதெனவும் தெரிவித்துள்ளார்.

  1. கட்டுப்பாடில்லாத முறையில் தொற்று பரவுவதால், வைத்தியசாலைகளில் இடநெருக்கடிகள் உள்ளிட்ட சிக்கல்களை தவிர்த்துக்கொள்ளவும்…
  2. தொற்றுதலை கட்டுப்படுத்துவதில் முன்னேற்றம் ஏற்படாமை…
  3. தொற்று எங்கிருந்தது ஏற்படுகிறது என்பதை கண்டறிய முடியாதுள்ளமை…

உள்ளிட்ட விடயங்கள் மிக ஆபத்தான விடயங்களாக நோக்கப்படுவதால், ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தல் தொடர்பில் அரசு ஆராய்ந்து வருவதாக மேலும் தெரிவித்திருக்கும் மேற்படி நோர்வே அரச ஊடகம், இது தொடர்பிலான அரச ஆவணங்களை பார்வையிடுவதற்கு தான் விடுத்த கோரிக்ககையை அரசு நிராகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

மேற்படி செய்தி தொடர்பில் தான் கருத்தெதையும் தெரிவிக்க விரும்பவில்லையென தெரிவித்துள்ள நோர்வேயின் நீதியமைச்சர் “Monica Mæland” அம்மையார், எனினும் ஊரடங்கு விதிப்பதை கூடுமானவரை தவிர்க்கவே விரும்புவதாகவும் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மூலம்:

https://www.nrk.no/norge/regjeringen-utreder-grunnlag-for-a-innfore-portforbud-1.15314861

செய்தி மேம்பாடு:

14:30 – 06.01.2021

ஊரடங்கு உத்தரவுக்கான யோசனையின் நகல், நாடாளுமன்ற விவாதத்துக்காக அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பகிர்ந்துகொள்ள