நோர்வே அரசின் நிவாரணத்திட்டங்கள் அறிவிப்பு! அரசோடு கைகோர்க்கும் எதிர்க்கட்சிகள்!!

You are currently viewing நோர்வே அரசின் நிவாரணத்திட்டங்கள் அறிவிப்பு! அரசோடு கைகோர்க்கும் எதிர்க்கட்சிகள்!!

“கொரோனா” பரவலின் பின்னதாக நாட்டில் ஏற்பட்டிருக்கும் தற்காலிக வேலையிழப்பு மற்றும் இன்னோரன்ன காரணங்களினால் பொருளாதார சிக்கல்களை எதிநோக்கியிருப்பவர்களின் சிக்கல்களை தணிப்பதற்கு அரசு நிவாரண திட்டங்களை அறிவித்துள்ளது.

இதன்படி, 

  • “Lærling” எனப்படும், தொழில் பழகுவோர் தமது தொழில்பழகும் வேலைத்தளங்களிலிருந்து இடைநிறுத்தப்படும் பட்சத்தில், அவர்களுக்கு அதுவரை வழங்கப்பட்டுவந்த “தொழில்பழகுநர்” களுக்கான வேதனம் வழங்கப்படும்.
  • “Permittering” எனப்படும் கட்டாய விடுப்பில் அனுப்பப்படும், நிரந்தர பணியாளர்களுக்கான வேதனம் முழுமையாக 20 நாட்களுக்கு வழங்கப்படும். இதில், முதல் இருநாட்களுக்கும் அவர்களுடைய தொழில்வழங்குநர்களே வேதனத்தை வழங்குவதாகவும், மிகுதி 18 நாட்களுக்குமான வேதனத்தை அரசே பொறுப்பேற்கும் எனவும் முடிவு எட்டப்பட்டுள்ளது.
  • வேதனங்களை இழக்கும் பகுதிநேர பணியாளர்களும், சுயதொழில் புரிவோரும், தொடர்ந்தும் வேதனங்களை இழக்கும் நிலையில் 17 நாட்களுக்கு பின்னதாக, அவர்களின் கடந்த 3 வருடங்களில் பெற்றுக்கொண்ட மொத்த வேதனத்தின் சராசரி அளவின் 80 சதவிகிதமான தொகை வேதனமாக அவர்களுக்கு வழங்கப்படும். எனினும் இவ்வேதனத்தொகை வருடமொன்றுக்கு 6.00.000 குறோணர்களாக மட்டுப்படுத்தப்படும். இவர்களுக்கான சுகவீன விடுப்புக்கான கொடுப்பனவு, அவர்கள் சுகவீனமடைந்த மூன்றாம் நாளிலிருந்து வழங்கப்படுவதோடு, “Omsorgspenger” எனப்படும் குழந்தைகளை கவனிப்பதற்கான கொடுப்பனவு, நான்காம் நாளிலிருந்து வழங்கப்படும்.
  • வருமானத்தை மிக்கணிசமாக இழப்பவர்களுக்கு, தொழில் வாய்ப்புக்கள் இல்லாதவர்களுக்கு வழங்கப்படும் “Dagpenger” கொடுப்பனவுகள் கிடைப்பதற்கு ஏற்படுகள் செய்யப்படும். “Dagpenger” கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்வதற்கான வழிவகைகளை இலகுவாக்கும் பொருட்டு, “Dagpenger” பெறுவதற்கான அதிகுறைந்த வருமான எல்லையானது, 1.50.000 குறோணர்களிலிருந்து, 74.894 குறோணர்களாக குறைக்கப்பட்டிருக்கிறது.
  • குழந்தைகளோடு வீட்டிலிருக்கும் பெற்றோருக்கான, குழந்தைகளை கவனிப்பதற்காக வழங்கப்படும் “Omsorgspenger” கொடுப்பனவு, அதற்கான காலவரையறை வரும்போது இரட்டிப்பாக்கப்படும் எனவும், எனினும் 20 நாட்களுக்கு மாத்திரமே இது செல்லுபடியாகும்.

கடந்த வார இறுதியிலே அரசும், எதிர்க்கட்சிகளும் நாடாளுமன்றத்தில் கூடி விவாதித்ததன் பிரதி பலனாகவே மேற்குறிப்பிட்ட முடிவுகள் எட்டப்பட்டதாக இன்று 16.03.20 காலையில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அரசின் மேற்படி அவசர நிவாராண நடவடிக்கைகளின்மூலம், அனாவசியமான வேலையிழப்புக்கள் மற்றும் தொழில்முனைவர்கள் நட்டமடைவது போன்றவை தடுக்கப்படுமெனவும் அரசு நம்புவதாக தெரிவிக்கப்படுகிறது. அரசின் அவசரகால நிவாரண நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சிகள் முழுமையான ஆதரவை அரசுக்கு வழங்கி வருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள