நோர்வே நிலச்சரிவு அனர்த்தத்தில் பலியானவர்கள் தொகை 5 ஆக அதிகரிப்பு!

You are currently viewing நோர்வே நிலச்சரிவு அனர்த்தத்தில் பலியானவர்கள் தொகை 5 ஆக அதிகரிப்பு!

நோர்வேயின் கிழக்குப்பகுதியில், தலைநகர் ஒஸ்லோவை அண்டிய “Gjerdrum” பகுதியில் 30.12.2020 அன்று அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த 5 ஆவது நபர் பற்றிய விபரம் இன்று அதிகாலை 06:00 மணியளவில் வெளியிடப்பட்டது.

செய்தி மேம்பாடு விரைவில்….

செய்தி மேம்பாடு:

10.28 – 03.01.2021

இன்று ஞாயிறு அதிகாலை 05:55 மணியளவில் 5 ஆவது உடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கும் மீட்புக்குழு, மோப்ப நாய்களின் அசைவுகள் மூலம் அனுமானிக்கப்பட்ட விடயங்களை வைத்து தேடுதல் நடத்தப்படும் இடங்களை விரிவாக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாகவும், இறுதியாக கிடைத்திருக்கும் தகவல்களின் அடைப்படையில், காணாமல் போயிருக்கும் மிகுதி 5 பேரில் அனைவரையுமோ அல்லது ஒரு சிலரையோ உயிரோடு மீட்க முடியுமென நம்பிக்கை தெரிவித்திருக்கிறது.

தேடுதல் நடவடிக்கைகளை மேலும் துரிதப்படுத்துவதற்காக தேடுதல் 5 தேடுதல் குழுக்கள் களமிறக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, அனர்த்தப்பகுதியின் சதுப்பு / களிமண் பிரதேசம் மென்மேலும் இறுக்கமடைந்து வருவதால், மண்ணை கிண்டி தேடுதல் நடத்துவது கடினமாகி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக, ஒரு வாளி மண்ணை தோண்டி எடுப்பதற்கு 30 நிமிடங்கள் வரை செலவாகிறதாக மீட்ப்புக்குழு சார்பில் பேசவல்ல அதிகாரி தெரிவித்திருக்கிறார். அந்தளவுக்கு மண் கடினமாக மாறி வருவது குறிப்பிடத்தக்கது. எனினும், நம்பிக்கையோடும் விடாமுயற்சியோடும், சகதியில் புதைந்திருக்கும் மகிழூந்துகளுக்குள்ளும் தேடுதல்களை நடத்தி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நோர்வே நிலச்சரிவு அனர்த்தத்தில் பலியானவர்கள் தொகை 5 ஆக அதிகரிப்பு! 1

அனர்த்தப்பகுதிக்கு சென்று பார்வையிடுவதற்காக நோர்வே அரசகுடும்பத்த்தினர் இன்று சம்பவ இடத்துக்கு வந்துள்ள நிலையில், அரசகுடும்பத்தினர் வந்த வழியெங்கும் மக்கள் கூடியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

மன்னர் அதி மாட்சிமை தங்கிய “Harald” அவர்கள், அரசியார் “Sonja” மற்றும் முடிக்குரிய இளவரசர் “Håkon” ஆகியோர் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து பார்வையிடுவதோடு அங்கு நடைபெறும் மீட்பு நடவடிக்கைகளையும் பார்வையிட்டுவிட்டு, வீடுகளை இழந்த நிலையில் தற்காலிகமாக உல்லாச விடுதிகளில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களையும், உறவினர்களை இழந்த மற்றும் இதுவரை காணாமல் போனவர்களின் உறவினர்களையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவார்களெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அனர்த்தப்பகுதியை விளக்கும் காணொளி:

https://www.vgtv.no/video/210645/enkelt-forklart-dette-er-skredomraadet

(நன்றி: www.vgtv.no)

செய்தி மேம்பாடு:

15:10 – 03.01.2021

நிலச்சரிவு அனர்த்தத்தில் பலியான மேலும் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக சற்று முன்னர் காவல்துறை அறிவித்துள்ளது.

முன்னதாக சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட அதே பகுதியில் வீடொன்றின் இடிபாடுகளுக்கிடையில் 6 வது சடலமும் கண்டெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காணாமல் போனவர்களாக பதிவு செய்யப்பட்டிருந்த 10 பேர்களில் இதுவரை 6 பேர் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதை அடுத்து, இன்னமும் நால்வரின் நிலை தெரியவில்லை.

செய்தி மேம்பாடு:

20:35 – 03.01.2021

தொடர்ந்து வரும் மீட்புப்பணிகளின்போது 7 வது சடலம் இன்று மாலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மீட்ப்புக்குழு அறிவித்துள்ளது. இதன்படி காணாமல்போன 10 பேரில் 7 பேர் சடலங்களாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.

பகிர்ந்துகொள்ள