பயங்கரவாதத்தடைச்சட்டத்திருத்த முன்மொழிவுகளை நிராகரியுங்கள்!

You are currently viewing பயங்கரவாதத்தடைச்சட்டத்திருத்த முன்மொழிவுகளை நிராகரியுங்கள்!

ஐரோப்பிய ஒன்றியமும் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட இலங்கையின் ஏனைய வர்த்தகப்பங்காளிகளும் நிதியுதவிகளை வழங்கும் நாடுகளும் குறிப்பிட்ட கால எல்லைக்குள் பயங்கரவாதத்தடைச்சட்டத்தை முழுமையாக இல்லாதொழிப்பதற்கு அவசியமான அழுத்தங்களை இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கவேண்டும். 

அத்தோடு  பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் பிரயோகத்தினால் இடம்பெறுகின்ற மிகமோசமான மீறல்களை முடிவிற்குக் கொண்டுவருவதற்கு எவ்வகையிலும் பங்களிப்புச்செய்யாத விதத்தில் அரசாங்கத்தினால் அச்சட்டத்தில் மேற்கொள்வதற்கென முன்மொழியப்பட்டிருக்கக்கூடிய திருத்தங்களையும் முழுமையாக நிராகரிக்கவேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.

‘பயங்கரவாதத்தடைச்சட்டத்தைத் திருத்தியமைப்பதில் இலங்கை அரசாங்கம் அடைந்துள்ள தோல்வி’ என்ற தலைப்பில் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தினால் அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது. 

கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம் தமிழ், முஸ்லிம் சிறுபான்மை இனங்களுக்கு எதிராகப் பயங்கரவாதத்தடைச்சட்டத்தைத் தவறான முறையில் பிரயோகிப்பது குறித்தும் அதனூடாக சிவில் சமூக செயற்பாட்டாளர்கள்மீது அடக்குமுறைகள் பிரயோகிக்கப்படுவது குறித்தும் அவ்வறிக்கையில் விரிவாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

மேற்படி அறிக்கையானது கடந்த 2018 ஆம் ஆண்டிலிருந்து பயங்கரவாதத்தடைச்சட்டம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், கடந்த 2021 ஆம் ஆண்டில் ஜனவரி தொடக்கம் டிசம்பர் மாதத்திற்கு இடையில் முன்னெடுக்கப்பட்ட நேர்காணல்கள் மற்றும் அண்மையகால நீதிமன்ற ஆவணங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. 

அதுமாத்திரமன்றி இவ்விடயம் தொடர்பில் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தினால் சட்டமா அதிபருக்கும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கும் அனுப்பப்பட்ட கடித்திற்க ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட பதிலும் இவ்வறிக்கையுடன் இணைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பயங்கரவாதத்தடைச்சட்டம் பற்றிய தமது 59 பக்க அறிக்கை தொடர்பில் விளக்கமளிக்கும் வகையில் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுருக்கமான அறிக்கையிலேயே மேற்கண்டவாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. 

அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

இலங்கை அரசாங்கம் நபர்களை நீண்டகாலமாகத் தன்னிச்சையாகத் தடுத்துவைப்பதற்கும் சித்திரவதைகளுக்கு உட்படுத்துவதற்கும் மிகமோசமான பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பயன்படுத்துகின்றது. 

எனவே ஐரோப்பிய ஒன்றியமும் இலங்கையின் ஏனைய வர்த்தகப்பங்காளிகளும் நிதியுதவிகளை வழங்கும் தரப்புக்களும் குறிப்பிட்ட கால எல்லைக்குள் பயங்கரவாதத்தடைச்சட்டத்தை முழுமையாக இல்லாதொழிப்பதற்கு அவசியமான அழுத்தங்களை வழங்கும் அதேவேளை, பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் பிரயோகத்தினால் இடம்பெறுகின்ற மிகமோசமான மீறல்களை முடிவிற்குக் கொண்டுவருவதற்கு எவ்வகையிலும் பங்களிப்புச்செய்யாத விதத்தில் அரசாங்கத்தினால் அச்சட்டத்தில் மேற்கொள்வதற்கென முன்மொழியப்பட்டிருக்கக்கூடிய திருத்தங்களை நிராகரிக்குமாறும் வலியுறுத்துகின்றோம்.

ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்படும் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை மீண்டும் பெற்றுக்கொண்டபோது பயங்கரவாதத்தடைச்சட்டத்தை இல்லாதொழிப்பதாகக் கடந்த அரசாங்கம் வழங்கிய வாக்குறுதியைத் தற்போதைய அரசாங்கம் நிராகரித்துள்ளது.

அவ்வாறு மறுப்பதன் ஊடாக அரசாங்கம் தாம் இலக்குவைத்திருக்கக்கூடிய சில தரப்பினரின் அடிப்படை உரிமைகளை இல்லாமல் செய்வதற்காக அச்சட்டத்தைப் பயன்படுத்துகின்றது.

இவ்வாறானதொரு பின்னணியில் அரசாங்கத்தினால் பயங்கரவாதத்தடைச்சட்டத்தில் முன்மொழியப்பட்டிருக்கும் திருத்தங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தினதும் ஏனைய அரசாங்கங்களினதும் கரிசனைகளை சமாதானப்படுத்துவதை இலக்காகக்கொண்டவையாக அமைந்திருக்கின்றனவே தவிர, அவை அச்சட்டத்தின் விளைவாக இடம்பெறும் மீறல்களையும் வன்முறைகளையும் முடிவிற்குக்கொண்டுவருவதாக அமையவில்லை.

உரியவாறு வரைவிலக்கணப்படுத்தப்படாத குற்றங்களுக்காக நபர்களைக் கைதுசெய்வதற்கும் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தாமல் 18 மாதங்கள்வரை தடுத்துவைப்பதற்குமான வாய்ப்பை பயங்கரவாதத்தடைச்சட்டம் வழங்குகின்றது. இது சந்தேகநபர்களின் அடிப்படை உரிமைகளை நிராகரிக்கும் அதேவேளை, மீறல்களுக்கு உட்படுத்தப்படுவதிலிருந்து அவர்களைப் பாதுகாப்பதற்கான சாத்தியப்பாடுகளையும் இல்லாமல்செய்கின்றது. 

1983 – 2009 ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கும் இடையில் போர் இடம்பெற்றபோது தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்கள் என்றும் அந்த இயக்கத்திற்கு ஆதரவளிப்பவர்கள் என்றும் சந்தேகிக்கப்பட்டவர்களுக்கு எதிராக அரசாங்கம் பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பயன்படுத்தியது. 

கடந்த 2019 ஆம் ஆண்டில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுதினப்பயங்கரவாதத்தாக்குதல்களைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான முஸ்லிம்களைத் தன்னிச்சையாகத் தடுத்துவைப்பதற்காகப் பயங்கரவாதத்தடைச்சட்டம் பயன்படுத்தப்படுகின்றது. 

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தரவுகளின் பிரகாரம் கடந்த மூன்று ஆண்டுகளில் பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் சுமார் 600 இற்கும் அதிகமானவர்கள் கைதுசெய்யப்பட்டிருக்கின்றார்கள். அவர்களில் பெருமளவானோர் வழக்கு விசாரணைகளுக்காக வருடக்கணக்கில் காத்திருப்பதுடன் கிடைக்கப்பெற்ற தரவுகளின்படி அவர்களில் அநேகமானோர் தடுப்புக்காவலில் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றார்கள்.

இளம் கவிஞரான அஹ்னாப் ஜஸீம், பிரபல மனித உரிமைகள் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா உள்ளடங்கலாக மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், சட்டத்தரணிகள், ஊடகவியலாளர்கள், கடந்தகால மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் உள்ளிட்ட தரப்பினரைத் தடுத்துவைப்பதற்கும் அவர்கள்மீது அடக்குமுறைகளைப் பிரயோகிப்பதற்கும் ராஜபக்ஷ அரசாங்கம் பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பயன்படுத்துகின்றது. 

காணாமல்போனோரின் குடும்பத்தினர் தாம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கைதுசெய்யப்படலாம் என்று தன்னிடம் கூறியதாக தமிழ் சமூகத்துடன் இணைந்து இயங்கும் செயற்பாட்டாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறானதொரு பின்னணியில் இலங்கை அரசாங்கம் அதன் சர்வதேசக்கடப்பாடுகளை நிறைவேற்றுவதை உறுதிசெய்வதற்கும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அர்த்தமுள்ள நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் அவசியமான அழுத்தங்களை ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகியவை வழங்கவேண்டும் என்று அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments