பயங்கரவாதிகளாக கருத முடியாது: மலேசிய சட்டமா அதிபர் அதிரடி!

You are currently viewing பயங்கரவாதிகளாக கருத முடியாது: மலேசிய சட்டமா அதிபர் அதிரடி!

விடுதலைப்புலிகளிற்கு ஆதரவானவர்கள் என குற்றம்சாட்டப்பட்ட 12 பேரிற்கும் எதிரான குற்றச்சாட்டுகளை கைவிடுவதற்கு மலேசிய சட்டமா அதிபர் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

குற்றம்சாட்டப்பட்டவர்களிற்கு எதிரான குற்றச்சாட்டுகளை தொடரவேண்டிய தேவையில்லை என்பதற்கான வலுவான காரணங்கள் உள்ளன என சட்டமாஅதிபர் டன் சிறீ தொமி தோமஸ் தெரிவித்துள்ளார்.

12பேருக்கும் எதிரான 34 குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவர்களிற்கு எதிராக தண்டனை வழங்குவதற்கான யதார்த்தபூர்வமான வாய்ப்புகள் இல்லை எனவும் அவர்தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக அவர்களிற்கு எதிரான நடவடிக்கைகளை உடனடியாக கைவிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.

நபர்களை துதிப்பதும் போற்றுவதும் கொண்டாடுவதும் வழமையான விடயம் என மலேசிய சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.

இசைக்கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள் நடிகர்களை மாத்திரம் மக்கள் போற்றுவதில்லை என தெரிவித்துள்ள மலேசிய சட்டமா அதிபர் வரலாற்று நாயகர்கள்,அரசியல்வாதிகளும் ஆராதிக்கப்படுகின்றனர் என சுட்டிக்காட்டியுள்ளார்.

உலகம் முழுவதிலும் மில்லியன் கணக்கான மக்கள் லெனினையும்,ஸ்டாலினையும், மாஓசேதுங்கையும் சேகுவேராவையும் அவர்களை போன்றவர்களையும் போற்றுகின்றனர் என சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.

அவர்களின் படங்களையோ ஏனைய குறியீடுகளையோ கையடக்கதொலைபேசியிலோ முகநூலிலோ வைத்திருப்பது ஒருவரை பயங்கரவாதியாக மாற்றாது எனவும் சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.

இந்த தலைவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் அரசியல் இலக்குகளை அடைவதற்காக வன்முறைகளை பயன்படுத்தினார்கள் என்பதற்காக அவர்களின் தீவிர ஆதரவாளரை பயங்கரவாதியாகவோ அல்லது பயங்கரவாத செயலில் ஈடுபட முனைந்தவர் என்றோ கருத முடியாது எனவும் மலேசிய சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகளின் தலைவரினதும் இலங்கையின் உள்நாட்டுபோரின் போது கொல்லப்பட்ட பயங்கரவாத அமைப்பின் தலைவர்களின் படங்களையும்தங்கள் முகநூலிலும் வைத்திருந்தனர் என குற்றம்சாட்டப்பட்ட 12 பேருக்கும் இது பொதுவான விடயம் எனவும் அவர்தெரிவித்துள்ளார்.

இதனை கிரிமினல் குற்றமாக கருதினால் அது சட்டத்தினை அவமதிக்கும் விடயமாக காணப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பகிர்ந்துகொள்ள