பாதுகாப்பு படைகளின் அச்சுறுத்தல் தொடர்கிறது!

You are currently viewing பாதுகாப்பு படைகளின் அச்சுறுத்தல் தொடர்கிறது!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் இடம்பெறும் தருவாயில் கூட அரசாங்கத்தின் அச்சுறுத்தல்கள், அடக்குமுறைகள் எல்லையில்லாமல் தொடருகின்றன என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உப தலைவர் என்.நகுலேஸ் தெரிவித்தார்.

பயங்கரவாதத் தடுப்புப் பிரிவில் இருந்து தொலைபேசி அழைப்பினூடாக அச்சுறுத்தல் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “பயங்கரவாதத் தடுப்ப்பு பிரிவில் இருந்து கதைப்பதாக ஒரு தொலைபேசி அழைப்பு நேற்று முன்தினம் பிற்பகல் 02.40 மணியளவில் வந்தது. எங்கள் ஜனநாயகப் பேராளிகள் கட்சி தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கட்சியின் தலைவர், செயலாளரின் விவரங்களைத் தருமாறும் கேட்கப்பட்டது.

“அப்போது நான் அழைப்பெடுத்தவர் தொடர்பில் கேட்கையில், அதை சொல்ல வேண்டிய அவசியமில்லை என உரத்த தொனியில் கூறப்பட்டது. அத்துடன், எங்கள் கட்சியின் தலைவர், செயலாளரின் தொடர்பிலக்கங்களை தருமாறு கூறப்பட்டது.

“தொலைபேசி உரையாடலின் பண்பினை அவர் காட்டாவிட்டலும் எங்கள் கட்சிக்கும், எமக்கும் உரித்தான பண்பின் அடிப்படையில் எங்கள் மடியில் எவ்வித கனமும் இல்லாத காரணத்தால் கட்சியின் தலைவர், செயலாளரின் தொடர்பிலக்கங்களைத் தருவதாகத் தெரிவித்தேன்.

“அதன் பிற்பாடு அவர்களின் பெயர், விலாசம், தேசிய அடையாள அட்டை விவரம் என்பன கேட்கப்பட்டன. அதற்கு அவைகளெல்லாம் என்னிடம் இல்லை தொலைபேசி இலக்கங்கள் தரப்பட்டுள்ளன. அவற்றின் ஊடாகத் தொடர்புகொண்டு அவர்களிடமே பெற்றுக் கொள்ளுங்கள் என்று தெரிவித்தேன்.

“அதன் பிற்பாடு மிகவும் எச்சரிக்கையானதும், அச்சறுத்தும் விதமானதுமான வார்த்தைப் பிரயோகங்கள் அந்தத் தொலைபேசியினூடாக வந்தது. உங்களை நாங்கள் பார்த்துக் கொள்ள வேண்டிய இடத்தில் பார்த்துக் கொள்வோம். அழைக்க வேண்டிய இடத்தில் உங்களை அழைத்தால் தான் சரி என்றவாறெல்லாம் மிரட்டல்கள் இடம்பெற்றன.

இவ்விடயம் தொடர்பில் எங்கள் கட்சியின் தலைமைகளுடன் கலந்தாலோசித்துள்ளோம். இது தொடர்பில் பொலிஸ் முறைப்பாடு மேற்கொள்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. தொலைபேசி அழைப்பெடுத்தால் எவ்வாறு கதைப்பதென்ற அடிப்படை பண்பு தெரியாமல் கூட பயங்கரவாதத் தடுப்புப் பிரிவில் உத்தியோகத்தர்கள் இருக்கின்றார்களா? இவ்வழைப்பானது பயங்கரவாதத் தடுப்புப் பிரிவில் இருந்துதான் மேற்கொள்ளப்பட்டதா? என்ற சந்தேகங்களும் எழுந்துள்ளன.

நாங்கள் போராளிகளாக இருந்து தற்போது ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து 10 வருடங்களைக் கடந்துள்ள நிலையிலும் அரசாங்கத்தினாலும், அரச பாதுகாப்பு படைகளினாலும் அச்சுறுத்தும் செயற்பாடுகள் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன.

“கடந்த வருடம் பேஸ்புக் விடயமொன்றை பூதாகாரமாக்கி, பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் ஊடாக எமது கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கைது செய்யப்பட்டு, அண்மையில் தான் விடுவிக்கப்பட்டார். அது மட்டுமல்லாது பயங்கரவாதத் தடப்புப் பிரிவு, குற்றத் தடுப்புப் பிரிவு போன்றவற்றிலும் நாங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டோம். எத்தனை அச்சறுத்தல்களை சந்தித்த போதும் அவை குறைந்தபாடில்லை.

“ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் இடம்பெறும் தருவாயில் கூட இங்கை அரசின் அச்சுறுத்தல்கள், அடக்குமுறைகள் எல்லையில்லாமல் தொடருகின்றன.

“முன்பெல்லாம் கடிதங்கள் கொடுக்கப்பட்டு விசாரணைக்கு அழைக்கப்படுவோம். ஆனால், தற்போது தொலைபேசியில் எடுத்து அச்சுறுத்தி தகவல்கள் பெறுமளவிற்கு ஜனநாயகம் மலிந்து விட்டது” என்றார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments