பாராளுமன்றத்தை கலைத்து மக்கள் தீர்மானத்துக்கு இடமளிக்க வேண்டும்!

You are currently viewing பாராளுமன்றத்தை கலைத்து மக்கள் தீர்மானத்துக்கு இடமளிக்க வேண்டும்!

மக்கள் ஆணையில் ஜனாதிபதி, பிரதமராக இருந்தவர்கள் பதவி விலகிய பின்னர் இந்த பாராளுமன்றத்தில் மக்களின் விருப்பம் பிரதிபலிக்கப்படுவதில்லை அதனால் பாராளுமன்றத்தை கலைத்து மக்கள் தீர்மானத்துக்கு இடமளிக்க வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை இடம்பெற்ற நிலையியற் கட்டளை திருத்தம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், நிலையியற் கட்டளை திருத்தங்கள் தொடர்பான விடயங்களில் அதனை நடைமுறை ரீதியில் திருத்த வேண்டும். பாராளுமன்ற குழுக்கள், பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழுக்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையானவர்கள இருக்க வேண்டும்.

அத்துடன் பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பில் கட்சித் தலைவர்கள் கூட்டத்திலேயே தீர்மானிக்கப்படுகின்றது. ஒரு வருடமாக நான் அந்தக் கூட்டங்களில் நிராகரிக்கப்பட்டேன். எங்கள் கட்சி சார்பில் இரண்டு உறுப்பினர்கள் உள்ளனர். ஆனால் எங்களுக்கு அந்தக் குழுவில் இடமளிக்கப்பட்டிருக்கவில்லை.

அத்துடன் நிதி குழுக்கள் மற்றும் சட்டவாக்கம் தொடர்பான குழுக்களில் நாங்கள் அங்கம் வகிக்க வேண்டும். பாராளுமன்றத்தை பலப்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டையே நாங்கள் கொண்டுள்ளோம்.

இதில் குழு முறைமைகள் பலப்படுத்த வேண்டியது மிகவும் முக்கியமானது. இந்தக் குழுக்களின் ஊடாகவே முக்கியமான வேலைகளை செயற்படுத்த முடியுமாக இருக்கும்.

அத்துடன் நேர ஒதுக்கீட்டு விடயத்திலும் எமக்கு அநீதி ஏற்படுகின்றது. நான் கட்சி தலைவர். அதன்படி பேசுவதற்கு நேரம் வழங்கப்பட வேண்டும். குறைந்தளவு நேரமவாவது வழங்க வேண்டும். எங்களின் கட்சிகள் போன்ற சிறிய கட்சிகள் மதிய நேரத்தின் பின்னர் பேசும் போது 12 நிமிடங்களாவது வழங்க வேண்டும்.

மேலும் அரசியலமைப்பு ரீதியில் பாராளுமன்றம் முக்கியத்துவம் வாய்ந்த இடமாக உள்ளது. ஆரசியலமைப்பு ரீதியில் எந்தவித தடைகளும் இருக்கக் கூடாது.

முன்னை பிரதமரும், ஜனாதிபதியும் அமைச்சரவையும் பதவி விலகிய பின்னர் இந்த சபை மக்களின் விருப்பத்தை பிரதிபலிக்கவில்லை என்பதனை கூறிக்கொள்கின்றேன். எவ்வாறாயினும் இந்த பாராளுமன்றம் கலைக்கப்பட வேண்டும். இப்போதும் மக்களின் அந்த விருப்பம் நிராகரிக்கப்படுகின்றது.

அத்துடன் குருந்தூர் மலை என்பது தமிழ் மக்கள் வழிபாட்டில் ஈடுபடும் ஒரு புராதண இடமாகும். தொல்பொருள் திணைக்களத்திற்கு பொறுப்பான அமைச்சராக இருந்த விதுர விக்கிரமநாயக்க அங்கு அடிக்கல்லொன்றை நாட்டியிருந்தார். அந்த இடத்தை பௌத்த விகாரையாக மாற்றுவதற்கு முயற்சித்துள்ளனர்.

அந்த இடத்தை அழித்துவிட்டு அவ்வாறு விகாரையாக மாற்ற முடியுமா? அதற்கு யார் அனுமதி கொடுத்தது. குறித்த விடயத்தில் நீதிமன்றத்தில் இடைக்கால தடையுத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தொல்பொருள் திணைக்களம் ஒரு இனவாத திணைக்களமாக காணப்படுகின்றது. தொழிற்படும் விதமும் அப்படிதான் உள்ளது. பௌத்த மதகுருவும் நீதிமன்ற உத்தரவையும் மீறியுள்ளார். அங்கு தொடர்ச்சியாக இனவாத நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன என்றார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments