பிரதான கேந்திர நிலையங்களில் சீன முதலீடுகள்! எச்சரிக்கும் நேசநாடுகளின் (NATO) தலைவர்!!

You are currently viewing பிரதான கேந்திர நிலையங்களில் சீன முதலீடுகள்! எச்சரிக்கும் நேசநாடுகளின் (NATO) தலைவர்!!

பிரதானம் வாய்ந்த கேந்திர நிலையங்களான, துறைமுகங்கள், விமான நிலையங்கள் மற்றும் தொலைத்தொடர்பு நிலையங்கள் மீதான சீனாவின் பொருளாதார முதலீடுகள் கவலை கொள்ள வைப்பதாக, நேசநாடுகளின் (NATO) கூட்டமைப்பின் தலைவர் “Jens Stoltenberg” தெரிவித்துள்ளார்.

முன்னெப்போதும் இல்லாதவாறு மிகத்துரித கதியில் சீனாவின் இந்த முதலீடுகள் அதிகரித்துள்ளமையானது, நேச நாடுகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையுமெனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நேசநாடுகள், தங்களின் ஆளுமையின் கீழிருக்கும் பிரதான கேந்திர நிலையங்களாக விமான நிலையங்கள், துறைமுகங்கள், உணவு, மருந்து மற்றும் எரிபொருள் வழங்கலுக்கான மையப்பகுதிகள் மற்றும் “5G” அலைக்கற்றை உள்ளிட்ட அனைத்து தொலைத்தொடர்பு பிரதான நிலையங்கள் என்பவற்றின் மீதான அவதானிப்பையும், பாதுகாப்பையும் இறுக்கமாக்க வேண்டுமெனவும் “Jens Stoltenberg” மேலும் அறிவுறுத்தியுள்ளார்.

உலகளாவிய ரீதியில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் துரிதமான பொருளாதார முதலீடுகளை மேற்கொள்வதன் மூலம், அவ்விடங்களை தனது ஆளுமைக்குக்கீழ் சீனா கொண்டுவரும் பட்சத்தில், நேசநாடுகளின் இராணுவக்கட்டமைப்புக்கள், பாதுகாப்பு போன்றவை கேள்விக்குள்ளாகிவிடும் என்பதோடு, சீனாவிலிருந்தும், சீனாவுக்கு வெளியிலிருந்தும் நேசநாடுகள் மீது பல்வேறு விதங்களிலான தாக்குதல்களையும் சீனா நடத்தக்கூடிய வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கப்படுகிறது.

ஐரோப்பாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான இணையவலை தொடர்புகளை இணைக்கும் கடலுக்கடியிலான பாரிய தொலைத்தொடர்பு கம்பிகளும் பாதுகாக்கப்பட வேண்டுமென தெரிவிக்கப்படும் அதேவேளை, அத்திலாந்திக் கடலடியில் போடப்பட்டிருக்கும் இவ்வாறான பாரிய தொலைத்தொடர்பு கம்பிகளை, ரஷ்ய நீமூழ்கி கப்பல்கள் வேண்டுமென்றே சேதமாக்கிவிடும் ஆபத்து இருப்பதாக முன்னதாக சுட்டிக்காட்டப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த கடலடி இணைப்புக்கள் சேதமாக்கப்படும் படச்சத்தில் ஐரோப்பாவுக்கான இணையவலை இணைப்பு முற்றாக துண்டிக்கப்படும் ஆபத்து உள்ளது.

மேற்படி கடலடியில் போடப்பட்டுள்ள இணைப்பு கம்பிகளில் பெரும்பாலானவை தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமானவை என்பதால், இவை கடலடியில் எங்கெங்கு உள்ளன என்பது போன்ற விபரங்களை யாரும் எளிதில் பெற்றுவிடக்கூடிய நிலையும் இருப்பதாகவும் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.

பிரதான கேந்திர நிலையங்களில் சீன முதலீடுகள்! எச்சரிக்கும் நேசநாடுகளின் (NATO) தலைவர்!! 1
நேசநாடுகளின் கூட்டமைப்பின் (NATO) தலைவர் “Jens Stoltenberg”

நோர்வேயின் நாடாளுமன்றத்தின் இணையவலைத்தொடர்புகள் ரஷ்யாவால் ஊடறுக்கப்பட்ட விடயத்தையும், 03.11.2020 அன்று நடைபெறவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலின் வாக்களிப்பு முடிவுகளை, இணையவழி ஊடறுப்பு மூலம் மாற்றியமைப்பதற்கு ரஷ்யாவும், ஈரானும் முயற்சிகளை மேற்கொள்கின்றன என்பதை அமெரிக்க உளவுத்துறை சென்ற வாரம் சுட்டிக்காட்டியதையும் குறிப்பிட்டுள்ள “Jens Stoltenberg”, நேசநாடுகள் இவ்விடயங்களை தொடர்பில் மிகவும் அவதானமாக இருக்கவேண்டுமெனவும் எச்சரித்துள்ளார்.

பகிர்ந்துகொள்ள