புதிய ஆண்டில் முதல் ஏவுகணை சோதனை? அதிரடியை ஆரம்பித்தது வட கொரியா!

You are currently viewing புதிய ஆண்டில் முதல் ஏவுகணை சோதனை? அதிரடியை ஆரம்பித்தது வட கொரியா!

ஏவுகணை என நம்பப்படும் ஆயுத சோதனையை வட கொரியா நேற்று நடத்தியுள்ளதாக தென் கொரியாவின் கூட்டுப்படைத் தலைமையகம் (JCS) தெரிவித்துள்ளது.

இது ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையாக (ballistic missile) இருக்கலாம் என தென் கொரியா கூறியுள்ளது. எனினும் இது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

வடகொரியாவின் அணு ஆயுத சோதனைகள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனைகளுக்கு ஐ.நா. தடை விதித்துள்ளது.

இந்நிலையில் வடகொரியாவின் ஏவுகணை சோதனை உறுதிப்படுத்தப்பட்டால் அந்நாடு முன்னெடுத்த முதல் ஆயுத சோதனையாக இது அமையும்.

வட கொரியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆயுத சோதனை குறித்து தென் கொரியா மற்றும் அமெரிக்க உளவுத்துறை இணைந்து கூட்டாக ஆராய்ந்து வருவதாக தென் கொரியாவின் கூட்டுப்படைத் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரிய தீபகற்பத்தில் அதிகரித்து வரும் ஸ்திரமற்ற நிலை காரணமாக வட கொரியா தனது பாதுகாப்பை உறுதிப்படுத்தும் செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுக்கும் என கடந்த வாரம் இடம்பெற்ற ஆண்டிறுதி நிகழ்வில் அந்நாட்டுத் தலைவர் கிம் ஜோங் உன் கருத்து வெளியிட்ட சில நாட்களின் பின்னர் புதிய ஆயுத சோதனை இடம்பெற்றுள்ளது.

வட கொரியா 2022 இல் பொருளாதாரம் மற்றும் உணவு உற்பத்தி குறித்தும் அதிக கவனம் செலுத்தும் எனவும் தனது ஆண்டிறுதி உரையில் கிம் ஜோங் உன் குறிப்பிட்டார்.

இதேவேளை, வட கொரியாவின் புதிய ஆயுத சோதனை மிகவும் கவலைக்குரியது என ஜப்பான் பிரதமர் பூமியோ கிஷிடா தெரிவித்தார். 2021 முதல் வட கொரியா மீண்டும் மீண்டும் ஏவுகணை சோதனைகளை அதிகரித்துள்ளதாகவும் அவா் சுட்டிக்காட்டினார்.

2021 ஆம் ஆண்டில் வட கொரியா புதிய ஹைப்பர்சோனிக் ஏவுகணை பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் நீண்ட தூர கப்பல் ஏவுகணை சோதனைகளை நடத்தியதாக அந்நாட்டு அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

ஏனைய ஏவுகணைகளை விட பாலிஸ்டிக் ஏவுகணைகள் மிகவும் அச்சுறுத்தலானவையாகக் கருதப்படுகின்றன. ஏனெனில் அவை அதிக எடையைச் சுமந்தவாறு மின்னல் வேகத்தில் சென்று நீண்ட தூரத்தில் உள்ள இலக்குகளை துல்லியமாகத் தாக்க வல்லவையாகும்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் தனது எல்லைகளை இரண்டு வருடங்களாக வட கொரியா மூடியுள்ள நிலையில் அந்நாடு பாரிய பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகிறது. எனினும் நெருக்கடிகளுக்கு மத்தியிலும் ஆயுத சோதனைகளை அந்நாடு தீவிரப்படுத்தியுள்ளது.

ஆண்டு இறுதியில் நடைபெற்ற கூட்டத்தில் நாடு பெரும் வாழ்வா சாவா போராட்டத்தை எதிர்கொள்கிறது என்று கூறிய வட கொரிய தலைவர் கிம் ஜோங் உன் , பொருளாதாரத்தை வலுவாக்குவதும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதும் இந்த ஆண்டின் இலக்குகளாக இருப்பதாகக் கூறினார்.

இதற்கிடையே வடகொரியாவில் உணவுப் பற்றாக்குறை காரணமாக குழந்தைகள் மற்றும் முதியவர்கள் பட்டினியால் உயிரிழக்கும் அபாயம் உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை அதிகாரிகள் முன்னதாக எச்சரித்திருந்தனர்.

வட கொரியா தனது அணு ஆயுதங்களைக் கைவிடுமாறு அமெரிக்கா அழைப்பு விடுத்து வருகிறது. ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாகத்துடனான பியோங்யாங்கின் உறவு தொடர்ந்தும் பதற்றம் நிறைந்ததாகவே உள்ளது.

எனினும் அமெரிக்காவும் தென் கொரியாவும் பிராந்தியத்தின் பாதுகாப்பு விவகாரத்தில் ஆத்திரமூட்டும் வகையில் இரட்டை நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வருவதாக வடகொரியா பலமுறை குற்றஞ்சாட்டி உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments