புதிய நாடாளுமன்ற வளாகத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்!

You are currently viewing புதிய நாடாளுமன்ற வளாகத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்!

ஆங்கிலேய ஆட்சி சுவடுகளின் அடையாளத்தை மாற்றும் வகையில் டெல்லியில் கடமை பாதை, நேதாஜி சிலை, புதுப்பிக்கப்பட்ட நாடாளுமன்ற வளாகம் ஆகியவற்றை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்துவைத்தார். அப்போது, ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்கிக் கொண்டிருப்பதாக பெருமிதத்துடன் கூறினார்.

கடந்த 2014-ம் ஆண்டில் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு பதவியேற்ற பிறகு, ஆங்கிலேய ஆட்சி சுவடுகளின் அடையாளத்தை மாற்ற முடிவு செய்யப்பட்டது. இதன்படி, பிரதமர் இல்லம் அமைந்துள்ள ரேஸ் கோர்ஸ் சாலை, லோக் கல்யாண் சாலை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. குடியரசு தின விழாவின் பாசறை திரும்பும் அணிவகுப்பில் ஆங்கிலேயர்களின் பாடல் நீக்கப்பட்டு, இந்திய பாடல் சேர்க்கப்பட்டது. ஆங்கிலேயர் காலத்தில் வடிவமைக்கப்பட்ட இந்திய கடற்படையின் கொடி மாற்றி அமைக்கப்பட்டது.

அதேபோல ஆங்கிலேயர் கால சுவடுகளை நீக்கும் வகையில் டெல்லியில் புதிய நாடாளுமன்றம் கட்ட முடிவு செய்யப்பட்டது. புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு கடந்த 2020 டிசம்பர் 10-ம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். 64,500 சதுர மீட்டர் பரப்பளவில், 4 மாடிகளுடன் முக்கோண வடிவில் புதிய நாடாளுமன்றம் கட்டப்படுகிறது. பிரதமர் இல்லம், குடியரசு துணைத் தலைவர் இல்லம், மத்திய செயலகம், மத்திய கருத்தரங்கு மையம், தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம், 51 அமைச்சகங்களின் அலுவலகங்கள் உள்ளிட்டவை நாடாளுமன்ற வளாகத்தில் கட்டப்படுகின்றன.

இதில் முதல்கட்டமாக இந்தியா கேட் முதல் விஜய் சவுக் வரையிலான 101 ஏக்கர் பரப்பளவிலான நாடாளுமன்ற வளாகம், ரூ.487 கோடி செலவில் புதுப்பொலிவு பெற்றுள்ளது. நடைபாதைகள், புல்வெளிகள், விற்பனை அங்காடிகள், 900 மின் விளக்குகள், 422 கிரானைட் இருக்கைகள், சுரங்க பாதைகள்,300 சிசிடிவி கேமராக்கள் என உலகத்தரத்துக்கு இணையாக நாடாளுமன்ற வளாகம் மாற்றப்பட்டிருக்கிறது. 1,117கார்கள், 35 பேருந்துகளை நிறுத்தும் வகையில் 2 இடங்களில் பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் ஒருபகுதியாக 3 கி.மீ. தொலைவு கொண்ட ராஜ பாதை புனரமைக்கப்பட்டது. ஆங்கிலேயர் காலத்தில் ‘கிங்ஸ் வே’ என்று பெயர் சூட்டப்பட்ட இந்த பாதை, இந்தியில் ‘ராஜ பாதை’ என்று அழைக்கப்பட்டது. இதை ‘கர்த்தவ்ய பாத்’ (கடமை பாதை) என மத்திய அரசு அண்மையில் மாற்றியது.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இந்தியா கேட் பகுதியில் நிறுவப்பட்ட 5-ம் ஜார்ஜின் சிலை, 1968-ம் ஆண்டில் அகற்றப்பட்டது. அங்கு கடந்த ஜனவரியில் 28 அடி உயரத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் ஹாலோகிராம் சிலை நிறுவப்பட்டது. அந்த இடத்தில் தற்போது 28அடி உயரத்தில் நேதாஜியின் பளிங்கு சிலை நிறுவப்பட்டிருக்கிறது. ஸ்தபதி அர்ஜுன் யோகி ராஜ் தலைமையிலான சிற்பிகள் ஒரே கல்லில் சிலையை செதுக்கி உள்ளனர்.

இந்நிலையில், கடமை பாதை, நேதாஜி சிலை, புதுப்பிக்கப்பட்ட நாடாளுமன்ற வளாகம் (சென்ட்ரல் விஸ்டா) ஆகியவற்றை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்தார்.

நேதாஜி சிலையை நேற்றிரவு 7 மணிக்கு பிரதமர் திறந்துவைத்தார். பின்னர் நாடாளுமன்ற வளாக கட்டுமான பணியில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார். நாடாளுமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி கூடத்தையும் பார்வையிட்டார்.

இதைத் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்ட ‘கடமை பாதை’யை திறந்துவைத்தார். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:

கடந்த காலத்தை தாண்டி, ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். டெல்லி ராஜபாதை, இப்போது கடமை பாதையாக மாறியிருக்கிறது. ராஜபாதை என்பது அடிமைத் தனத்தின் சின்னமாக இருந்தது. அந்த பெயர் அழிக்கப்பட்டு புதிய வரலாறு படைக்கப்பட்டிருக்கிறது.

புதுப்பிக்கப்பட்ட நாடாளுமன்ற வளாக கட்டுமானப் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள், அடுத்த ஆண்டு நடைபெறும் குடியரசு தின விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்பார்கள்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பாதையை பின்பற்றி இருந்தால் இந்தியா பல்வேறு சாதனைகளை படைத்திருக்கும். ஆனால், நேதாஜியின் கொள்கைகள் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டன. பாஜக அரசு நேதாஜியின் கொள்கை, கனவுகளை நிறைவேற்றி வருகிறது. அவரது பாதையை பின்பற்றி கடந்த 8 ஆண்டுகளில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

ஆங்கிலேயர் கால சின்னங்கள், சுவடுகள் மட்டும் மாற்றப்படவில்லை. அவர்களின் கொள்கைகளும் மாற்றப்பட்டு வருகின்றன. ஆங்கிலேயர் காலத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான பழமையான சட்டங்கள் நீக்கப்பட்டு வருகின்றன. பிரிட்டிஷ் கால பட்ஜெட் நேரம், தேதி மாற்றப்பட்டுள்ளது. அந்நிய மொழியை படிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்து மக்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்திய இளம் தலைமுறையினரின் வாழ்க்கையை கருத்தில்கொண்டு புதிய கல்விக் கொள்கை அமல் செய்யப்பட்டுள்ளது.

பல்வேறு துறைகளில் இந்தியா சாதனை படைத்து வருகிறது. சர்வதேச அரங்கில் போக்குவரத்து, டிஜிட்டல் துறையில் நமது நாடு முன்னணியில் உள்ளது. சமூக, பொருளாதார ரீதியில் மக்களின் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments