புதுக்குடியிருப்புச் சந்திப் படுகொலை நாள்!

You are currently viewing புதுக்குடியிருப்புச் சந்திப் படுகொலை நாள்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் முல்லைத்தீவிலிருந்து ஏறக்குறைய இருபது கி.மீ. தூரத்தில் புதுக்குடியிருப்புச் சந்தி அமைந்துள்ளது. இச்சந்தியில் ஒட்டுசுட்டான், முள்ளியவளை, முல்லைத்தீவு, பரந்தன் சந்திகள் சந்திக்கின்றன. புதுக்குடியிருப்பு ஒரு நகரப்பகுதியாகும்.

புதுக்குடியிருப்புப் பிரதேசத்தில் 1980களின் பின்னர் நாட்டின் பல பகுதிகளிலுமிருந்து இடம்பெயர்ந்த மக்கள் வாழ்ந்து வந்தார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் முல்லைநகர், மணலாறு, கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுகேணி, தென்னமரவடி போன்ற கிராமங்களிலிருந்து இராணுவ நடவடிக்கைகள் மற்றும் சிங்களக் குடியேற்றங்கள் காரணமாக இடம் பெயர்ந்தவர்கள்.

1991ஆம் ஆண்டில் ஆயிரத்து ஐந்நூறிற்கும் மேற்பட்ட இடம்பெயர்ந்த மக்கள் புதுக்குடியிருப்புக்கு அருகிலுள்ள சுப்பிரமணிய வித்தியாசாலையில் இருந்தனர்.

1991.01.30 அன்று மாலை 5.30மணியளவில் விமானப்படையின் இரண்டு பொம்பர் குண்டு வீச்சு விமானங்கள் மூன்று தடவைகள் புதுக்குடியிருப்புச் சந்திப் பகுதியில் குண்டு வீசித்தாக்கின.

குண்டுகளில் பெரும்பாலானவை சந்திப் பகுதியிலும், அதனை அண்டிய பகுதிகளிலும் வீழ்ந்து வெடித்தன.

குண்டுவீச்சினால் சந்தியெங்கும் ஒரே புகைமண்டலம். குண்டுவீச்சு நடந்துமுடிந்த அதேசமயம் அப்பகுதிக்கு விரைந்த மக்களும், மனிதநேய அமைப்புக்களும் இணைந்து ஐம்பதிற்கும் மேற்பட்ட காயப்பட்ட பொதுமக்களை புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்கு அனுப்பினர். இறந்த இருபது பேரினது உடல்கள் மீட்கப்பட்டன.

எங்கும் ஒரே அழுகுரல்கள் இரவாகிக் கொண்டிருந்தமையால் இறந்தவர்களை உடனடியாக மீட்கமுடியவில்லை.

காயமடைந்தவர்களில் ஆபத்தான நிலையிலிருந்தவர்கள் அன்றிரவே யாழ்ப்பாண வைத்தியசாலைக்கு அனுபப்பப்டட்னர். அவ்வாறு அனுப்பப்பட்டவர்களில் மூவர் கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபகரமாக உயிரிழந்தார்கள்.

அடுத்தநாள் காலை மீண்டும் மக்களும், மனிதநேய அமைப்புக்களும் தாக்குதல் இடம்பெற்ற இடத்தில் தேடுதல் மேற்கொண்டபோது, மேலும் ஐந்து பேரினது இறந்த உடலக் ள் மீட்கப்பட்டன.

இந்த தாக்குதலால் மொத்தம் இருபத்தெட்டுப் பொதுமக்கள் உயிரிழந்தும், ஐம்பதிற்கும் மேலானோர் காயமடைந்தும் இருந்தனர்.

விமானப் படையினரது பொதுமக்கள் மீதான தாக்குதலால் புதுக்குடியிருப்பு நகர்ப்பகுதி ஒரு மாதத்திற்கும் மேலாக சோகமயமாகவே காணப்பட்டது.

இறந்தவர்களில் இடம்பெயர்ந்து அடைக்கலம் தேடிவந்த எட்டுப் பொதுமக்களும் அடங்குவர். இத்தாக்குதலில் உயிர்காக்கப் காப்பகழிக்குள் பாய்ந்த நிறைமாதக் கர்ப்பிணிப் பெண்ணின் பிள்ளை பிறந்ததிலிருந்து நரம்பு பாதிக்கப்பட்டவராக நடக்க முடியாதவராகத் தற்போதும் இருக்கின்றார்.

திருமலையிலிருந்து இடம்பெயர்ந்து வசித்து வந்த வி.சித்திராதேவி தெரிவிக்கையில்…

திருமலை சொந்த இடம். இடம்பெயர்வு காரணமாக புதுக்குடியிருப்பு கிராமக்கோடு முகாமில் வசித்து வந்தோம். 1991-01-30 அன்று மாலை 5.30 மணியளவில் வந்த விமானபப்டை பொம்பர் விமானங்கள் பல குண்டுகளைப் போட்டன. இதன்போது நகர்ப்பகுதியியும் சந்தையும் சில கடைகளும் நாசமாகின.

எங்கும் ஒரே புகை மண்டலம். நான் எமது ஊரைச் சேர்ந்த அசோக் என்பரைத் தேடிச் சென்றபோது அவர் நடத்தி வந்த சைக்கிள் கடையில் அவர் பிணமாகக் கிடக்கக் கண்டேன். இதில் அதிகமானோர் இடம்பெயர்ந்து பாதிக்கப்பட்டவர்களாவார். இச்சம்பவத்தினால் அதிர்ச்சி அடைந்த எனது மகள் இன்று வரையும் வாய் பேச முடியாதுள்ளார்.

பகிர்ந்துகொள்ள