பூகோள அரசியல் நகர்வால் இலங்கைக்கு ஆபத்து!

You are currently viewing பூகோள அரசியல் நகர்வால் இலங்கைக்கு ஆபத்து!

பூகோள அரசியல் நகர்வில் வல்லரசு நாடுகள் இலங்கையை கைவிட்டுச் செல்லும் நிலை உருவாகினால் அத்துடன் நாட்டின் கதை முடிந்துவிடும் என்கிறார் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (Gajendrakumar Ponnambalam).

நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான ஐந்தாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது மேலும் உரையாற்றிய அவர்,

“திட்டமிட்ட வகையில் வடக்கின் இனப் பரம்பலை மாற்றியமைக்கும் சூழ்ச்சியை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. இதனை நாம் சுட்டிக்காட்டுகின்ற வேளையில் நாம் இனவாதிகள் என அடையாளப்படுத்தப்பட்டு வருகின்றோம்.

ஐக்கிய இலங்கை என்ற கதைகளை இன்று கதைப்பதை நாம் பார்க்கின்றோம். சுதந்திரத்திற்கு பின்னர் ஒவ்வொரு அரசாங்கமும் ஆட்சிக்கு வந்து நாட்டை வீழ்ச்சியின் பாதையிலேயே கொண்டு சென்றுள்ளனர்.

சுதந்திரத்திற்கு பின்னர் ஆட்சிக்கு வந்த சகல அரசாங்கமும் உள்நாட்டு இனத்தை தமது எதிரிகள் என்று அடையாளப்படுத்தி, வடக்கு கிழக்கு இந்த நாடு இல்லை என்ற உணர்வுடன், அவர்களை அழித்து ஒழிக்க வேண்டும் என்ற கொள்கையில் ஆட்சியை நடத்தியதன் விளைவே இன்று நாடு வீழ்ச்சி கண்டுள்ளது.

அதற்காக ஒதுக்கிய நிதி, இராணுவத்தை பலப்படுத்த எடுத்த நடவடிக்கை மற்றும் சர்வதேசத்திடம் கடன் பெற்று, சிங்கள பெளத்த நாடாக இதனை அடையாளப்படுத்த எடுத்த நகர்வுமே இந்த நெருக்கடி நிலைமைக்கு காரணம். மாறாக அனைத்திற்கும் கொவிட் வைரஸ் காரணம் என கூற முடியாது.

யுத்தம் முடிவுக்கு வந்து 12 ஆண்டுகள் முடிந்துள்ளது, இந்தக் காலத்தில் அரசாங்கம் கண்ட பலன் என்ன, உங்களுக்கு என்ன கிடைத்தது, விடுதலைப்புலிகளை அழித்ததில் உங்களுக்கு கிடைத்தது என்ன? மாறி மாறி ஆட்சி அமைத்தும் ஒவ்வொரு ஆண்டும் வீழ்ச்சியின் பக்கமே சென்றுகொண்டுள்ளீர்கள்.

உங்களின் கடந்த காலத்தை சிந்திக்காது போனால், இனியும் இது ஐக்கிய இலங்கை அல்ல, ஒற்றையாட்சி என்பதை சிந்தித்துக்கொண்டுள்ள நிலையில் நாடு பூச்சியமாகவே மாறும்.

இன்று புலம்பெயர் தமிழ் அமைப்புகள் இலங்கையில் முதலீடுகளை செய்ய தயாராகவே உள்ளனர். அதனை சிந்தித்து சரியான மாற்று சிந்தனை உருவாகவில்லை என்றால், இலங்கையாக முன்னோக்கி செல்ல முடியாது.

தமிழர்களை அழித்தீர்கள், இன்று முஸ்லிம்கள் இலக்காகியுள்ளனர். அடுத்ததாக உங்களின் சொந்த இனமே பலியாகும்.

74 ஆண்டுகால இலங்கையில் இன்று சிங்கள மக்களே நாட்டை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது. இவற்றை எண்ணி வெட்கப்பட வேண்டும். ஒற்றையாட்சிக் கொள்கையில் உங்களின் சிந்தனை இருக்கின்றமையே இந்த அழிவுக்கு காரணம்” என என அவர் காட்டமாகக் கூறினார்.   

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments