பேர்ன் மாநிலம்கடுமையான நடவடிக்கையினை அறிவித்துள்ளது!

You are currently viewing பேர்ன் மாநிலம்கடுமையான நடவடிக்கையினை அறிவித்துள்ளது!

22.10.2020 சுவிசின் சுகாதார அமைச்சர் திரு. அலான் பெர்சே ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் சுவிஸ் அரசு தற்போது எடுக்கும்முடிவுகள் அரசியல் சார்ந்தவை அல்ல, அவை பொருளாதாரம் சார்ந்தவையும்அல்ல, மனித வாழ்வின் நலவாழ்வு (சுகாதரம்) தொடர்புடையது என்று தெரிவித்திருந்தார். மேலும் அவர் தெரிவிக்கையில் கடந்த சில கிழமைகளுக்கு முன்னர்கூட சுவிற்சர்லாந்து நோய்த் தடுப்புச் செயலில் முன்னுதாரணமாக இருந்து வந்தது. நோய்த் தொற்றின் புதிய தொற்றுத் தொகைகளும் கட்டுக்குள் இருப்பதாக அமைந்திருந்தது. ஆனால் இன்று நாம் ஐரோப்பாவின் பெரும்பாலானநாடுகளுடன் ஒப்பிடுகையில் மிகுந்த நோய்த் தொற்றுக்கு உட்பட்ட நிரலில் உள்ளோம். ஆகவே இப்போது அறிவித்திருக்கும்நடவடிக்கையின் பலனை கணக்கில் கொண்டு 28. 10. 2020 சுவிஸ் அரசின் புதிய அறிவிப்பு வரும் எனத் தெரிவித்திருந்தார்.

இந் நிலையில்பேர்ன் மாநில அரசு 23.10.2020 வெள்ளிக்கிழமை 16.30 மணிக்கு மாநில அரசு மகுடநுண்யிரி (கொறோனா) பெருந்தொற்றினை கட்டுப்படுத்துவதற்கு தமது கடுமையான நடவடிக்கையினைஅறிவித்துள்ளது.

அதன்படி மாநில அரசின் அடிப்படைத் தேவைக்கு அப்பாற்பட்ட பொது நிலையங்கள் மூடப்படுகின்றன. நிகழ்வுகள் பொதுவோ அல்லது தனிப்பட்டோ 15 விருந்தினர்களுக்கு உட்பட்டு மட்டுமே நடைபெறலாம். பொது இடத்தில் அசையும்விற்பனை சாவடிகள் மற்றும் வியாபாரக் கண்காட்சிகள் மூடப்படுகின்றன. விருந்தோம்பல் துறை முழுநேரம் திறந்திருக்கலாகாது. பொதுவெளியில், மரங்களுக்குகீழேயும் முகவுறை அணியவேண்டும்.

வழிபாடு

வழிபாட்டு இடங்கள் திறந்திருக்கலாம். ஆனால் இங்கும் 15 மக்களுக்குமேலாக ஒரே நேரத்தில் ஒன்றுகூடத்தடையாகும். கோவில் திறந்திருப்பினும் மக்கள் சுழற்சி முறையில் உரிய காப்பமைவு ஒழுகிஇடைவெளிபேணி சுழற்சி முறையில் வழிபடலாம்.

இவை அனைத்தும் வெள்ளிக்கிழமை நள்ளிரவு 00.00 மணிமுதல் அமுலுக்கு வருகின்றது.

பொதுமுடக்கம்

மதுவிடுதிகள், நடனவிடுதிகள், அருங்காட்சியகங்கள், வாசிப்புநிலையங்கள், ஆவணக்காப்பகங்கள், திரையரங்குகள் இசைக்கச்சேரி சபைகள், நாடகநிலையங்கள், சூதுவிளையாட்டு விடுதிகள், விளையாட்டு உள்ளரங்குகள், களியாட்ட விடுதிகள், விளையாட்டுப் மற்றும் உடற் பயிற்சிக்கூடங்கள், நீச்சல் தடாகங்கள், அதுபோல், நலவாழ்வு நடுவங்கள் மூடப்படுகின்றன. தங்குவிடுதியின் ஒருபகுதியாக நலவாழ்வு நிலையம் அமைந்திருந்தால் அது அந்த விடுதியின் விருந்தினர்கள் மட்டும் பங்கெடுக்க அனுமதிக்கப்படும்.

அதுபோல் 15 நபர்களுக்கு மேற்பட்டு நிகழ்வுகள் அமையக்கூடாது. இது தனிப்பட்ட குடும்பஅல்லது நட்பு நிகழ்வுகளுக்கும் பொருந்தும். இது நிறுவனங்களின் நிகழ்விற்கும் பொருந்தும், நத்தார் விருந்து அல்லது நின்ற நிலையில் சிற்றுண்டி உண்பதற்கும் இவ்விதி பொருந்தும்.

முடக்கவிலக்கு

இறுதிச்சடங்கு நிகழ்வு மட்டும் 15 மேற்பட்ட வருகையாளர்களுடன் நடைபெறலாம்.

15 மேற்பட்டு நடைபெறக்கூடிய நிகழ்வாக ஊராட்சி மன்றத்தின் பொதுக்கூட்டம், ஏனைய பாராளுமன்ற மற்றும்பாராளுமன்றக்குழுக்கூட்டங்கள்உரிய காப்பமைவுடன் நடைபெறலாம் என பேர்ன் மாநிலஅரசு அறிவித்துள்ளது.

விற்பனைக் கண்காட்சி மற்றும் வியாபாரக் கண்காட்சி என்பன தடைசெய்யப்பட்டுள்ளது. அனைத்துச் சந்தைகளில் நேரடியாக நுகர்வதற்கு பொருட்கள் விற்கத் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

விருந்தினர்கள் கட்டுப்பாடும் இரவு ஊரடங்குக் கட்டளையும்

அனைத்து வகை உணவகங்களில் ஒரே நேரத்தில், இடத்தின்அளவிற்கு ஏற்ப ஆகக்கூடியது 100 விருந்தினர்கள்மட்டுமே உள்நுழையலாம்.
ஒரே குழுவாக வருகை அளிக்கும் விருந்தினர்களை ஒரு மேசையில் ஆகக்கூடியதுநால்வர் மட்டுமே இருக்க அனுமதிக்கலாம், அவ்வாறு குழுவாக ஒரு மேசையில் இருப்போர், ஒன்றாக ஒரு வீட்டில் வாழ்பவராகஇருத்தல் வேண்டும்.

மறு அறிவித்தல் வரை இரவு 23.00 மணிமுதல்காலை 06.00 மணி வரை உணவகங்கள் பூட்டப்பட வேண்டும்.

முகவுறை அணிய வேண்டும்

பொது இடங்கள், கட்டடங்களுக்குள் எனப் பொது இடங்கள்எதுவானாலும் உள்ளும் வெளியும், பசுமைத் திடல்களிலும், பொது இடங்களில் கூரைஅமைந்த இடங்களிலும் முகவுறை கட்டாயம் அணியவேண்டும்.

பேர்ன் மாநில அரசதலைவர் மக்களை கட்டங்களுக்குள் நெருக்கிப் பணிகள் செய்யும்போதும் முகவுறை அணிய வேண்டியுள்ளது. நோய்த்தொற்றினைத் தடுக்க அனைவரது ஒத்துழைப்பினையும் மாநில அரசு வேண்டி நிற்பதாகவும்கேட்கப்பட்டுள்ளது. பணியகங்களில் தனி ஒருவர் மட்டும் இருக்கும்போது முகவுறையினைக் கழற்றிக்கொள்ளலாம்.

தடைகள்

அணிவிளையாட்டு, வீரர்கள் நேர் கொள்ளும் விளையாட்டுகள் நடாத்தத் தடை விதிக்கப்படுகின்றது.

விளையாட்டுப் போட்டிகள் மற்றும் விளையாட்டுப் பயிற்சிகள் பொது இடத்தில் குழுவிளையாட்டுமுற்றாகத் தடை செய்யப்படுகின்றது. இதில் மேல்நிலை உதைபந்தாட்ட, கைப்பந்து வளைதடிப்பந்தாட்ட அணிகளுக்கு விலக்கு அளிக்கப்படுகின்றது. ஆனால் பார்வையாளர்களுக்குத் தடை விதிக்கப்படுகின்றது.

இத்தடைகள் யாவும் தற்காலிகமாக 23. 11. 2020 வரைக்கும் பேர்ன் மாநிலத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சி தொடர்பாக பின்னர் அரசு அறிவிக்கும்.

எதிர்வரும் 28. 10. 2020 புதன்கிழமை சுவிஸ் நடுவன் அரசு தமது நோய்த்தடுப்பு நடவடிக்கையினை அறிவிக்க உள்ளது.

தொகுப்பு: சிவமகிழி

பகிர்ந்துகொள்ள