பொது நிதியின் பாவனையில் சீர்கேடுகள்!சர்ச்சைக்குள்ளாகும் நோர்வேயின் சமாதான தூதுவர்!!

You are currently viewing பொது நிதியின் பாவனையில் சீர்கேடுகள்!சர்ச்சைக்குள்ளாகும் நோர்வேயின் சமாதான தூதுவர்!!

உலகநாடுகளின் உள்ளக சிக்கல்களுக்கு சமாதான அனுசரணை வழங்கும் நோர்வேயின் முயற்சிகள் பெரும்பாலும் வெற்றியளிப்பதில்லை என்பதற்கு அப்பால், நோர்வே அரசால் அவ்வப்போது சமாதானத்தூதுவர்களாக நியமிக்கப்படுபவர்கள் விமர்சனங்களுக்கு ஆளாகுவது தொடர்கின்றது.

இலங்கை அரசுக்கும், தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையில் சமாதான அனுசரணைக்காக நியமிக்கப்பட்ட நோர்வேயின் “Erik Solheim”, இலங்கையில் இனப்படுகொலையோடு, தமிழர்களின் நீதிக்கான போராட்டம் மழுங்கடிக்கப்பட்ட பிறகு, திட்டமிட்டபடி தனது சமாதானத்தூதுவர் பொறுப்பை நிறைவு செய்துகொண்டு, பின்னாளில் ஐக்கியநாடுகள் சபையின், உலக சுற்றுச்சூழல் தொடர்பான பொறுப்பொன்றுக்கு சிறப்பு தூதுவராக நியமிக்கப்பட்டிருந்தார்.

குறித்த சிறப்பு தூதுவர் பொறுப்பை அவர் வகித்த காலப்பகுதியில் பொது நிதியை சீரற்ற முறையில் கையாண்டதாக சர்ச்சைகள் “Erik Solheim” மீது எழுப்பப்பட்டமை நினைவிருக்கலாம்.

தற்போது, மத்திய கிழக்குக்கான நோர்வே அரசின் சமாதானத்தூதுவராக செயற்பட்ட “Terje Rød Larsen” அவர்களும், “Erik Solheim” போலவே சர்ச்சைகளுக்கு ஆளாகியுள்ளார். ஒரு காலத்தில் நட்சத்திர மரியாதைகளோடு நோர்வேயின் சிறப்புத்தூதுவராக மத்தியகிழக்கில் வலம் வந்த இவர் மீது, நோர்வேயின் அரச கணக்காய்வுப்பிரிவு விசாரணைகளை தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கியநாடுகள் சபையின் கீழ் இயங்கிவந்த “சர்வதேச சமாதான நிறுவனம்” (International Peace Institute), நோர்வேயிடமிருந்து பெற்றுக்கொண்ட சுமார் 130 மில்லியன் குறோணர்களுக்கும் அதிகமான பணத்தை, “Terje Rød Larsen” கையாண்ட விதம் திருப்திகரமாக இல்லையென நோர்வேயின் அரச கணக்காய்வு பிரிவு கருதுகிறது. தவிரவும், வயதில் குறைந்த சிறுமிகளை பாலியல் அடிமைகளாக வைத்திருந்தாரென குற்றம் சாட்டப்பட்டு, தடுப்புச்சிறையிலேயே தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் அமெரிக்கரான “Jeffrey Epstein” என்பவரிடமிருந்து பெருந்தொகை பணத்தினை கடனாகவும் “Terje Rød Larsen” பெற்றுக்கொண்டுள்ளதாக அறியப்பட்டுள்ளது.

மேற்படி, சிறுமிகளை பாலியல் அடிமைகளாக வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட “Jeffrey Epstein”, அச்சிறுமிகளை தனது நண்பர்களுக்கும் விருந்தாக்கினாரென சொல்லப்பட்ட குற்றச்சாட்டில், நண்பர்கள் பட்டியலில் பிரித்தானிய இளவரசரான “Andrew” பெயரும் அடிபட்டதும், இவ்விடயத்தில் அமெரிக்க விசாரணைகளுக்கு ஒத்துழைக்காமல், பிரித்தானிய இளவரசர் மறுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்தி:

https://news.tamilmurasam.com/அரசமரியாதைகளை-இழக்கும்-ப/

அமெரிக்கரான “Jeffrey Epstein” இடமிருந்து கடன் பெற்றதாக ஒத்துக்கொண்டுள்ள “Terje Rød Larsen”, ஊடகங்களிடம் வாய்திறக்க மறுத்துள்ளதாகவும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இவர்மீதான சந்தேகத்தினை நோர்வேயின் அரச கணக்காய்வுப்பிரிவு வெளியிட்டதன் பின்னணியில், இப்போது, நோர்வே வெளியுறவு அமைச்சகம் “Terje Rød Larsen” இன் சர்வதேசத்தொடர்புகள் குறித்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

1990 களின் ஆரம்பத்தில் மத்தியகிழக்குக்கான சமாதானத்தூதுவராக நியமிக்கப்பட்ட “Terje Rød Larsen” ஆற்றிய பணிகளின் விளைவாக, அப்போதைய பாலஸ்தீனிய இயக்க தலைவர் “Yasser Arafat” மற்றும் அப்போதைய இஸ்ரேலிய பிரதமர் “Yitzhak Rabin” ஆகியோருக்கிடையில் “ஒஸ்லோ ஒப்பந்தம்” என்றழைக்கப்பட்ட சமாதான ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட வழி வகுக்கப்பட்டது.

பொது நிதியின் பாவனையில் சீர்கேடுகள்!சர்ச்சைக்குள்ளாகும் நோர்வேயின் சமாதான தூதுவர்!! 1
இஸ்ரேலிய முன்னாள் பிரதமர் “Shimon Peres”, அமெரிக்க முன்னாள் அதிபர் “Bill Clinton” மற்றும் பலஸ்தீன விடுதலை இயக்கத்தின் முன்னாள் தலைவர் “Yasser Arafat”

1993 ஆம் ஆண்டு, செப்டெம்பர் 13 ஆம் நாள், அமெரிக்க வெள்ளை மாளிகையின் முன்னால், அன்றைய அமெரிக்க அதிபர் “Bill Clinton” முன்னிலையில் அறிவிக்கப்பட்ட இந்த ஒப்பந்தம், சர்வதேச அளவில் நோர்வேக்கு கெளரவத்தை பெற்றுக்கொடுத்திருந்தது. இதன் பின்னதாக, சமாதானத்துக்காக பாடுபடுவதாக தன்னை உலகளாவிய ரீதியில் பிரபல்யப்படுத்தி கொள்வதற்கு இவ்விடயத்தை நோர்வே பலவழிகளிலும் பயன்படுத்திக்கொண்டது.

இச்சமாதான ஒப்பந்தத்தில் ஒத்துக்கொள்ளப்பட்ட விடயங்களை இஸ்ரேலிய அரசு இன்று வரை நிறைவேற்றவில்லையென்பதும், சிறிது காலத்திலேயே சர்ச்சைக்குரிய விதத்தில் பாலஸ்தீனிய விடுதலை இயக்கத்தின் அப்போதைய தலைவர் “Yasser Arafat” மரணமானதும், சமாதான ஒப்பந்தத்தின் அடிப்படையில் பலஸ்தீன பகுதிகளின் அபிவிருத்திக்காக நோர்வே அள்ளிக்கொடுத்த பல மில்லியன் குறோணர்கள் பணத்துடன் “Yasser Arafat” அவர்களின் மனைவி மாயமானதும், ஆக மொத்தத்தில் அந்த சமாதான ஒப்பந்தமும் புளுத்துப்போனதும் தனிக்கதைகள்….

சமாதான தூதுவராக புகழ் பெற்ற “Terje Rød Larsen”, பின்னாளில் நோர்வே அரசில் திட்டமிடல் அமைச்சராக பொறுப்பேற்றிருந்த வேளையில், 1980 ஆம் ஆண்டளவில் அவர் சம்பந்தப்பட்ட மீன்வளத்துறை தொடர்பில் அரசுக்கு அவர் செலுத்தியிருக்க வேண்டிய வருமானவரியை செலுத்தவில்லை என்பது சுட்டிக்காட்டப்பட, அவருக்கு 50.000 குறோணர்கள் அபராதமும் விதிக்கப்பட்டிருந்தது.

பின்னதாக சமாதான தூதுவராகவே தொடர்ந்த “Terje Rød Larsen”, இஸ்ரேலிய பிரதமராக இருந்த “Shimon Peres” அவர்களுக்கு 1994 இல் “நோபல்” சமாதானப்பரிசு கிடைப்பதற்கு பின்னணியிலிருந்து காரியங்களை ஆற்றினார் என்றும், 2002 ஆம் ஆண்டில், “Shimon Peres” அவர்களின் நிதியத்திலிருந்து “Terje Rød Larsen” இற்கும், அவரது மனைவிக்கும் தலா 50.000 அமெரிக்க டொலர்கள் பணம் வழங்கப்பட்டது என்றும் குறிப்பிடப்படுகிறது. இவ்விடயம் வெளிச்சத்துக்கு வந்ததும், “Terje Rød Larsen” இன் மனைவி, தனக்கு வழங்கப்பட்ட பணத்தை திருப்பியளித்ததாகவும், எனினும் “Terje Rød Larsen” பணத்தை திருப்பியளிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட அமெரிக்கரான “Jeffrey Epstein” இடமிருந்து தனிப்பட்ட கடனாக 130.000 அமெரிக்க டொலர்கள் பணத்தை வாங்கிய விடயத்தை கூடுமானவரை மறைக்கவே முயற்சி செய்திருந்த “Terje Rød Larsen”, அதில் வெற்றி பெறவில்லை. இவ்வாறான தனிப்பட்ட கடன்களை பெற்றுக்கொண்ட “Terje Rød Larsen” இன் நடவடிக்கைகள், “உலக சமாதான நிறுவனம்” தொடர்பாக அவரது பொறுப்பு வாய்ந்த பதவியை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

மேற்படி குற்றச்சாட்டுக்களால், அவரது நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ள நிலையில், நோர்வே அரசுக்கும் அனாவசிய சங்கடங்கள் ஏற்பட்டுள்ளன.

மூலம்: https://www.nettavisen.no/nyheter/fredsmegler-i-fritt-fall/3424037407.html

செய்தி மேம்பாடு:

தன்மீதான விமர்சனங்கள் பொதுவெளிக்கு வந்துள்ளதால், உலக சமாதான நிறுவனத்தின் அனைத்து பொறுப்புக்களிலிருந்தும் “Terje Rød Larsen” விலகுவதாக 29.10.2020 அன்று அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள