போராட்டங்களை குழப்பமுனையும் சிறீலங்கா காவல்த்துறை!

You are currently viewing போராட்டங்களை குழப்பமுனையும் சிறீலங்கா காவல்த்துறை!
போராட்டங்களை குழப்பமுனையும் சிறீலங்கா காவல்த்துறை! 1

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை அங்கிருந்து அகற்றுவதற்கும் கைது செய்வதற்கும் மட்டக்களப்பு சிறீலங்கா காவல்த்துறை மேற்கொண்ட முயற்சியினால் அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டது.

சுழற்சி முறையில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் 13வது நாளாக நேற்று மட்டக்களப்பு – மாமாங்கேஸ்வரர் ஆலயத்திற்கு முன்பாக நடைபெற்றது. இந்நிலையில் பிற்பகல் போராட்டம் நடைபெறும் பகுதிக்கு வருகைதந்த பெருமளவு காவல்த்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை கலைந்து செல்லுமாறும் இல்லாவிட்டால் கைது செய்யப்படுவீர்கள் எனவும் மிரட்டியுள்ளனர்.

மட்டக்களப்பு தலைமைய காவல் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் 50க்கும் மேற்பட்ட காவல்த்துறையினர் பஸ் வண்டிகளுடன் போக்குவரத்து காவல்த்துறை என பல தரப்பினர் இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

நீதிமன்ற தடையுத்தரவு கட்டளை உள்ளதன் காரணமாக குறித்த பகுதியில் போராடமுடியாது எனவும் கொரோனா நடைமுறைகளை மீறிய வகையில் போராட்டம் நடைபெறுவதன் காரணமாக பொதுமக்களின் பாதுகாப்பு கருதி குறித்த பகுதியில் போராட்டம் நடாத்தமுடியாது எனவும் அதற்கான நீதிமன்ற தடையுத்தரவு உள்ளதாகவும் மீறி போராட்டம் நடத்தினால் கைது செய்யப்படுவீர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் காட்டிய கடுமையான எதிர்ப்பு காரணமாக காவல்த்துறையினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

நீதிமன்ற தடையுத்தரவு போராட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றன போதிலும் தங்களிடம் எந்த தடையுத்தரவும் காண்பிக்கப்படவில்லையெனவும் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேநேரம் நேற்று மாலை அமைதியான முறையில் முன்னெடுக்கப்படும் போராட்டத்திற்கு பொலிஸார் ஏற்படுத்திவரும் இடையூறுகளுக்கு எதிராக மட்டக்களப்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தினால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமக்கான நீதியைக்கோரி அமைதியான முறையிலும் சாத்வீகமான முறையில் போராட்டத்தினை முன்னெடுத்துவருவோர் மீது அடாவடித்தனங்களையும் போலியான குற்றச்சாட்டுகளையும் பொலிஸார் முன்வைப்பதுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை அச்சுறுத்தும் வகையில் செயற்படுவதாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது

பகிர்ந்துகொள்ள