போராட்டத்தில் ஈடுபட்ட காணாமற்போனோரின் உறவுகளை அச்சுறுத்தினார் ஈ.பி.டி.பி கமல்

You are currently viewing போராட்டத்தில் ஈடுபட்ட காணாமற்போனோரின் உறவுகளை அச்சுறுத்தினார் ஈ.பி.டி.பி கமல்

ஈ.பி.டி.பி ஒட்டுக்குழுத் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவைக் கைது செய்யுமாறு வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட காணாமற்போனோரின் உறவினர்களை, ஈ.பி.டி.பி உறுப்பினர் கமலேந்திரன் அச்சுறுத்தினார் என மேற்படி உறவினர்கள் தெரிவித்துள்ளனர். 

வடக்கு – கிழக்கில் நூற்றுக்கணக்கான இளைஞர், யுவதிகள் கடத்தப்பட்டுக் காணாமல்போகச் செய்யப்பட்டமைக்கும் நூற்றுக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டமைக்கும் ஈ.பி.டி.பி ஒட்டுக்குழவே காரணம் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. 

ஆனால், தற்போது கோட்டயாப அரசில் அமைச்சுப்பதவி பெற்றுக்கொண்ட டக்ளஸ் தேவானந்தா அதைவைத்து காணாமற்போனோரின் உறவுகளைத் தமது காலடியில் விழவைப்பதற்கு முயன்றார். இதற்கு காணாமற்போனோர் சங்கத்தின் பிரதிநிதிகள் கடும் எதிர்ப்பு வெளியிட்டனர். 

இந்நிலையில், எங்கிருந்தோ வாகனங்களில் அழைத்துவரப்பட்ட ஒரு தொகுதி மக்களைத் தமது அலுவலகத்தில் வைத்து சந்தித்த டக்ளஸ் தேவானந்தா, காணாமற்போனோரின் உறவினர்கள் தமது அலுவலகம் தேடி வந்தனர் என அறிக்கை விட்டார். 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காணாமற்போனோரின் உறவினர்கள் நேற்று (02) ஈ.பி.டி.பி யின் யாழ்ப்பாணம் ஸ்ரீதர் தியேட்டருக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். 

போராட்டம் இடம்பெற்றுக்கொண்டிருந்தபோது அங்கு சென்ற ஈ.பி.டி.பி உறுப்பினர் கமல் எனப்படும் கமலேந்திரன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தமது தொலைபேசிக் கமராவில் புகைப்படம் எடுத்து அவர்களை அச்சுறுத்தினார். 

ஏற்கனவே, நெடுந்தீவு பிரதேச சபைத் தவிசாளர் றெக்சியனை சுட்டுப்படுகொலை செய்தமைக்காக பொலிஸாரால் கைது செய்யப்பட்டு ஒரு வருடம் சிறையில் இருந்த கமலேந்திரன் தற்போது மீண்டும் ஈ,பி.டி.பி இல் இணைக்கப்பட்டுள்ளார். 

கொலைகாரர்களை உள்ளடக்கிய ஈ.பி.டி.பி தமிழர் தாயகத்தில் மீண்டும் அராஜகத்தை முன்னெடுக்கத் தொடங்கியிருக்கின்றது. இதனால் மக்கள் அச்சத்துடன் வாழவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு மக்கள் முடிவுகட்டுவார்கள் என நேற்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். 

பகிர்ந்துகொள்ள