மக்களுக்கான கட்சி களத்திலே உண்டு!!

You are currently viewing மக்களுக்கான கட்சி களத்திலே உண்டு!!

தமிழ்த் தேசிய அரசியலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொண்டு செல்லும் பாதை தவறானது என நான் நம்புகிறேன். கட்சிக்குள் நிலவும் சூழலால் அக்கட்சிக்குள்ளிருந்து மாற்றம் வருவதற்கான வாய்ப்புக்கள் இல்லை.

ஆகவே தமிழ்த் தேசிய அரசியலை சரியான பாதையில் வைத்திருக்கவும் தமிழ்த் தேசிய அரசியலை மக்கள் அரசியலாக மாற்றவும் தமிழ்த் தேசிய அரசியல் பன்மைப்படுத்தப்பட வேண்டும். மாற்றுக் கட்சி ஒன்றிருந்தால் கூட்டமைப்பு பொறுப்புக் கூற தலைப்படும் என்று நான் நம்புகிறேன்.

மாற்றுக் கட்சி தமிழ் தேசிய அரசியலுக்குள் இருந்து வர வேண்டும். அதற்கான வாய்ப்பு இத்தேர்தலில் உருவாகாவிடில் எமது பிரதிநிதிகள் எமக்கு பதில் சொல்ல மாட்டார்கள். நினைத்ததை செய்வார்கள்.

சிங்களத் தரப்போடு – அது யாராக இருந்தாலும் – பேசி தீர்வு காணலாம் – அவர்கள் மனம் உவந்து தருவார்கள் – என்று நம்புவது வீண் வேலை. எங்களுடைய குறைந்த பட்ச கோரிக்கை அவர்களுக்கு உச்ச பட்சத்திலும் கூடுதலாக தெரியும். ஆகவே நாம் எமது பார்வையில் எமக்கு எந்த தீர்வு பொருத்தமானது தேவையானது என்பதை சொல்லும் தரப்பை தெரிவு செய்ய வேண்டும்.

அதிகாரப் பகிர்வு (devolution) என்பதோடு எனக்கு சட்ட, அரசியல், கருத்தியல் ரீதியாக உடன்பாடு இல்லை. ஏனென்றால் அது பகிர்ந்து தருபவரின் விருப்பில் தங்கியிருப்பதால். எமக்கு சுயநிர்ணயம் இருக்கும் காரணத்தினாலேயே சுயாட்சிக்கு நாம் உரித்துடையவர்கள்.

அதிகாரத்தை பகிர்ந்து கொள்ள இணக்கம் தெரிவிப்பதால் வரும் சுயாட்சி நிலைக்காது. சுயாட்சி எமது உரிமை என்ற பார்வையில் அணுகப்பட வேண்டியது. அதை வேறொருவர் எமக்கு பகிர்ந்து அளிக்கும் அதிகாரம் என்ற பார்வையில் அணுகினால் அது ஒரு பரிசு. எமது உரிமையல்ல. பரிசை தந்தவன் திருப்பி எடுக்கலாம். சுயாட்சி எமக்குரிய பரிசல்ல, எமது உரிமை என்பது தான் சுயநிர்ணயத்தின் சாரம். சமமான தேசங்களுக்கிடையே செய்யப்படும் உடன்பாட்டின் (social contract among co-equal nations) பின்னணியில் ஒரு புது அரசு உருவாக வேண்டும்.

அதன் அரசியலமைப்பு வடிவம் சமஷ்டியாக இருக்கலாம். அதிலும் கூடுதலனாதாக இருக்கலாம். ஆனால் அதிகாரப் பகிர்வு மூலமான சமஷ்டி எமக்கு நிலையான உண்மையான தீர்வாக இருக்க முடியாது. இந்த தீர்வு எப்ப வரும்? வருமா வராதா? என்று எனக்கு தெரியாது. ஆனால் இது தான் எமக்கு தீர்வு தரும் என்று மட்டும் தெரியும்.

சர்வதேச விசாரணை வருமா வராதா என்று மூக்கு சாத்திரம் பார்க்க எனக்கு தெரியாது. ஆனால் அதன் ஊடாக தான் ஏதேனும் சிறு வடிவில் தானும் நீதி கிடைக்கும் என நான் நம்புகிறேன். என்றோ எமது மக்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லாமல் நாங்கள் வேலை செய்வது இயலாத காரியம். அதைக் கோருவது ஒரு அழுத்தம் பிரயோகிக்கும் கருவி என்று நம்புகிறேன். இயல்பு வாழ்க்கை ஏற்பட வேண்டுமென்றால் அந்தக் கருவி எங்களுக்கு தேவை.

மக்கள் அரசியல் வேண்டும். அதற்கு கட்சிகள் தாண்டி அரசியல் வெளி வேண்டும். சந்தர்ப்பங்களை சரியாக பாவிக்க வேண்டும். மேற்கண்ட சிந்தனையை பிரதிபலிக்கும் கட்சி களத்தில் உண்டு. அவர்களுக்கு தான் எனது வாக்கு.

  • குருபரன் குமாரவடிவேல் –
பகிர்ந்துகொள்ள