மட்டக்களப்பின் பல பகுதிகளில் வெள்ளப் பெருக்கு!

  • Post author:
You are currently viewing மட்டக்களப்பின் பல பகுதிகளில் வெள்ளப் பெருக்கு!

மாதுறுஒயா ஆறு பெருக்கெடுத்ததையடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பிரதேச செயலகப் பிரிவுகளிலுள்ள பல கிராமங்களை பெரு வெள்ளம் சூழ்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

வெள்ளத்தில் சிக்குண்ட கிராம மக்களைப் பாதுகாப்பதிலும் அவர்களை ஆபத்திலிருந்து மீட்டெடுப்பதிலும் அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளதாக மாவட்டச் செயலாளர் மாணிக்கம் உதயகுமார் தெரிவித்தார்.

தனது அவசர வேண்டுகோளுக்கிணங்க கடற்படையினர், விமானப்படையினர், இராணுவத்தினர் ஆகியோரின் ஒத்துழைப்புடன் விசேட ஹெலிக்கொப்டர், இயந்திரப் படகுகள் மூலம் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.

மட்டக்களப்பின் பல பகுதிகளில் வெள்ளப் பெருக்கு! 1

முன்னதாக இடர் முகாமைத்துவ திணைக்களத்தின் வேண்டுகோளுக்கு அமைய 212 பெல் என்ற இராணுவத்துக்குச் சொந்தமான ஹெலிகொப்டர் மூலம் வெள்ளத்தில் சிக்குண்ட கிராம மக்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

மீட்பு நடவடிக்கையின்போது ஏறாவூர்ப் பற்று பிரதேச செயலகப்பிரிவிலுள்ள கித்துள் கிராமத்தில் 30 பேரும் மாவடியோடை பகுதியில் 33 பேரும் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

ஏறாவூர்ப்பற்றுப் பிரிவிலுள்ள வடிச்சல் கிராமம், தாமரைமடு, மயிலவெட்டுவான், ஈரக்குளம் ஆகிய கிராமங்கள் வெள்ளப் பெருக்கில் மூழ்கியுள்ளனர்.

மேலும் மாதுறு ஒயா ஆறு பெருக்கெடுத்ததில் முறுக்கந்தீவு, பிரம்படித்தீவு, சாராவெளி, பொண்டுகள்சேனை, புலாக்காடு, அக்குறாணை, முறுத்தானை, கல்லடிவெட்டை, கானாந்தனை, வடமுனை, ஊத்துச்சேனை, கொக்குத்தங்கியமடு, சோதயன்கட்டு, வண்ணாத்தியாறு, காத்தான்டவாடி, ஆட்டுகாலை, கித்துள் உட்பட பல கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க அதிபர் உதயகுமார் தெரிவித்தார்.

இதேவேளை, மட்டக்களப்பின் கல்குடா பகுதியில் பல வீதிகள், வயல் நிலங்கள், குடியிருப்புக்கள், மேய்ச்சல் தரைகள் என்பன நீரில் மூழ்கியுள்ளதால் மக்கள் பல பிரச்சனைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.

குறிப்பாக கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் வாகனேரி, பொத்தானை, புணாணை கிராம மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு கிராமத்தில் இருந்து வெளி இடங்களுக்கு பல சிரமங்களுக்கு மத்தியில் வெள்ள நீரை கடந்து செல்கின்றனர்.

பகிர்ந்துகொள்ள