யாழில் கடற்தொழிலாளர்களின் வலையை வெட்டிய இந்திய இழுவைப் படகுகள் !

You are currently viewing யாழில் கடற்தொழிலாளர்களின் வலையை வெட்டிய இந்திய இழுவைப் படகுகள் !

தொழிலுக்கு சென்ற சுழிபுரம் – காட்டுப்புலம் கடற்தொழிலாளர்களின் ஏழரை இலட்சம் ரூபா தொழில் முதல், நேற்று முன்தினம் (28.02.2023) இந்திய இழுவைப் படகுகளால் நாசம் செய்யப்பட்டுள்ளதாக கடற்தொழிலாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

சதாசிவம் சிறிகாந்தன் என்பவருடைய வலை முதலே இவ்வாறு நாசம் செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பாதிக்கப்பட்ட கடற்தொழிலாளர் கருத்து தெரிவிக்கையில்,“நாங்கள் நேற்றிரவு கடலுக்கு சென்றோம். வலையை கடலில் விட்டுவிட்டு இருந்தவேளை சுமார் 300 இந்தியன் இழுவைப் படகுகள் எங்களது கடல் எல்லைக்குள் வெளிச்சம் பாய்ச்சாது உள்நுழைந்தது.

இதன்போது எனது ஏழரை இலட்சம் ரூபா பெறுமதியான வலைகளை இந்தியன் இழுவைப் படகு வெட்டி நாசம் செய்துவிட்டு சென்றுள்ளது.

தற்போது மீன்பிடி பருவகாலம். நேற்றையதினம் வெட்டிய வலைகளை கடன் பெற்றே வாங்கினேன். அந்த வலைகளைக் கொண்டு இரண்டு தடவைகள் மீன் பிடித்த நிலையில் மூன்றாவது தடவை மீன் பிடிப்பதற்காக சென்றபோதே நேற்றிரவு இவ்வாறு நேர்ந்துள்ளது.

ஆகையால் வாங்கிய கடனை எவ்வாறு மீள செலுத்துவது என தெரியாத நிலையில் உள்ளேன்.

இந்திய இழுவைப் படகுகளால் கடற்தொழிலாளர்களாகிய நாங்கள் உயிரை விடவேண்டிய சூழ்நிலைக்குள் செல்ல வேண்டி உள்ளது.

அரசாங்கமும் கடற்றொழில் அமைச்சரும் எங்களது நிலையை கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கைகளை விரைவில் எடுப்பதோடு எமக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.”என கூறியுள்ளார்.

தொடர்ந்து அப்பகுதி கடற்றொழில் சங்கத்தின் தலைவர் கருத்து தெரிவிக்கையில்,“இதுவரை எமது சங்க கடற்தொழிலாளர்களின் 50 இலட்சத்துக்கும் மேலான தொழில் முதல்கள் இந்திய இழுவைப் படகுகளால் நாசம் செய்யப்பட்டுள்ளன.

இந்திய கடற்தொழிலாளர்களை, இலங்கை கடற்பரப்பிற்குள் உள் நுழைந்து மீன்பிடிக்க அனுமதி வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அனுமதி வழங்க முதலே அவர்கள் இப்படி செய்தால், அனுமதி வழங்கினால் என்ன செய்வார்கள் என சிந்திக்க வேண்டும். எனவே கடற்தொழிலாளர்களது நிலையை கருத்தில் கொண்டு கடற்றொழில் அமைச்சரும் அரசாங்கமும் செயற்பட வேண்டும்.”என கூறியுள்ளார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments