ருவாண்டா இனப்படுகொலையாளிகளுக்கு உதவிய பிரான்ஸ்!

You are currently viewing ருவாண்டா இனப்படுகொலையாளிகளுக்கு உதவிய பிரான்ஸ்!

ஆபிரிக்க நாடான ரூவாண்டாவில் 1994 ஆம் ஆண்டுப்பகுதியில் நடத்தப்பட்ட திட்டமிட்ட இனப்படுகொலையை நிகழ்த்தியவர்களுக்கு பிரான்ஸ் ஆதரவளித்துள்ளமை அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.

ரூவாண்டாவின் தேசிய இனமான “துத்ஸி” இன மக்களின் மீது, அன்றைய ருவாண்டா ஆட்சிப்பொறுப்பை கையில் வைத்திருந்த “ஹூட்டு” இனத்தவர்கள் மேற்கொண்ட திட்டமிட்ட இனப்படுகொலைக்கு காரணமான பிரதான நபர்கள் மீது எவ்விதமான சட்ட நடவடிக்கைகளையும் எடுக்க முடியாதபடி, அன்றைய பிரான்ஸ் அதிபர் “François Mitterrand” கொலையாளிகளுக்கு பக்கபலமாக இருந்தமை அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.

இனப்படுகொலைக்கு ஆளாகி அல்லலுற்ற “துத்ஸி” இன மக்களின் நலன்களை கவனிக்கவென, 1994 இல் பிரான்சின் சமாதானப்படைகள் ரூவாண்டாவுக்கு அனுப்பப்பட்டிருந்த நிலையில், “துத்ஸி” இனமக்கள் மீது படுகொலைகளை புரிந்த “ஹூட்டு” இனத்தின் அரச பிரமுகர்களுக்கும் பிரெஞ்சுப்படையினர் தமது முகாம்களில் வைத்திருந்து பாதுகாப்பு வழங்கியதோடு, இனப்படுகொலைக்கு சூத்திரதாரிகளாக இருந்தவர்கள் ரூவாண்டாவை விட்டு தப்பிச்செல்லவும் உதவினார்கள் என்ற குற்றச்சாட்டு பல்லாண்டுகளாக சொல்லப்பட்டு வந்த நிலையில், இப்போது அக்குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அக்காலப்பகுதியில் பிரான்சின் விசேட தூதுவராக ரூவாண்டாவில் தங்கியிருந்த பிரெஞ்சு தூதுவருக்கு பாரிஸில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட இரகசிய அரச ஆவணமொன்றை ஆதாரமாக வைத்தே இக்குற்றச்சாட்டு இப்போது நிரூபணமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து தகவல்களை வெளியிட்டுள்ள “AFP” செய்தி நிறுவனம், ருவாண்டா உள்ளிட்ட பல ஆபிரிக்க நாடுகளை தனது பிடிக்குள் பிரான்ஸ் வைத்திருந்த காலப்பகுதியிலேயே ரூவாண்டாவில் இனப்படுகொலை நடத்தப்பட்டது எனவும், இனப்படுகொலைக்கு பிரதான காரணகர்த்தாக்களில் ஒருவராக இருந்திருக்கக்கூடிய அன்றைய ரூவாண்டா அதிபர் “Yuvanel Hipri” யுடன் கொண்டிருந்த நெருங்கிய நட்பு காரணமாகவே, பிரான்ஸ் அதிபர் “François Mitterrand”, இனப்படுகொலைக்கு காரணமானவர்களை தனது படைகளைக்கொண்டு காப்பாற்றியிருந்தார் எனவும் தெரிவித்துள்ளது.

ருவாண்டா இனப்படுகொலையாளிகளுக்கு உதவிய பிரான்ஸ்! 1
மறைந்த முன்னாள் பிரெஞ்சு அதிபர் “François Mitterrand”

ரூவாண்டாவில் 1994 ஆம் ஆண்டில், “துத்ஸி” இனமக்கள் மீது, “ஹூட்டு” இனத்தவர்கள் நடத்திய இனப்படுகொலைகளின் போது, 3 மாத காலத்தில் சுமார் 8 இலட்சம் வரையிலான “துத்ஸி” இனமக்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட விடயத்தில் பிரான்சுக்கும் பங்கு இருக்கிறதென்ற குற்றச்சாட்டுக்கள் ஏற்கெனவே முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதிபர் “François Mitterrand” மீது சுமத்தப்பட்டிருந்த மேற்படி குற்றச்சாட்டு தொடர்பில் ஆராய்வதற்காக, அதிபர் தொடர்பான இரகசிய அரச ஆவணங்களை பார்வையிட அனுமதிக்குமாறு, பிரெஞ்சு வரலாற்று ஆய்வாளரான”François Garner” என்பவர் பிரெஞ்சு நிர்வாகத்திடம் கடந்த 5 ஆண்டுகளாக போராடி வந்ததன் பலனாக, இப்போது குறித்த ஆவணங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

பிரான்சின் அடிப்படை சட்டவிதிகளின்படி, அரசத்தலைவர் ஒருவர் தொடர்பான இரகசிய அரச ஆவணங்கள், அவர் இறந்து 25 வருடங்கள் கழிந்த பின்பே பகிரங்கப்படுத்தப்பட முடியும் என்பது விதியாக இருக்கும் நிலையில், முன்னைய பிரான்ஸ் அதிபர் “François Mitterrand”, 1996 ஆம் ஆண்டில் மறைந்து இப்போது 25 வருடங்கள் ஆகியுள்ள நிலையில், அவர் தொடர்பான மேற்படி ஆவணங்களை அரச அனுமதியோடு பார்வையிட்டுள்ள மேற்படி பிரெஞ்சு வரலாற்று ஆய்வாளர் தெரிவித்துள்ள தகவல்களின் அடிப்படையிலேயே, ரூவாண்டா இனப்படுகொலையாளிகளுக்கு அன்றைய பிரான்ஸ் அதிபர் “François Mitterrand” உதவியுள்ளார் என்பது தெளிவாக்கப்பட்டுள்ளதாக “AFP” செய்தி நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

பகிர்ந்துகொள்ள