வடக்கின் நிலைமைகளும் முன்னாயத்த நடவடிக்கைகளும்!

You are currently viewing வடக்கின் நிலைமைகளும் முன்னாயத்த நடவடிக்கைகளும்!

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கத்தினை தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்கள் மத்தியில் சுகாதார நடைமுறைகளை கண்காணிக்கம் நடவடிக்கையில் படையினரும் ஈடுபட்டுள்ளனர்.

வெளிமாவட்டங்களில் உள்ள ஆடைத்தொழிற்சாலைகளில் பணியாற்றும் பலர் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பலர் காணப்பட்டாலும், அது தொடர்பான விவரங்கள் திரட்டப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், கிராமங்களில் வெளிமாவட்டத்தில் இருந்து பணிமுடித்து வருபவர்கள் தொடர்பில் தெரிவிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்துக்குச் செல்லும் பரந்தன் -புதுக்குடியிருப்பு வீதி, மாங்குளம்-துணுக்காய் வீதி, வெள்ளாங்குளம்-துணுக்காய் வீதி, மாங்குளம்-ஒட்டுசுட்டான் வீதி, நெடுங்கேணி-ஒட்டுசுட்டான், நெடுங்கேணி, முள்ளியவளை, திருகோணமலை-வெலிஓயா வீதிகளில் நிலைகொண்டுள்ள படையினர், முகக்கவசம் சுகாதார விதிமுறைகள் இன்றி வீதியால் பயணிப்பவர்களை திருப்பி அனுப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.

கிளிநொச்சியில் பிசிஆர் முடிவுகள்:

கிளிநொச்சி மாவட்டத்தில், கொரோனா தொற்றுக்குள்ளான ஆடைத் தொழிற்சாலையுடன் தொடர்பில் இருந்தவர்கள், அவர்களின் குடும்பங்கள், புங்குடுதீவு கொரோனா தொற்றுக்குள்ளான யுவதியின்
குடும்பத்துடன் தொடர்புபட்டவர்கள், கம்பஹா மாவட்டத்திலிருந்து பல்கலைகழகம் மற்றும் ஆடைத் தொழிற்சாலைக்கு வந்தவர்கள் என 57 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர்  பரிசோதனைகளில்,
இதுவரை எவருக்கும் தொற்று இல்லை என முடிவுகள்
வெளிவந்துள்ளன.

இருப்பினும் பொது மக்கள் தேவையற்ற வகையில் ஒன்று கூடுவது, பொது போக்குவரத்துகளை பயன்படுத்துவது, வெளிமாவட்டங்களுக்கு சென்று வருவது போன்றவற்றை தவிர்க்குமாறும், அதிகாரிகள் கோரியுள்ளனர்.

முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்ட செயலகங்களில் விசேட கலந்துரையாடல்:

நாட்டில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்  அதிகரித்து வரும் நிலையில், முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில், கொரோனா வைரஸ் தொடர்பிலான விஷேட கலந்துரையாடல் ஒன்று, மாவட்டச் செயலாளர் க.விமலநாதன் தலைமையில் இன்று (08) நடைபெற்றது.

இதன்போது, “முலைத்தீவு மாவட்டத்தில், கொரோனா தொற்றாளர்களுடன் எவரும் நேரடி தொடர்புபட்டவர்களாக இதுவரை இனங்காணப்படவில்லை” என, முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர் தங்கராசா காண்டீபன் தெரிவித்துள்ளார்.

“நேற்று (07) கம்பஹா மாவட்டத்திலிருந்து வருகைதந்தார்கள் என்ற அடிப்படையில் இருவரை தனிமைப்படுத்துயுள்ளோம். அதிலே மலேரியாத் தடுப்புப் பிரிவில் பணியாற்றும் பணியாளர் ஒருவரும், பொலிஸார் ஒருவரையும் நாம் தனிமைப்படுத்தியுள்ளோம்” எனவும் கூறினார்.

இதேவேளை, கலந்துரையாடலில் தனியார் கல்விநிலையங்களை உடனடியாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தீர்மானிக்கப்பட்டு, இதுதொடர்பில் கண்காணிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது

அதேபோன்று, அண்மைய நாள்களாக கடல் மார்க்கமாக இந்திய மீனவர்களின் ரோலர் படகுகள் வருகை அதிகரித்திருப்பதாகவும் அதனை கட்டுப்படுத்துமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து, இது தொடர்பில் கடற்படையினருக்கு உத்தரவிடுவதாக, மாவட்டச் செயலாளர் கூறினார்.

வெளியிடங்களுக்கு கடலுணவுகளை ஏற்றி செல்பவர்கள், கொள்வனவுக்காக இதர தேவைகளுக்காக சென்று வருபவர்கள் மிக அவதானமாக சுகாதார நடைமுறைகளை பின்பற்றி செயற்பட உத்தரவிடுமாறு, துறைசார் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மக்கள் ஒன்றுகூடும் இடங்களை நிகழ்வுகளை முடிந்தளவு  கட்டுப்படுத்தி சுகாதார நடைமுறைகளை பேணி நடப்பதற்கு ஏற்றவகையில் ஆலோசனைகளை வழங்குமாறும் பிரதேச சபைகளின் சந்தையையும் விரிவுபடுத்தி மக்கள் ஒன்றுகூடாதவாறு கடந்த காலங்களை போன்று சந்தை வளாகத்துக்கு வெளியே விஸ்தரிக்குமாறும், ஆலோசனை வழங்கப்பட்டது.

இதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்தில், கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்ட முன்னாயத்த கலந்துரையாடல், இன்றையதினம் (08),  கிளிநொச்சி மாவட்டச் செயலாளர்
ரூபாவதி கேதீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.

இதில், கிளிநொச்சி  மாவட்ட சுகாதார பணிப்பாளர்மற்றும் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி, கிளிநொச்சி மாவட்ட வர்த்தக சங்கத்தினர், கிளிநொச்சி மாவட்ட பிரதேச செயலகங்களின் செயலாளர்கள், பொலிஸ் அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ரூபவதி கேதீஸ்வரன், கிளிநொச்சி மாவட்டத்திலே தற்பொழுது ஏற்பட்டிருப்பதான கொரோனா தொற்று காரணமாக,  97 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனரென்றார்.

மேலும், வடக்கு மாகாண ஆளுநரின் அறிவுறுத்தலுக்கு அமைய மறு அறிவித்தல் வரை அனைத்து
தனியார் கல்வி நிலையங்களையும் தற்காலிகமாக இடைநிறுத்துமாறும், கூறினார்.

குறிப்பாக அவர்கள் மினுவாங்கொடையில் இருக்கின்ற ஆடைத் தொழிற்சாலை பணிபுரிந்து திரும்பிய  தொற்றுக்குள்ளான புங்குடுதீவு பெண்ணுடன் நெருங்கி பழகிய ரீதியிலும் மற்றும் ஆடைதொழிற்சாலையுடன் தொடர்புபட்டவர்கள் என்ற ரீதியிலும், அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அவர்களில்  57 பருக்கான பிசிஆர் பரிசோதனை மேற்கொண்டதில், எவருக்கும் தொற்று இருக்கவில்லை என்றார்.

யாழ்.- புங்குடுதீவு முடக்கம்:

புங்குடுதீவு பகுதியில், 1,212 குடும்பங்களைச் சேர்ந்த 3,945க்கும் மேற்பட்டோர் சுயதனிமைப்படுத்தலுக்குள்ளாக்கப்பட்டுள்ள நிலையில்,  புங்குடுதீவில் இருந்து யாரும் வெளியேறாதவாறும் அப்பிரதேசத்துக்குள் யாரும்  செல்லாதவாறும்  முடக்கப்பட்டுள்ளது

குறித்த பகுதியில் புங்குடுதீவு ஒன்றியம் மற்றும் நயினாதீவு நாகபூசணி அம்மன் கோவில் நிர்வாகம் ஆகியோரால், சமைத்த  உணவுகள் பொதியிடப்பட்டு வழங்கப்படுகின்றது. அத்தோடு சர்வோதய நிறுவனத்தினால் குடிநீர் விநியோகிக்கப்படுகின்றது. 

இதேவேளை நெடுந்தீவு, நயினாதீவு மற்றும் ஏனைய தீவுகளுக்கான படகு  போக்குவரத்து சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டளவில் இடம்பெற்று வருகின்றன.

தீவு பகுதிக்குள் தீவக முகவரி அடையாள அட்டையுடையவர்கள் மட்டும் தீவு பகுதிகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

அத்துடன், இந்நோய் எமது மாவட்டத்தில்; பரவாதிருக்க பயணம் செய்தவர்கள் அச்சமின்றி உங்களின் தகவல்களை வழங்கி ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்வதாக, யாழ் மாவட்டச் செயலாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மன்னாரில் முறைப்பாடுகள்:

“பாடசாலைகள் அனைத்துக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில், மன்னார் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்வி நிலையங்கள் இயங்குவதாக எமக்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ள.

“எனவே, மன்னார் மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து தனியார் கல்வி நிலையங்களும் மறு அறிவித்தல் வரை மூடப்பட வேண்டும், என, மன்னார் மாவட்ட பதில் செயலாளர் எஸ்.குணபாலன் தெரிவித்தார்.

மன்னார் மாவட்ட அரச மற்றும் தனியார் போக்குவரத்து சேவை பிரதி நிதிகளுடன், நேற்று (7) காலை, மன்னார் மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பகிர்ந்துகொள்ள