வவுனியாவில் ஆண்கள் வயல் காவலுக்கு சென்ற போது வீடுகளிற்குள் புகுந்த காவல்துறை – விவசாயிகள் கண்டனம்

You are currently viewing வவுனியாவில் ஆண்கள் வயல் காவலுக்கு சென்ற போது வீடுகளிற்குள் புகுந்த காவல்துறை – விவசாயிகள் கண்டனம்

வவுனியா , செட்டிக்குளம் பகுதியிலுள்ள வாழவைத்தகுளம் கிராம விவசாயிகளுக்கு எதிராக பறயநாளம் குளம் பொலிஸ் நிலைய பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட அநீதியான செயல்பாடுகள் மற்றும் அடக்கு முறைகளுக்கு எதிராக பல்வேறு சிவில் செயற்பாட்டாளர்களும் தங்களது கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

கடந்த 28 ஆம் திகதியன்று மாலை அப்பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு டீசல் வந்திருந்ததுடன், அதனைப் அப்பகுதி விவசாயிகளும் தங்களது  உழவு இயந்திரங்களுக்கு பெற்றுகொண்டுள்ளனர். ‍

அத்துடன் விவசாய  நடவடிக்கைகளுக்கு தேவையான இயந்திரங்களுக்குத் தேவையான டீசலை பற்றுச் சீட்டைப் பெற்று கேன்களில் பெற்றுகொண்டுள்ளனர். 

இந்நிலையில், அன்றைய தினம் இரவு வயல் காவல்களுக்காக ஆண்கள் சென்றிருந்தவேளையில், அதிகாலை வேளையில் சிறீலங்கா காவல்துறையினர், பெண்கள் மாத்திரம் தனித்திருந்த நிலையில் வீடுகளுக்கு புகுந்து கேன்களில் நிரப்பப்பட்டிருந்த டீசலை தேடி அவர்களை மிரட்டி அவர்கள் மீது அடாவடித்தனமாக செயற்பட்டதாகவும், எவரேனும் ஒருவரை 100 லீற்றர் டீசலுடன் கைது செய்வதற்கான அனுமதியை  சிறீலங்கா காவல்துறையினர் கேட்டதனால் அப்பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டதாக அப்பகுதியைச் சேர்ந்த விவசாயியான மொஹமட் சர்ஜான் நேற்று ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார். 

மேலும், இதற்கு பழிவாங்கும் நோக்கில் தமது கிராமத்தைச் சேர்ந்த 100 இற்கும் அதிகமானோரை போலியான குற்றச்சாட்டுக்களை சுமத்தி கைது செய்வதற்கு திட்டம் தீட்டி வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இவ்விடயம் குறித்து சிவில்  செயற்பாட்டாளரான அருட் தந்தை சக்திவேல் கூறுகையில், 

” பொது மக்களின் வாழ்வை பாதிக்கின்ற செயற்பாட்டில்  பொலிஸார் ஈடுபடுவதை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். இதுபோன்ற அராஜகமான செயற்பாட்டின் காரணமாகவே நாட்டில் 30 வருட கால யுத்தத்ததை மக்கள் சந்தித்ததுடன், மீண்டும் அதுபோன்ற ஓர் யுத்த நிலைமைக்கு மக்கள் தள்ளப்படும் ஓர் சுழலை இவ்வாறான சம்பவங்கள் தோற்றுவிக்கும்.

பொது மக்களின் சொத்துக்களை பலவந்தமாக எடுப்பதை சிறீலங்கா காவல்துறையினர்  செய்யக்கூடிய காரியமல்ல. இவை பாதாள குழுவைச் சேர்ந்தவர்களே இவ்வாறான காரியங்களை செய்வார்கள். அவர்கள் பொது மக்களின் அடிப்ப‍டை மனித உரிமைகளை மீறியுள்ளனர். 

இவர்களுக்கெதிராக மனித உரிமை  ஆணைக்குழுவிடமும்  தேசிய சிறீலங்கா காவல்துறை ஆணைக்குழுவிடமும் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சிறீலங்கா காவல்துறையினர் அடக்கு முறையானது வாழ்வை பறிக்கின்ற செயல்பாடு மாத்திரமல்ல. தற்கொலைக்கு தள்ளுகின்ற ஓர் செயலும் ஆகும்” என்றார்.

நாட்டில் தற்போது அத்தியாவசிய உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு காண்படுகின்ற சூழ்நிலையில்,  உணவு பொருட்களை உற்பத்தி செய்வதற்காக உழவு இயந்திரங்களையும் மற்றும் விவசாய இயந்திரங்களுக்கான டீசல் பெற்று வைத்திருந்த  விவசாய மக்களின் டீசலை  அராஜகமான முறையில் சிறீலங்கா காவல்துறையினர் பெற முயற்சித்தமை வெறுக்கத்தக்கதும் கண்டிக்கத்தகதுமான  மோசமான செயலாகும். 

நாட்டின் உணவு உற்பத்தியை  அதிகரிப்பதற்கு சிறீலங்கா காவல்துறையினர் விவசாயிகளுக்கு உதவ முன்வரவேண்டுமே தவிர, இவ்வாறு அவர்களுக்கெதிராக செயற்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என சட்டத்தரணி சுவஸ்திக்கா அருலிங்கம் தெரிவித்தார். 

இந்த சம்பவத்தைக் கண்டித்து இலங்கை ஆசிரிய சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், சிவில் செயற்பாட்டாளர் தனூஷ் பத்திரண உள்ளிட்ட சிவில் செயற்பாட்டாளர்கள் பலரும்  தங்களது  சிறீலங்கா காவல்துறையினருக்கு எதிராக தங்களது கண்டத்தை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments