வாக்கெடுப்பு குறித்து கூட்டமைப்பும் நாங்களும் ஒரே நிலைப்பாட்டில்!

You are currently viewing வாக்கெடுப்பு குறித்து கூட்டமைப்பும் நாங்களும் ஒரே நிலைப்பாட்டில்!

புதிய ஜனாதிபதியை தெரிவு செய்யும் வாக்கெடுப்பில் நடுநிலை வகிப்பதென்ற நிலைப்பாட்டில் தற்போதுவரை தமிழ் தேசிய கூட்டமைப்பும் தமிழ் மக்கள் கூட்டணியும் உள்ளன. ஜனாதிபதி வேட்பாளர்கள் எம்முடன் கலந்துரையாடி எமது கோரிக்கைகளுக்கு இணக்கம் தெரிவிக்கும் பட்சத்தில் தமது நிலைப்பாடு மாறலாம் என சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

பாராளுமன்ற அமர்வு நிறைவடைந்த பின்னர் பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் வைத்து சனிக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

புதிய ஜனாதிபதியை தெரிவு செய்யும் வாக்கெடுப்பு எதிர்வரும் 20 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் எந்த ஜனாதிபதி வேட்பாளரையும் ஆதரிக்காது நடுநிலை வகிப்பதென்ற நிலைப்பாட்டிலே இதுவரை தமிழ் மக்கள் தேசிய கூட்டணி கட்சியை சேர்ந்த நானும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி.க்களும் உள்ளோம். கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கட்சி தொடர்பில் எமக்கு எதுவும் தெரியாது.

ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் எந்த வேட்பாளர்களும் தமக்கு ஆதரவளிக்குமாறு எம்மிடம் இதுவரையில் கோரவில்லை. அப்படி அவர்கள் கோரும்பட்சத்தில்,எமக்கான உறுதி மொழிகளை வழங்கும் பட்சத்தில் சில வேளைகளில் எமது நிலைப்பாடு மாறலாம். அவ்வாறு இல்லாமல் வாக்களிப்பதில் எந்த பிரயோசனமும் இல்லை.

ரணில் விக்கிரமசிங்க சிரேஷ்ட அரசியல் தலைவர். மிகவும் அனுபவம் உள்ளவர். அதில் மாற்றுக்கருத்துக்கிடையாது. அவருடன் இணைந்து செயற்படுவதில் எமக்கு பிரச்சினை கிடையாது. அவரது அமைச்சரவையில் இணைந்துகொள்வதற்கு எந்த எண்ணமும் இல்லை. என்றாலும் நான் அவருக்கு மூன்று நிபந்தனைகளை முன்வைத்திருந்தேன். அதாவது, அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும், வடக்கு கிழக்கிலுள்ள தொல்பொருள் திணைக்களத்தின் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்ட மக்களின் காணிகள் உடனடியாக மக்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

வடக்கில் மேலதிகமாக உள்ள இராணுவத்தினர் அகற்றப்பட வேண்டும் என்ற நிபந்தனைகளை அவர் நிறைவேற்ற வேண்டும். இதன்போது அவருடன் இணைந்து செயற்படுவது தொடர்பில் பார்க்கலாம்.

அத்துடன் பாராளுமன்ற பிரதி சபாநாயகரின் தெரிவு இடம்பெற்ற போது ரணில் விக்ரமசிங்க சபையில் என்னுடன் கலந்துரையாடினார். அப்போது பிரதமராகவிருந்த ரணில் விக்கிரமசிங்க, நான் முன்வைத்திருந்த நிபந்தனைகளை படிப்படியாக நிறைவேற்றுவதாக தெரிவித்தார் என்றார்.

விக்னேஸ்வரன் கூட்டமைப்பின் பேச்சாளர் அல்ல!-சாணக்கியன்

ஜனாதிபதி வேட்பாளர்களை ஆதரிக்கும் விடயத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நடு நிலை வகிக்கும் எனக் கூறுவதற்கு விக்கினேஸ்வரன் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பேச்சாளர் அல்ல.இதுதொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்வரும் 19ஆம் திகதி கலந்துரையாட இருக்கின்றது என தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

புதிய ஜனாதிபதி தெரிவு தொடர்பில் இன்னும் இறுதி தீர்மானம் எட்டப்படவில்லை-சம்பந்தன்

புதிய ஜனாதிபதி தெரிவு தொடர்பில் இன்னும் இறுதி தீர்மானம் எட்டப்படவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு மற்றும் மத்திய செயற்குழு என்பன கூடி ஆராய்ந்து தீர்மானம் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார்.

தமிழ் அரசியல்வாதிகளான நாங்கள் இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கு அனைவரும் சேர்ந்து செயற்பட வேண்டும்-சித்தார்த்தன்

தமிழ் அரசியல்வாதிகளான நாங்கள் இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கு அனைவரும் சேர்ந்து செயற்பட வேண்டும் என்று எப்பொழுதும் கூறி வருகின்றோம். ஆனால் அவர்கள் ஜனாதிபதி பதவிக்கும் பிரதமர் பதவிக்கும் போட்டியிட்டுக்கொண்டு இருக்கின்றார்கள். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கூட்டமைப்பு என்ன செய்ய இருக்கின்றது என பலரும் கேள்வியெழுப்புகின்றனர். போட்டியாளர்கள் யார்? என்பதை பார்த்த பின்பே தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரு தீர்மானத்திற்கு வரும். அது என்ன தீர்மானம் என்பதை தற்போது கூற முடியாது. தமிழ் மக்களிற்கு சாதகமான முடிவு ஒன்றினையே நாங்கள் எமது தீர்மானமாக எடுப்போம்.

சிறையில் இருக்க கூடிய அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோர், பயங்கரவாத தடைச்சட்டம் போன்ற விடயங்களை அவர்களிடம் முன்வைப்போம். இவற்றை எல்லாம் யார் எந்த வேட்பாளர் எங்களுக்கு சாதகமாக செயற்படுவார் என்பதை ஆராய்ந்த பின்னரே எமது ஆதரவை வழங்க முடியும்.

இதற்காக ஜனாதிபதி வேட்பாளர் அறிவித்த பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றாக கூடி சரியான முடிவை எடுப்போம்” என தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே தீர்வுக்கு அடிக்கடி நாள் குறித்து அலுத்துப்போன வெள்ளை வேட்டிகள் நல்லிணக்கத்திற்குள் தமிழர்களை விற்றுப்பிழைத்து இப்போது மீண்டும் யாருக்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டில் ஆளுக்காள் அலறிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments