வாரம் ஒன்றுக்கு சுமார் பத்து மில்லியன் மாஸ்க் வகைகளை உள்நாட்டிலேயே தயாரிக்கும்!

You are currently viewing வாரம் ஒன்றுக்கு சுமார் பத்து மில்லியன் மாஸ்க் வகைகளை  உள்நாட்டிலேயே தயாரிக்கும்!

பிரெஞ்சு அதிபர் மக்ரோன் இன்று ‘மாஸ்க்’ தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றுக்கு விஜயம் செய்திருக்கிறார்.

Maine-et-Loire பிராந்தியத்தில் Saint-Barthélémy d’Anjou என்னுமிடத்தில் அமைந்துள்ள தொழிற்சாலைக்கு வருகை தந்த அவர், அங்கு முழுவீச்சில் இரவு பகலாக நடைபெற்றுவரும் ‘மாஸ்க்’ தயாரிப்புப் பணிகளைப் பார்வையிட் டார்.இதன்போது அவர் தொற்றுப் பாதுகாப்பு மேலங்கி அணிந்து காணப்பட்டார். மாஸ்க் மற்றும் தலையை மூட பயன்படுத்தும் charlotte என்பவற்றையும் அணிந்திருந்தார்.

வாரம் ஒன்றுக்கு சுமார் பத்து மில்லியன் மாஸ்க் வகைகளை உள்நாட்டிலேயே தயாரிக்கும்! 1

SME Kolmi-Hopen என்கின்ற இந்த தொழிற்சாலை, நாட்டில் உள்ள நான்கு முக்கிய ‘மாஸ்க்’ தொழிற்சாலைகளில் ஒன்றாகும். நாடு முழுவதும் ‘மாஸ்க்’ வகைகளுக்குப் பெரும் தேவை எழுந்திருப்பதால் அதன் உள்நாட்டு உற்பத்தியை அரசு முடுக்கி விட்டுள்ளது.

அங்கு உரையாற்றிய மக்ரோன், செய்தியாளர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தார்.

பொதுச் சுகாதாரத்துறையின் அவசர தேவைகளை நிறைவேற்ற விசேடமாக 4 பில்லியன் ஈரோ நிதி ஒதுக்கப்படுவதாக அங்கு அவர் அறிவித்தார். மே மாத நடுப்பகுதிக்குள் 15 ஆயிரத்துக்கும் அதிகமான செயற்கைச் சுவாசக் கருவிகளைத் தயாரிக்க நாட்டின் பெரும் தொழிலதுறை நிறுவனங்களின் சம்மேளனம் முன்வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஏப்ரல் மாத இறுதியில் இருந்து வாரம் ஒன்றுக்கு சுமார் பத்து மில்லியன் மாஸ்க் வகைகளை உள்நாட்டிலேயே தயாரிக்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன எனவும் அதிபர் மக்ரோன் அங்கு செய்தியாளர்களிடம் கூறினார்.

கொரோனாவுக்கு எதிரான போரில் மிக முக்கிய ஆயுதமாக இருப்பது ‘மாஸ்க்’ஆகும்.
ஆனால் போரைப் பிரகடனப்படுத்திய அரசு அதற்குத் தேவையான ‘ஆயுதங்களைக்’ கையிருப்பில் வைத்திருக்கத் தவறிவிட்டது என்று மருத்துவ உலகில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

கடந்த ஆட்சிக்காலங்களில் கிடப்பில் போதியளவு சேமித்து வைக்கப்பட்டிருந்த மாஸ்க் வகைகள் அருகிக் குறைந்துவிட்டன. தற்போது நாடு ஒரு தீவிரமான தொற்று நோய்க்கு முகம் கொடுக்கவேண்டிய தருணத்தில் அவை பெரும் தட்டுப்பாடான பொருளாக-கறுப்புச் சந்தையில் விற்கப்படும் பண்டமாக – மாறியிருக்கின்றன.

இந்தப் பற்றாக்குறையால் அரசு மீது மருத்துவ சேவையாளர்கள் பெரும்அதிருப்தி அடைந்திருக்கின்றனர். இதுதான் தருணம் என்று பிரான்ஸின் எதிர்க்கட்சிகள் சிலவும் ‘மாஸ்க்’ விவகாரத்தை மாபெரும் விடயமாக்கி விவாதங்களைத் தொடக்கி யிருக்கின்றன.

ஜரோப்பிய நாடுகளில் சுகாதார ‘மாஸ்க்’ வகைகளுக்குப் பெரும் பற்றாக்குறை ஏற்பட்டமைக்கு சீனாவின் தொழிற் சாலைகளையும் அந்நாட்டின் இறக்குமதி யையும் நம்பிச் செயற்பட்டமையே காரணம் என்று சொல்லப்படுகிறது. இதை நிரூபிக்கும் விதமாக கடந்த சில தினங்களாக சீனாவில் இருந்து விமானங்கள் மூலம் மில்லியன் கணக்கில் மாஸ்க்குகள் தருவிக்கப்பட்டு வருகின்றன.

(நன்றி-குமாரதாஸன்)

பகிர்ந்துகொள்ள