11 மாதங்களில் இணையவலை சூதாட்டத்தால் 25 பேர் உயிரிழப்பு!

You are currently viewing 11 மாதங்களில் இணையவலை சூதாட்டத்தால் 25 பேர் உயிரிழப்பு!

இணையவலை சூதாட்டத்தால் மேலும் ஒருவர் பலியாகியுள்ள நிலையில் இணையவலை சூதாட்ட தடை அவசர சட்டத்தின் நிலை குறித்து தமிழக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இணையவலை சூதாட்ட அரக்கன் அடுத்த உயிரை பலி வாங்கியிருக்கிறான். இந்த உயிரிழப்பையும் சேர்த்து இணையவலை சூதாட்டத்தால் கடந்த 11 மாதங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. இணையவலை சூதாட்ட உயிர்ப்பலிகள் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில் தமிழக முதலமைச்சர் உறுதியளித்தவாறு இணையவலை சூதாட்டத் தடை அவசர சட்டம் பிறப்பிக்கப்படாதது ஏமாற்றமளிக்கிறது.

திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த சாய்நகரைச் சேர்ந்த நரசிம்மராஜ் என்ற 32 வயது இளைஞர் இணையவலை சூதாட்டத்திற்கு அடிமையாகி பல லட்சம் ரூபாயை இழந்ததாகக் கூறப்படுகிறது. ஒருகட்டத்தில் சமாளிக்க முடியாத அளவுக்கு கடன் சுமை அதிகரித்து விட்ட நிலையில், அவரது வீட்டை விற்று கடனை அடைத்துள்ளார். அதன் பிறகும் சூதாட்ட போதையிலிருந்து நரசிம்மராஜ் மீண்டு வராத நிலையில், அவரை மனைவி கண்டித்துள்ளார். அதனால், ஆத்திரமடைந்த நரசிம்மராஜ், அவரது மனைவி சிவரஞ்சனியை கடந்த சில நாட்களுக்கு முன் கொலை செய்து உடலை வீட்டில் பதுக்கி விட்டு தப்பிச் சென்று விட்டார். சிவரஞ்சனியின் கொலை காவல்துறை மூலம் நேற்று தான் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

இணையவலை சூதாட்டத்தால் தற்கொலைகள் மட்டுமே நிகழ்ந்து வந்த நிலையில், இப்போது கொலைகளும் அதிகரித்து விட்டன. தமிழ்நாட்டில் நடைமுறையில் இருந்து வந்த இணையவலை சூதாட்டத் தடைச் சட்டம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 3-ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட பிறகு நிகழும் 25-ஆவது உயிர்ப்பலி சிவரஞ்சனியின் மறைவு ஆகும். இவர்களில் சிவரஞ்சனியையும் சேர்த்து மொத்தம் 5 பேர் எந்த பாவமும் செய்யாமல், இணையவலை சூதாட்டத்திற்கு அடிமையானவர்களால் கொலை செய்யப் பட்டவர்கள் ஆவர். சூதாட்டம் தற்கொலைகளை மட்டுமின்றி கொலை, கொள்ளை உள்ளிட்ட அனைத்து வகையான குற்றங்களையும், சமூக சீரழிவுகளையும் ஏற்படுத்துவதற்கு இதுவே உதாரணமாகும்.

இணையவலை சூதாட்டத்தின் தீமைகளை நன்கு உணர்ந்ததால் தான் அதை தடை செய்ய வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருகிறார். இணையவலை சூதாட்டங்களுக்கு எதிரான நடவடிக்கைகளின் உச்சக்கட்டமாக, இணையவலை சூதாட்டத்தை தடை செய்து அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தி சென்னையில் ஜூன் 10ஆம் தேதி எனது தலைமையில் மாபெரும் போராட்டம் நடத்தப்பட்டது. அந்தப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே, இணையவலை சூதாட்டத்தை தடை செய்ய அவசர சட்டம் பிறப்பிக்கப்படும்; அது குறித்து அரசுக்கு இரு வாரங்களில் பரிந்துரைக்க வல்லுனர் குழு அமைக்கப் படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அது வரவேற்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

தமிழக அரசால் அமைக்கப்பட்ட வல்லுனர் குழு, இரு வாரக் கெடுவைக் கடந்து கடந்த 27-ஆம் தேதி அதன் அறிக்கையை முதலமைச்சரிடம் தாக்கல் செய்தது. அந்த அறிக்கை மீது அன்று மாலை அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதித்து முடிவெடுக்கப்படும் என்று தமிழக அரசு செய்திக்குறிப்பு வெளியிட்டது. அதன்படி அமைச்சரவைக் கூட்டத்தில் வல்லுனர் குழுவின் பரிந்துரை குறித்து ஆய்வு செய்யப்பட்டதாகவும், அதனடிப்படையில் இணையவலை சூதாட்டத்தை தடை செய்வதற்கான அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப் பட்டதாகவும் ஜூன் 28-ஆம் தேதி நாளிதழ்களிலும், செய்தி தொலைக்காட்சிகளிலும் செய்திகள் வெளியாயின.

ஆனால், அதன்பின்னர் 12 நாட்களாகி விட்ட நிலையில், இணையவலை சூதாட்டத் தடை சட்டம் குறித்து இப்போது வரை எந்தத் தகவலும் இல்லை. ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டத்திற்கு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதா? அவ்வாறு ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்தால் அச்சட்டம் ஆளுனரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டதா? ஒருவேளை இணையவலை சூதாட்டத் தடை சட்டத்திற்கு தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்படவில்லை என்றால் அதற்கான காரணம் என்ன? வல்லுனர் குழு பரிந்துரைகள் மீது அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது? என்பது குறித்தெல்லாம் தமிழக அரசு மக்களிடம் விளக்கமளிக்க வேண்டும். ஆனால், தமிழக அரசு அமைதியை கடைபிடித்து வருகிறது.

இணையவலை சூதாட்டம் மிகப்பெரிய சமூகக் கேடு ஆகும். உடனடியாக அந்தக் கேடு தடை செய்யப்பட வில்லை என்றால் தமிழ்நாடு சமூக ரீதியாகவும், பொருளாதாரம் மற்றும் வளர்ச்சி சார்ந்தும் மிக மோசமான சீரழிவுகளை சந்திக்கும். அதற்கு தமிழக அரசு இடம் கொடுத்து விடக் கூடாது. இணையவலை சூதாட்டத்தின் அனைத்து தீமைகளையும் தமிழக அரசு ஒப்புக் கொண்டிருக்கிறது. அதன்பிறகும் இணையவலை சூதாட்டத்தை தடை செய்வதில் இரண்டாவது சிந்தனைக்கோ, தயக்கத்திற்கோ எவ்வகையிலும் இடம் தரக் கூடாது.

இணையவலை சூதாட்டத் தடை அவசர சட்டத்தின் இன்றைய நிலை குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும். அவசர சட்டம் இன்னும் தயாராகவில்லை என்றால், உடனடியாக அமைச்சரவையைக் கூட்டி, இணையவலை சூதாட்டத் தடை அவசரச்சட்டத்திற்கு ஒப்புதல் தர வேண்டும். அதன்பின்னர் அதை ஆளுனருக்கு அனுப்பி இணையவலை சூதாட்டத் தடை அவசரச் சட்டத்தை பிறப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என வலியுறூத்தியுள்ளார்

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments