1500வது நாளை எட்ட இருக்கும் வலிசுமந்த மக்கள் போராட்டம்!!

You are currently viewing 1500வது நாளை எட்ட இருக்கும் வலிசுமந்த மக்கள் போராட்டம்!!

தாயகத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் தொடர்ச்சியாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது, இப்போராட்டமானது கடும் கண்காணிப்பிற்கு மத்தியிலும் அச்சுறுத்தலுக்கும் மத்தியிலும் தொடர்ச்சியான விசாரணைக்கு மத்தியிலும் பறிகொடுத்த உறவுகளுக்கு நீதிகேட்டு நெடும்போராட்டமாக நீண்டு செல்கின்றது.

இந்த செய்தியை எழுதிக்கொண்டிருக்கும் இன்றையநாள் 1493 நாட்களை தொட்டு வவுனியா காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் போராட்டம் நகர்ந்துகொண்டிருக்கின்றது.

இப்போராட்டத்தின் வலிமையை உணராத சமூகமாக பயணித்துக்கொண்டிருக்கின்றோமா? என்ற அச்ச உணர்வு ஆட்கொண்டதின் வெளிப்பாடு காரணமாகவே எம்மை எழுதத்தூண்டிது என்பதை பதிவு செய்துகொண்டு

நாம் இன அழிப்பிற்கு உள்ளாக்கப்பட்ட இனம் அதற்காகவே இன்று பல்வேறு நீதிக்கான போராட்டங்கள் முடுக்கிவிடப்பட்டுள்ளது இதிலே சில போராட்டங்கள் பண்பாட்டுப்போராட்டங்கள் மாதிரி நடைபெறுகின்றது இன்னும் சில போராட்டங்கள் தமிழ்மக்களின் நியாயமான போராட்டங்களை நீர்த்துப்போகச்செய்வதற்காக எமது தார்மீக உரிமைப்போராட்டத்திற்கு எதிரான சக்திகளின் பின்னணியில் நடத்தப்படுவதையும் நாம் அறியாமல் இருக்கவில்லை

ஆகவே மக்களின் உணர்வுகளை செல்லாக்காசாக மாற்றுவதற்கும் எமது விடுதலைச்சிந்தனை சிதைப்பதற்கும் தீய சக்திகள் களமிறக்கப்பட்டுள்ளார்கள் என்பதையும் இனிவரும் காலம்களில் விளித்துக்கொள்ளவேண்டிய கடப்பாடு உள்ளது என்பதையும் மறந்துவிடக்கூடாது.

எமது உரிமைக்கான கோரிக்கைகளையும்  அடையாளங்களை முன்நிறுத்தி தனித்தமிழ்த்தேசியம் பேசியவாறு புதிய முகங்கள் இறக்கப்பட்டு முழக்கமிடும் போராட்டங்கள் இனிவரும் காலங்களிலும் அதிகரிக்கும் வாய்ப்பு நிறையவே இருக்கின்றது.

இவை அனைத்தும் எமது மக்களின் நியாயமான போராட்டங்களை நலிவடையச்செய்வதற்காக நன்கு திட்டமிடப்பட்ட செயற்பாடுகள் என்பதை விளித்துக்கொண்டு உண்மையான சரியான அமைப்புக்கள் முன்னெடுக்கும் போராட்டங்களை வலுப்படுத்த மக்கள் தயாராக இருக்கவேண்டும் என்பதை கேட்டுக்கொள்கின்றோம்.

அந்தவகையிலே வவுனியா காணாமல் ஆக்கப்ப்ட உறவுகளின் சங்கத்தின் போராட்டம் மிக முக்கியமான போராட்டமாக தொடர்ச்சியாக பாதிக்கப்பட்ட மக்களால் நீதிகேட்டு நடாத்தப்பட்டு வருகின்றது. அதாவது 2009 இற்கு முன்பும் பின்பும் சிறீலங்கா இராணுவத்தால் கடத்தப்பட்டு அல்லது விசாரணை என்ற பேரில் அழைக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவினர்களால் இப்போராட்டம் நடாத்தப்பட்டு வருகின்றது.

தமிழின அழிப்பின் சாட்சிகளாக கண்முன்னே இருக்கும் தாய்மார்களால் சர்வதேசத்திடம் நீதிகேட்டு நடாத்தப்படும் இப்போராட்டமானது எதிர்வரும் 28.03.2021 அன்று 1500வது நாளை எட்ட இருக்கின்றது.

எனவே இப்போராட்டமானது  அடையாளப்போராட்டமாக அல்லாது நெடும்போராட்டமாக தொடர்கின்றது இப்போராட்டத்தில் உண்மையும் வலியும் சாட்சிகளும் இருக்கின்றது என்பதை உணர்ந்து உலகத்தமிழினம் ஓங்கிக்குரல் எழுப்ப தயாராகவேண்டும் என்பதை எமது வனொலியின் சார்பில் கேட்டுக்கொள்கின்றோம்.

மனோ நாகலிங்கம்

21.03.2021

1500வது நாளை எட்ட இருக்கும் வலிசுமந்த மக்கள் போராட்டம்!! 1
பகிர்ந்துகொள்ள