2000 நோயாளர்களை உள்வாங்கக்கூடிய மிதக்கும் வைத்தியசாலைகளில் 35 நோயாளர்கள் மட்டும் உள்வாங்கப்பட்டனர்! “கொரோனா” அதிர்வுகள்!!

2000 நோயாளர்களை உள்வாங்கக்கூடிய மிதக்கும் வைத்தியசாலைகளில் 35 நோயாளர்கள் மட்டும் உள்வாங்கப்பட்டனர்! “கொரோனா” அதிர்வுகள்!!

அமெரிக்க இராணுவத்தின் மிதக்கும் வைத்தியசாலை கப்பல்களான “USNS Comfort” மற்றும் “USNS Mercy” ஆகிய கப்பல்கள், “கொரோனா” வைரஸால் மிகவும் பாதிப்புக்குள்ளான நியூயோர்க் மற்றும் லொஸ் ஏஞ்செலஸ் ஆகிய மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டிருந்தன.

மேற்படி இரு மாநிலங்களும் “கொரோனா” வால் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், அங்குள்ள வைத்தியசாலைகள் “கொரோனா” தொற்றுக்கு ஆளானவர்களுக்கு அவசர சிகிச்சைகளை வழங்கவேண்டிய நிலையிலிருப்பதால், “கொரோனா” நோயாளிகள் தவிர்ந்த ஏனைய நோயாளிகளை உள்வாங்கி, அவர்களுக்கான சிகிச்சைகளை வழங்குவதற்காக, அமெரிக்க அதிபரின் விசேட உத்தரவின்பேரில் இவ்விரு கப்பல்களும், குறித்த இரு மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டதாக, அமெரிக்க அதிபர் முன்னதாக தெரிவித்திருந்தார்.

எனினும், தலா 1000 படுக்கைகளையும், அதற்குச்சமனான பணியாளர்களையும் கொண்டுள்ள இக்கப்பல்களில் இதுவரை வெறும் 35 நோயாளர்கள் மட்டுமே உள்வாங்கப்பட்டிருப்பதாக விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தமாக 2000 நோயாளர்களை உள்வாங்கக்கூடிய மேற்படி இரு மிதக்கும் வைத்தியசாலைகளில் வெறும் 35 நோயாளர்கள் உள்வாங்கப்பட்டிருப்பதானது நகைப்புக்கிடமானதென சாடியுள்ள நியூ யோர்க் நகரத்தின் மிகப்பிரபலமான வைத்தியசாலைகளின் கூட்டமைப்பின் தலைவரான “Michael Dowling”, இக்கட்டான நேரத்தில் இவ்விரு கப்பல்களும் மக்கள் சேவைக்காக அனுப்பி வைக்கப்பட்டாலும், கப்பல்களின் முழுமையான சேவைகளை பெற்றுக்கொள்ள முடியவில்லையெனவும் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

நோயாளர்களை உள்வாங்குவதில் கப்பல்களின் நிர்வாகங்கள் கடைப்பிடிக்கும் மிகக்கடுமையான வரைமுறைகளாலேயே இந்த சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக, கப்பல்களில் “கொரோனா” பரவிவிடக்கூடாது என்பதில் கடுமை காட்டப்படுவதால், நோயாளர்கள் எவரும் தத்தமது வீடுகளிலிருந்து நேரடியாக வரவோ அல்லது அவசர உயிர்காப்பு வாகனங்கள் மூலமாகவோ எந்த நோயாளர்களும் நேரடியாக இக்கப்பல்களுக்கு கொண்டுவரப்படவோ முடியாது எனவும், அனைத்து நோயாளர்களும் முதலில் நகரத்திலுள்ள வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்லப்பட்ட பின் அங்கு வைத்து “கொரோனா” தொற்று இருக்கிறதாவென பரிசோதனைகள் செய்யப்பட்டு, தொற்று இல்லை என அத்தாட்சிப்படுத்தப்பட்டதன் பின்னரே கப்பல்களுக்குள் உள்வாங்கப்படுவார்கள் என்ற நடைமுறை மிகக்கடுமையாக கடைப்பிடிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

ஏற்கெனவே “கொரோனா” நோயாளர்களால் நிரம்பி வழியும் நியூ யோர்க் மற்றும் லொஸ் ஏஞ்செலஸ் மாநில வைத்தியசாலைகளில், ஏனைய நோயாளிகளையும் உள்வாங்கி “கொரோனா” பரிசோதனை செய்து கப்பல்களுக்கு அனுப்பிவைத்து மிகச்சிரமமான காரியமாக இருப்பதாக தெரிவிக்கப்படும் நிலையில், மேற்படி செய்திகளை வெளியிட்டுள்ள “நியூ யோர்க் டைம்ஸ்” பத்திரிகையின் இந்த செய்திகளையிட்டு கருத்து தெரிவிக்க விரும்பவில்லையென அமெரிக்க பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

எனினும், தேவைகருதிய மாற்றங்களை செய்யும் அவசியமேற்படின் அதை பரிசீலிக்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ள மேற்படி இரு கப்பல்களின் தலைமைத்தளபதிகள், “கொரோனா” தொற்றினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளையும், ஏனைய நோயாளிகளையும் ஒன்றாக கப்பல்களில் அனுமதிக்க முடியாதெனவும், வைத்தியசாலைகள் விரும்பும் பட்சத்தில் ஏதாவது ஒரு வகையான நோயாளிகளை மட்டுமே தம்மால் உள்வாங்க முடியுமெனவும் தெரிவித்துள்ளனர்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments