2016 அமெரிக்க தேர்தலில் ரஷ்யாவின் பங்கு! வெளியான புதிய அறிக்கை!!

You are currently viewing 2016 அமெரிக்க தேர்தலில் ரஷ்யாவின் பங்கு! வெளியான புதிய அறிக்கை!!

2016 ஆம் ஆண்டில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில், ரஷ்யா காத்திரமான பங்கை வகித்திருப்பதாக, அமெரிக்க செனட் சபையின் விசாரணைக்குழு 19.08.2020 அன்று வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

அதிபர் தேர்தலின்போது, ஜனநாயக கட்சியின் கணினிகளை ஊடறுப்பதற்கான உத்தரவு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அவர்களால் நேரடியாக விடுக்கப்பட்டதாகவும், அதிபர் வேட்பாளராக களத்தில் நின்ற திருமதி. ஹிலாரி கிளிண்டன் அவர்களை பலவீனப்படுத்தி, தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் அவர்களை அதிபராக வெல்ல வைப்பதற்கான செயல்திட்டங்களில் ரஷ்யா இறங்கியிருந்ததாகவும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அமெரிக்க செனட் சபையின் விசாரணைக்குழுவானது கடந்த 3 ஆண்டுகளாக இது தொடர்பில் ஆய்வு செய்ததாகவும், சுமார் 200 சாட்சிகள் விசாரிக்கப்பட்டதாகவும், பல்லாயிரக்கணக்கான ஆவணங்கள் ஆராயப்பட்டதாகவும், சுமார் 966 பக்கங்கள் கொண்ட இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, அதிபர் டொனால்ட் டிரம்ப் அவர்களின் வெற்றிக்காக பணியாற்றிய குழுவுக்கும், ரஷ்ய உளவுத்துறைக்கும் இடையிலான நெருக்கமான உறவுகள், 2016 தேர்தல் காலத்தில் இருந்தமைக்கான சான்றுகளும் கண்டறியப்பட்டுள்ளதாக மேற்படி அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது.

மேற்படி விடயம் தொடர்பில், அமெரிக்க சி.பி.ஐ. யின் முன்னாள் இயக்குனர் “Robert Mueller” விசாரணைகளை மேற்கொண்டு 2019 ஆம் ஆண்டில் அறிக்கையொன்றை சமர்ப்பித்திருந்ததாகவும், எனினும் அதிபர் டிரம்ப் அவர்களின் அலுவலகம் அதனை ஏற்றுக்கொண்டிருக்கவில்லையெனவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.

இது விடயம் தொடர்பில் “விக்கி-லீக்ஸ்” நிறுவனம் கசிய விட்டிருந்த மின்னஞ்சல்களின் உள்ளடக்கங்களை, தேர்தல் நேரத்தில் அதிபர் டிரம்ப் இன் வட்டாரங்கள் தமக்கு சாதகமான விதத்தில் கையாண்டு கொண்டிருந்ததாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அமெரிக்க செனட் சபையின் விசாரணைக்குழு மேற்கொண்டிருந்த இவ்விசாரணைகளை குழப்புவதற்கு, அதிபர் டிரம்ப் அவர்களின் வட்டாரங்கள் பல வழிகளிலும் முயன்றதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.

2016 ஆம் ஆண்டின் அதிபர் தேர்தலின்போது, டொனால்ட் டிரம்ப் அவர்களின் தேர்தல் பணிகளுக்கு பொறுப்பாகவிருந்த “Paul Manafort” என்பவருக்கும், ரஷ்ய உளவுத்துறை அதிகாரியாக பணியாற்றிய ” Konstantin Kilimnik” என்பவருக்குமிடையில் நிலவிய இறுக்கமான தொடர்பும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும், அதிபர் தேர்தல் காலத்தில் சங்கேத குறியீட்டு சொற்களை தமக்கிடையில் பரிமாறிக்கொண்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

அதிபர் ட்ரம்ப் அவர்களின் தேர்தல் பரப்புரைகளுக்கு பொறுப்பு வகித்த “Paul Manafort”, பரப்புரைகளின் போதான கருத்துக்கணிப்புக்களை ரஷ்ய உளவுத்துறையோடு பகிர்ந்து கொண்டுள்ளது அம்பலப்படுத்தப்பட்டுள்ளதால், ஜனநாயக கட்சியினரின் கணினிகளின் தரவுவழங்கியை (Server) ரஷ்ய உளவாளிகள் ஊடறுத்து தகவல்களை பெற்றுள்ளதை நிறுவ முடியுமெனவும் இவ்வறிக்கை கூறுகிறது.

2020 இறுதியில் நடக்கவிருக்கும் அதிபர் தேர்தலிலும் ரஷ்ய உளவுத்துறை களமிறங்கும் வாய்ப்புக்கள் அதிகமாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்படும் அதேவேளை, நடக்கவிருக்கும் அதிபர் தேர்தலில் டிரம்ப் அவர்களை எதிர்த்து போட்டியிடும் “Joe Biden” அவர்களுக்கும் முன்னாள் உக்ரேனிய அதிபருக்குமிடையில் நடந்ததாக கூறப்படும் உரையாடலின் ஒலிப்பதிவை, அதிபர் டிரம்ப் தனது ட்வீட்டர் பதிவின் மூலம் வெளிப்படுத்தியிருப்பதும் தற்போது சர்ச்சைகளை கிளப்பியுள்ளன. எனினும், இது, “Joe Biden” அவர்களுக்கு எதிரான ரஷ்ய பரப்புரை என அமெரிக்க உளவுத்துறை கருதுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, அதிபர் டிரம்ப் அவர்களின் முன்னாள் சட்ட ஆலோசகர் “Michael Cohen”, தான் வெளியிடப்போகும் புதிய புத்தகமொன்றில், 2016 அதிபர் தேர்தலின்போது டொனால்ட் டிரம்ப் அவர்கள், ரஷ்ய உளவுத்துறையோடு நெருங்கிய தொடர்புகளை வைத்திருந்தமையை அம்பலப்படுத்தப்போவதாக தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள