70 ஆண்டுகால பழமையான மருத்துவ களஞ்சியங்களை திறக்கும் பின்லாந்து! “கொரோனா” அதிர்வுகள்!!

70 ஆண்டுகால பழமையான மருத்துவ களஞ்சியங்களை திறக்கும் பின்லாந்து! “கொரோனா” அதிர்வுகள்!!

1950 ஆம் ஆண்டுகாலப்பகுதியிலிருந்து சேமித்து வைக்கப்பட்ட அவசரகால மருத்துவப்பொருட்களை மீண்டும் பாவனைக்கு எடுப்பதற்கு பின்லாந்து முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பனிப்போர்க்கலாம் என வர்ணிக்கப்படும் 1950 களிலிருந்தே, அவசர தேவைகளுக்கென மருத்துவப்பொருட்கள், எண்ணெய், தானியங்கள், விவசாய உபகரணங்கள், வெடிபொருட்களை தயாரிக்கக்கூடிய மூலப்பொருட்கள் போன்றவற்றை, இரகசிய களஞ்சியங்களில் பின்லாந்து சேமித்து வந்ததாகவும், தற்போது “கொரோனா” பரவலினால் ஏற்பட்டுள்ள அவசரகால நிலைமையை கருத்தில்கொண்டு இந்த இரகசிய களஞ்சியங்களில் சேமித்து வைக்கப்பட்ட மருத்துவப்பொருட்களை பாவனைக்கு எடுத்துக்கொள்வதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருக்கும் பின்லாந்து சுகாதார அமைச்சர் “Tuija Kumpulainen”, மேற்படி இரகசிய களஞ்சியங்களிலிருந்து பெறப்படும் மருத்துவ உபகரணங்கள், “கொரோனா” வை எதிர்த்து போராடுவதற்கு போதுமானவையெனவும் தெரிவித்துள்ளார்.

2012 ஆம் ஆண்டில் ஏற்பட்ட “பன்றிக்காய்ச்சல்” தொற்றுநோய் பரவலின் பின், அபாயகரமான தொற்றுநோய்ப்பரவல் ஒன்றினை சமாளிக்கும் விதத்தில் ஆயத்தநிலையில் பின்லாந்து வைக்கப்பட்டிருந்ததாகவும், அதன்படி, தற்போதுள்ள அவசர நிலையில் பின்லாந்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ள மருத்துவப்பொருட்களை வைத்து தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியுமெனவும் “Tuija Kumpulainen” மேலும் தெரிவித்துள்ளார்.

இரண்டாம் உலகப்போரின் பின்னதாக இவ்வாறான இரகசிய களஞ்சியசாலைகளை நோர்வே, சுவீடன் டென்மார்க் ஆகிய நாடுகளும் வைத்திருந்தாலும், நோர்டிக் நாடுகளை பொறுத்தவரை பின்லாந்து மட்டுமே இன்றும் இந்த இரகசிய களஞ்சியங்களை பேணி பராமரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

பின்லாந்தின் காடுகளுக்குள் அமைக்கப்பட்டிருக்கும் இந்த இரகசிய களஞ்சியங்கள் காலத்துக்குக்கலாம் மேம்படுத்தப்பட்டு வருவதாகவும், அவற்றில் சேமித்து வைக்கப்படும் பொருட்கள் அனைத்தும் தகுந்த பராமரிப்பில் வைக்கப்பட்டுள்ளன என்றும் பின்லாந்தின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறையின் இயக்குனர் ” Mika Salminen” தெரிவித்துள்ளார்.

ஆபத்தான நாடாகவே எப்போதும் நோக்கப்படும் ரஷ்யா, பின்லாந்தோடு நில எல்லைகளை கொண்டிருப்பதும், பெரும்பாலான நுகர்வுப்பொருட்களுக்காக அயல்நாடான “எஸ்த்லாந்து” நாட்டை பின்லாந்து நம்பியிருக்க்கவேண்டிய நிலைமையும், இவ்வாறான இரகசிய சேமிப்புக்களஞ்சியங்களை பின்லாந்து தொடர்ச்சியாக பேணிவருவதாகவும் பின்லாந்தின் அவசரகால நிலைமைகளை கையாளும் நிலையத்தின் தலைவரான “Tomi Lounemaதெரிவித்துள்ளார்.

பின்லாந்தின் இரகசிய களஞ்சியங்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ள முகக்கவசங்களை பாவனைக்கு எடுப்பதாக கடந்த இரு வாரங்களுக்கு முன்னதாகவே பின்லாந்து அரசு முடிவெடுத்துள்ளதாக தெரிவிக்கும் “Tomi Lounema”, குறிப்பிட்ட முகக்கவசங்கள் பழமையானவை என்றாலும், பாவனைக்கு எடுத்துக்கொள்ளக்கூடிய நல்ல நிலையிலேயே அவை இருப்பதாகவும், அவையனைத்தும் நாட்டின் அனைத்து வைத்தியசாலைகளுக்கும் பகிர்ந்தளிக்கப்படுமெனவும் தெரிவித்துள்ளார்.

இரகசிய களஞ்சியங்களிலிருந்து பெறப்படும் மருத்துவ உபகாரணங்களால் பின்லாந்தில் இவற்றுக்கு பற்றாக்குறை ஏற்படாதெனவும், எனினும் இவையனைத்தும் பின்லாந்தின் தேவைக்காக மாத்திரமே பயன்படுத்தப்படுமெனவும், வேறு நாடுகளுக்கு கொடுக்கப்பட மாட்டாதெனவும் பின்லாந்தின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments