“Tik Tok” சவாலில் பலியான 10 வயது சிறுமி! பெற்றோர்களே அவதானம்!!

You are currently viewing “Tik Tok” சவாலில் பலியான 10 வயது சிறுமி! பெற்றோர்களே அவதானம்!!

“Tik Tok” எனப்படும் செயலியினூடாக கிடைத்த சவால் (Challenge) ஒன்றை நிறைவேற்ற முயன்ற 10 வயது சிறுமியொருவர் உயிரிழந்த பரிதாப சம்பவம் இத்தாலியின் சிசீலியா தீவில் நடந்துள்ளது.

பொதுவாக, பயனாளர்கள் தாங்கள் தொடர்பான சுவாரசியமான தகவல்கள் மற்றும் தாங்கள் பாடிய பாடல்கள் உள்ளிட்ட காணொளித்துண்டுகளை “Tik Tok” செயலியூடாக பதிவேற்றம் செய்துவருவது வழமை என்றாலும், இளவயதினரிடையே சவால்களை பரப்பும் ஊடகமாகவும் “Tik Tok” பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

“Tik Tok” மூலம் தனக்கு அனுப்பப்பட்ட சவால் ஒன்றை நிறைவேற்ற முயன்ற குறித்த 10 வயதேயான இத்தாலியச்சிறுமியான “Antonella Sicomero”, மிக ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது மூளைச்சாவடைந்து பரிதாபமாக மரணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

“Tik Tok” செயலியை வடிவமைத்த சீன நிறுவனமான “ByteDance” தெரிவிக்கையில், தங்களது ஆய்வுகளின்படி, மரணமான சிறுமிக்கு குறித்த செயலியூடாக சர்ச்சைக்குரிய சவால் விடுக்கப்பட்டதுக்கான தடயங்களெதுவும் காணப்படவில்லையென தெரிவித்துள்ளது.

மேற்படி பரிதாபகரமான சம்பவத்தையடுத்து, இவ்வாறான செயலிகளை தடை செய்வது பற்றி இத்தாலிய அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டுமென்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

பெரும்பாலான நாடுகளில், குறித்த செயலியை பாவிப்பதற்கான ஆகக்குறைந்த வயதெல்லை 13 ஆக இருந்தாலும், சில பெற்றோர் கவனக்குறைவினால், தங்களது குழந்தைகளுக்கு இவ்வாறான செயலிகளை பாவிப்பதற்கான அனுமதியை வழங்கிவிடுவதும் பெரும் குறைபாடாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குழந்தைகள் சமூகவலைத்தளங்களில் எவ்வாறான செயலிகளில் ஈடுபடுகிறார்கள் என்பதை பெற்றோரும் கண்காணிக்க வேண்டுமென்பதை மேற்படி சம்பவம் மீண்டும் வலியுறுத்துகிறது.

பகிர்ந்துகொள்ள