இஸ்ரேலுக்கு எதிராக பிரிட்டன், கனடா, பிரான்ஸ் கூட்டாக எச்சரிக்கை!

You are currently viewing இஸ்ரேலுக்கு எதிராக பிரிட்டன், கனடா, பிரான்ஸ் கூட்டாக எச்சரிக்கை!

காஸாவில் இஸ்ரேலிய இராணுவம் தனது நடவடிக்கைகளை மேலும் மோசமான விதத்தில் விரிவுபடுத்தினால், உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவேண்டிவரும் என பிரிட்டன் கனடா பிரான்ஸ் ஆகிய நாடுகள் கூட்டாக எச்சரித்துள்ளன.

இதுதொடர்பாக பிரிட்டன்  பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், பிரான்ஸ் ஜனாதிபதி  இம்மானுவேல் மெக்ரான், கனடா பிரதமர் மார்க் கார்னி ஆகியோர் வெளியிட்ட கூட்டு அறிக்கையில், காஸாவில் ஏற்பட்டுள்ள நிலைமைகள் சகிக்க முடியாதது. இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அரசாங்கம் இந்த மோசமான நடவடிக்கைகளைத் தொடரும் வரை நாங்கள் காத்திருக்க மாட்டோம்.

இராணுவ நடவடிக்கையை இஸ்ரேல் உடனடியாக நிறுத்தவேண்டும்,மனிதாபிமான உதவிகள் காஸாவிற்குள் செல்வதற்கு உடனடியாக அனுமதிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இஸ்ரேல் 11 வாரகால முற்றுகை மற்றும் தடையின் பின்னர் எண்ணிக்கை அடிப்படையிலான  உணவுகளை காஸாவிற்குள் அனுமதிக்கும் என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு  நேற்று முன்தினம் (18) தெரிவித்திருந்தார்.

எனினும் இது போதுமானதல்ல என தெரிவித்துள்ள மேற்குலகின் மூன்று தலைவர்களும் பொதுமக்களிற்கு அத்தியாவசிய மனிதாபிமான உதவிகளை மறுப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது இது சர்வதேச மனித உரிமை சட்டத்தை மீறுவதற்கு ஒப்பானது என தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேல் உடனடியாக காஸாவிற்கு முழுமையான  உதவியை மீண்டும் தொடங்க அனுமதிக்க வேண்டும் என்பதோடு இஸ்ரேல் தனது இராணுவத் தாக்குதலை நிறுத்தி, மனிதாபிமான உதவி மீதான கட்டுப்பாடுகளை நீக்காவிட்டால் இஸ்ரேலுக்கு எதிராக உறுதியான நடவடிக்கைகளை எடுப்போம் என்று தெரிவித்துள்ளனர்

காஸாவில் காணப்படும் துன்பத்தின் அளவு சகித்துக்கொள்ள முடியாததாக உள்ளது என தெரிவித்துள்ள அவர்கள், ஹமாஸ் தன்னிடம் எஞ்சியுள்ள பணயக்கைதிகளை விடுதலை செய்யவேண்டும் எனவும்  வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 

பகிர்ந்துகொள்ள

Leave a Reply