இஸ்ரேலை தங்கள் நாடு ஆதரிப்பதை எதிர்த்து, அமெரிக்க செனட் சபையில் போராட்டம் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டனர்.
அமெரிக்காவின் செனட் சபையில் சுகாதார செயலாளர் ராபர்ட் கென்னடி, மத்திய சுகாதார நிறுவனங்களின் மறுசீரமைப்பு குறித்து விளக்கிக் கொண்டிருந்தார். அப்போது, அவரது இருக்கைக்குப் பின்புறம் அமர்ந்திருந்த பென் அன்ட் ஜெர்ரி என்ற ஐஸ் கிரீம் நிறுவனத்தின் நிறுவனரும், சமூக ஆவலருமான பெனா கோஹென் உள்பட 6 பேர், அமெரிக்காவுக்கு எதிராக திடீரென கோஷத்தை எழுப்பினர்.
காசாவில் குழந்தைகளை கொன்று குவித்து வரும் இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவு வழங்குவதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, குண்டுகட்டாக அவர்களை தூக்கிச் சென்று போலீசார் கைது செய்தனர். இதனால், செனட் சபையில் பரபரப்பு நிலவியது.
பெனா கோஹென் உள்ளிட்டோர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டால், அவர்கள் 90 நாட்கள் சிறை தண்டனை, 500 அமெரிக்க டாலர்கள் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். அல்லது இரு தண்டனைகளை சேர்த்து அனுபவிக்க வேண்டியிருக்கும்.
இது குறித்து பெனா கோஹென் விடுத்த பதிவில், ‘குண்டு வாங்கி, காசாவில் உள்ள ஏழைக் குழந்தைகளை கொல்கிறார்கள் என்று நான் காங்கிரஸிடம் கூறினேன். ஆனால், அமெரிக்காவில் ஏழைக் குழந்தைகளை மெடிகெய்ட் திட்டத்தில் இருந்து நீக்கி, அந்தப் பணத்தை இந்த வன்முறைக்கு பயன்படுத்துகின்றனர்,’ என்று குறிப்பிட்டிருந்தார்.
பெனா கோஹென் போலீசாரால் கைது செய்யப்படுவது இது முதல்முறையல்ல. கடந்த 2023ம் ஆண்டு விக்கி லீக்ஸ் இணை நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச் சிறையில் அடைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதற்காகவும் கைது செய்யப்பட்டிருந்தார்.