ஈழத் தமிழினம் அழிந்த பின்னர் தான் சம்பந்தன் வெளியக சுய நிர்ணய உரிமையைக் கோரப் போகின்றாரா?

You are currently viewing ஈழத் தமிழினம் அழிந்த பின்னர் தான் சம்பந்தன் வெளியக சுய நிர்ணய உரிமையைக் கோரப் போகின்றாரா?

ஈழத் தமிழினம் அழிந்த பின்னர் தான் சம்பந்தன் வெளியக சுய நிர்ணய உரிமையைக் கோரப் போகின்றாரா என தமிழ்த் தேசிய கட்சியின் செயலாளரும் முன்னாள் ,நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் வேட்பாளர் தொடர்பில் இரா.சம்பந்தன் தெரிவித்த கருத்து தொடர்பில் எம்.கே.சிவாஜிலிங்கம் ஊடக அறிக்கையினை வெளியிட்டுள்ளார்.

குறித்த ஊடக அறிக்கையில், “உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில், இணைந்த வடக்கு கிழக்குக்கு சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வுடன் கூடிய தீர்வு என்பதுதான், சர்வதேச மட்டத்தில் விடுதலை புலிகள் இயக்கமும் இலங்கை அரசும் சேர்ந்து இணங்கிக் கொண்ட விடயம்.

அதற்கு பாதிப்பு ஏற்படும் வகையில் முடிவு எதையும் தமிழ்ப் பொது வேட்பாளர் விடயத்தில் எடுக்கக் கூடாது என்று தமிழ் அரசுக் கட்சியின் பெருந்தலைவர் சம்பந்தன் கூறியிருக்கின்றார்.

சிறிலங்கா அரசு இன்னமும் சமஷ்டி அடிப்படையிலான தீர்வை ஈழத் தமிழர்களின் இனப்பிரச்சினை தீர்வாகக் கொண்டுள்ளது என்பது அடி முட்டாள் தனமான நம்பிக்கை.

வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைப்பிற்கான பொதுமக்கள் வாக்கெடுப்பு கிழக்கு மாகாணத்தில் நடைபெறாமலேயே உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி தற்காலிக இணைப்பு பிரிக்கப்பட்டு, 18 ஆண்டுகள் நடந்து விட்டது.

உள்ளக சுயநிர்ணய உரிமை என ஐக்கிய நாடுகள் சபையின் நியமங்களின் அடிப்படையிலோ அல்லது சர்வதேச சட்டங்களிலோ கிடையாது. சுயநிர்ணய உரிமை என மாத்திரமே குறிப்பிடப்பட்டுள்ளது.

இலட்சக் கணக்கான ஈழத் தமிழர்கள் இடம் பெயர்ந்துள்ளார்கள். எனவே பொதுமக்கள் வாக்கெடுப்பை வடக்கு-கிழக்கு மாகாணங்களில் நடத்த முடியாது என சம்பந்தன் ஐயா கூறுவது தவறானது.

ஐக்கிய நாடுகள் சபையினால் அல்லது சர்வதேச சமூகத்தினரால் நடத்தப்படும் சுதந்திரத்திற்கான பொதுமக்கள் வாக்கெடுப்பு புலம்பெயர் மக்கள் தாங்கள் வாழும் நாடுகளிலேயே வாக்களிக்க முடியும் இதற்கு பல நாடுகளில் நடைபெற்ற வாக்களிப்புக்களை உதாரணமாகக் கூற முடியும்.

அடிக்கடி சம்பந்தன் ஐயா ஈழ தமிழ் மக்களுக்கு உள்ளக சுய நிர்ணய உரிமை மறுக்கப்பட்டால் எமக்கு வெளியக சுய நிர்ணய உரிமையை கோரும் உரித்து உண்டு எனவும் கூறுவார். ஈழத் தமிழ் இனம் அழிந்ததன் பின்னர் தான் சம்பந்தன் ஐயா வெளியக சுய நிர்ணய உரிமையைக் கோரப் போகின்றாரா சுய நிர்ணய உரிமை என்பது தமக்கு என்ன தீர்வு வேண்டும் என்பதை அந்த மக்களே தீர்மானிக்க வேண்டும்.

சமஷ்டி தீர்வுக்காகவோ அல்லது கூட்டு சமஷ்டித் தீர்வுக்காகவோ சர்வதேச மத்தியஸ்தம் சாத்தியமில்லை. உள்நாட்டிலேயே உள்ள தீர்வை உள்நாட்டிலேயே பெற வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையோ அல்லது சர்வதேச சமூகமும் கூறும்.

எனவே, ஐக்கிய நாடுகள் சபையின் உதவியுடன் அல்லது சர்வதேச சமூகத்தினரால் நடத்தப்படும் பொதுமக்கள் வாக்கெடுப்பை நாங்கள் கோருகின்றோம். இந்த விடயங்களை தமிழ் அரசுக் கட்சியின் பெருந்தலைவர் சம்பந்தன் ஐயா உட்பட ஈழத் தமிழினத்தின் கவனத்திற்கு சமர்ப்பிக்க விரும்புகின்றேன் என எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தள்ளார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments