ஆப்கானிஸ்தானுடனான வடமேற்கு எல்லையைக் கடந்து நாட்டிற்குள் நுழைய முயன்ற 54 தீவிரவாதிகளை கொன்றதாக பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைக்கு இடையில் வடக்கு மாகாணமான கைபர் பக்துன்க்வாவில், பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லை வழியாக ஊடுருவ முயன்ற ஒரு பெரிய குழுவின் நடமாட்டம் பாதுகாப்புப் படையினரால் கண்டறியப்பட்டது.
மேலும், பாகிஸ்தானுக்குள் மிக மோசமான பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்ள தங்கள் வெளிநாட்டு எஜமானர்களின் உத்தரவின் பேரில் ஜிஹாதிகளின் குழு குறிப்பாக ஊடுருவியது என்றும், அதில் 54 பேர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், பாகிஸ்தான் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை இந்தியா சுமத்தி வரும் நேரத்தில் ஜிஹாதிகளின் இதுபோன்ற நடவடிக்கைகள், யாருடைய நோக்கத்திற்காக அவர்கள் செயல்படுகிறார்கள் என்பதை தெளிவாகக் குறிப்பிடுகிறது என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அண்டை நாடான ஆப்கானிஸ்தானில் 2021 ஆம் ஆண்டு தலிபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தான் தீவிரவாதத்தில் அதிக அளவிலான அதிகரிப்பை எதிர்கொள்கிறது.
ஏப்ரல் 22 அன்று காஷ்மீர் பிராந்தியத்தில் பொதுமக்கள் மீதான மிக மோசமான தாக்குதலில் ஆயுதாரிகள் 26 பேரைக் கொன்றதை அடுத்து, பாகிஸ்தான் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஆதரிப்பதாக இந்தியா குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் அந்த குற்றச்சாட்டுகளை பாகிஸ்தான் மறுத்துள்ளது.
கைபர் பக்துன்க்வா பகுதிக்குள் நுழைய முயன்ற தீவிரவாதிகளிடமிருந்து பெரும் அளவிலான ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் வெடிபொருட்கள் மீட்கப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.
மேலும், மாகாணத்தில் மூன்று மோதல்களில் 15 போராளிகள் கொல்லப்பட்டதன் ஒரு நாள் கழித்து 54 ஜிஹாதிகள் கொல்லப்பட்டுள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
வெளியான தரவுகள் அடிப்படையில், கைபர் பக்துன்க்வா மற்றும் பலுசிஸ்தான் மாகாணங்களில் அரசாங்கத்திற்கு எதிராகப் போராடும் ஆயுதக் குழுக்களால் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து நடத்தப்பட்ட தாக்குதல்களில் 200க்கும் மேற்பட்டோர், பெரும்பாலும் பாதுகாப்புப் படையினர், கொல்லப்பட்டுள்ளனர் என்றே தெரிய வந்துள்ளது.