காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களைச் சந்திக்கிறார் சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர்!

You are currently viewing காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களைச் சந்திக்கிறார் சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர்!

முதன்முறையாக இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம் அக்னெஸ் கலமார்ட் இன்று முல்லைத்தீவில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.

யுத்தத்தின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான வன்முறைகள் என்பன தொடர்பில் உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் என்பன உறுதிப்படுத்தப்படவேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபை தொடர்ச்சியாக வலியுறுத்தி வருவதுடன், சர்வதேச அரங்கில் இலங்கை மீதான அழுத்தங்களையும் பிரயோகித்து வருகின்றது.

அந்தவகையில் மூன்று தசாப்தகால யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு நாளைய தினத்துடன் (18) 15 வருடங்கள் பூர்த்தியடையும் நிலையில், முதன்முறையாக தெற்காசியப் பிராந்தியத்துக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருக்கும் சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம் அக்னெஸ் கலமார்ட், வியாழக்கிழமை நாட்டை வந்தடைந்துள்ளார்.

அதன்படி இன்று வெள்ளிக்கிழமை முல்லைத்தீவுக்கு விஜயம் செய்யவுள்ள அவர், அங்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார். இன்று மாலை 5.00 மணியளவில் முல்லைத்தீவில் நடைபெறவுள்ள இச்சந்திப்பில் வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாறை ஆகிய 8 மாவட்டங்களினதும் தலைவர்கள் மற்றும் செயலாளர்கள் பங்கேற்பர் என அறியமுடிகிறது.

இச்சந்திப்பின்போது வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விவகாரம், போரில் உயிரிழந்தோரை நினைவுகூருவதற்குத் தடைவிதிக்கப்படல், இந்துக்களின் வழிபாட்டுத்தலங்கள் உள்ளடங்கலாக வட, கிழக்கில் காணிகள் அபகரிக்கப்படல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் அக்னெஸ் கலமார்ட்டிடம் எடுத்துரைக்கவிருப்பதாக வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை சனிக்கிழமை நடைபெறவுள்ள முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொள்ளவிருக்கும் மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம் அக்னெஸ் கலமார்ட், போரில் உயிரிழந்த தமது அன்புக்குரியவர்களை நினைவுகூரும் மக்களுடன் இணைந்து தனது உடனிற்பை வெளிப்படுத்தவுள்ளார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments