சர்வதேச நீதிப்பொறிமுறையுடனான புதிய தீர்மானத்தை நிறைவேற்றுங்கள்!!

You are currently viewing சர்வதேச நீதிப்பொறிமுறையுடனான புதிய தீர்மானத்தை நிறைவேற்றுங்கள்!!

எம்மில் பலர் வயது முதிர்ந்த தாய்மார்களாவர். நாம் இன்னும் எவ்வளவு காலம் உயிருடன் இருப்போம் என்று தெரியவில்லை. இருப்பினும் நாம் உயிருடன் இருக்கும்போது எமக்கான நீதி கிடைக்கப்பெறவேண்டுமென விரும்புகிறோம். ஆகவே எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 25 ஆம் திகதி இலங்கை ஒரு நம்பத்தகுந்த சர்வதேச நீதிப்பொறிமுறைக்கு முகங்கொடுப்பதை உறுதிசெய்யக்கூடியவாறான தீர்மானமொன்றை நிறைவேற்றுங்களென வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் இலங்கை தொடர்பான இணையனுசரணை நாடுகளிடம் கடிதம் மூலம் வேண்டுகோள்விடுத்துள்ளது.

இதுகுறித்து வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினால் பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கும் கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

இலங்கை பாதுகாப்புப்படையினரால் வட, கிழக்கு மாகாணங்களிலிருந்து வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களான நாம், கடந்த 16 வருடங்களாக நீதிக்காகப் போராடி வருகிறோம்.

நாம் கடந்த 2017 ஆம் ஆண்டு பெப்ரவரி 20 ஆம் திகதியிலிருந்து கிளிநொச்சி கந்தசுவாமி கோவிலுக்கு முன்பாக தொடர் கவனயீர்ப்புப்போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறோம். தற்போது எமது போராட்டம் 3000 நாட்களைக் கடந்துள்ளது.

எம்முடன் போராட்டத்தில் பங்கேற்ற நூற்றுக்கணக்கான பெற்றோர்கள், காணாமல்போன தமது பிள்ளைகளுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறியாமலே மரணித்திருக்கிறார்கள்.

உண்மையையும், நீதியையும் கோரி போராட்டத்தை முன்னெடுத்த இக்காலப்பகுதியில் இலங்கை அரசாங்கம் சர்வதேச சமூகத்தை எவ்வாறு ஏமாற்றிவருகிறது என்பதை வெளிப்படுத்தியிருக்கிறோம்.

இருப்பினும் அண்மையில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் பிரிட்டனால் முன்மொழியப்பட்டு, 60 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட 60ஃ1 தீர்மானம் எமக்கு புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கையை அளித்திருக்கிறது.

அதேவேளை இலங்கையில் இடம்பெற்ற கடந்தகால மீறல்கள் தொடர்பில் ஆதாரங்களைத் திரட்டி ஆவணப்படுத்துவதற்கு இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் பொறிமுறைக்கு வழங்கப்பட்ட 3 வருடகால ஆணை எதிர்வரும் செப்டெம்பர் மாதத்துடன் முடிவுக்குவரும் நிலையில், அப்பொறிமுறையின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட மிகமுக்கியமான பணியை இப்போது நினைவுகூருகிறோம்.

எம்முடன் தொடர்புடைய ஆதாரங்களைத் திரட்டி, அவற்றைப் பாதுகாக்கும் அவர்களது முயற்சி இன்றியமையாததாகும். எனவே இந்த ஆணையை மேலும் காலநீடிப்பு செய்வது எமக்கான ஆதரவையும், உடன்நிற்பையும் வெளிக்காட்டும் நடவடிக்கையாக அமையும் என நாம் கருதுகிறோம்.

அதேபோன்று இறுதிக்கட்டப்போரின்போது நிகழ்த்தப்பட்ட மிகமோசமான குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான பொறுப்புக்கூறலை உறுதிசெய்யும் வகையில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச்சபையின் ஊடாக இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தவேண்டும்.

இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் பொறிமுறையின் பணியைத் தொடர்வதற்கும், வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பில் செயற்திறன்மிக்க சர்வதேச விசாரணையை முன்னெடுத்து, குற்றவாளிகளைத் தண்டிப்பதற்கும் ஏற்றவாறான தீர்மானமொன்றை நிறைவேற்றவேண்டும்.

இலங்கையின் உள்ளகப்பொறிமுறையானது பல தசாப்தகாலமாக நீதி மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதற்கும், நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கும் தவறியிருக்கிறது.

மாறாக நாம் இன்னமும் தொடர் இராணுவமயமாக்கல், சட்டவிரோத காணி அபகரிப்பு, தண்டனை விலக்கீடு, சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் மறுப்பு என்பவற்றுக்கு முகங்கொடுத்துவருகிறோம். எனவே எமக்கான அர்த்தமுள்ள நீதியைப் பெற்றுத்தருவதற்கு சர்வதேச சமூகம் ஆக்கபூர்வமான முறையில் செயலாற்றவேண்டிய தருணம் இதுவாகும்.

எம்மில் 90 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் வயது முதிர்ந்த தாய்மார்களாவர். நாம் இன்னும் எவ்வளவு காலம் உயிருடன் இருப்போம் என்று தெரியவில்லை. இருப்பினும் நாம் உயிருடன் இருக்கும்போது எமக்கான நீதி கிடைக்கப்பெறவேண்டும் என விரும்புகிறோம்.

ஆகவே எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 25 ஆம் திகதி இலங்கை ஒரு நம்பத்தகுந்த சர்வதேச நீதிப்பொறிமுறைக்கு முகங்கொடுப்பதை உறுதிசெய்யக்கூடியவாறான தீர்மானமொன்றை நிறைவேற்றுமாறு உங்களிடம் வேண்டிக்கேட்டுக்கொள்கிறோம் என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply