சென்னையில் கொரோனா ; ஒரே நாளில் மருத்துவர் உட்பட 10 பேர் பலி!

  • Post author:
You are currently viewing சென்னையில் கொரோனா ;  ஒரே நாளில் மருத்துவர் உட்பட 10 பேர் பலி!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. அதிலும், சென்னையில் அன்றாடம் கொரோனா பாதிப்பு புதிய உச்சம் அடைகின்றது. 10 நாட்களில் மட்டும் 14 ஆயிரத்து 508 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக தமிழக சுகாதாரத்துறை சார்பில் நேற்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், கொரோனா வைரஸ் தொற்றால் தமிழகத்தில் இருந்து 1,897 பேரும், வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து வந்த 30 பேர் என மொத்தம் 1,927 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்று குறிப்பிட பட்டுள்ளது.

இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 36 ஆயிரத்து 841 ஆக அதிகரித்துள்ளது. இதுவரையில் 326 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று மட்டும் 19 பேர் பலியாகி உள்ளனர். இதில் சென்னையை சேர்ந்த 16 பேரும், செங்கல்பட்டை சேர்ந்த 3 பேரும் அடங்குவர். இறந்தவர்களில் 12 பேர் அரசு மருத்துவமனையிலும், 7 பேர் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றனர்.

இந்த நிலையில், சென்னையில் கொரோனா பாதிப்புக்கு மருத்துவர் உள்பட 10 பேர் இன்று பலியாகி உள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. சென்னையில் கீழ்பாக்கத்தில் வசித்து வந்த 70 வயது மருத்துவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்து உள்ளார்.

இதேபோன்று, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த 3 பேர் உயிரிழந்து உள்ளனர். அவர்களில் ஒருவர் வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த 56 வயது ஆண் மற்றும் ஏழுகிணறு பகுதியை சேர்ந்த 68 வயது முதியவர் ஒருவர் என தெரிய வந்துள்ளது.

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஓட்டேரி பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவர் உயிரிழந்து உள்ளார். சென்னை சூளையை சேர்ந்த முதியவர் ஒருவரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளார்.

இதனை தொடர்ந்து, சென்னை ஆயிரம் விளக்கு தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த அண்ணா சாலையை சேர்ந்த 66 வயது மூதாட்டி உயிரிழந்து உள்ளார். சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் 2 பேர் உயிரிழந்து உள்ளனர். பெரம்பூர் ரயில்வே மருத்துவமனையில் ஐ.சி.எப். பகுதியை சேர்ந்த 85 வயது மூதாட்டி ஒருவரும் கொரோனாவுக்கு பலியாகி உள்ளார்.

இதனால், சென்னையில் இன்று ஒரே நாளில் 10 பேர் கொரோனா சிகிச்சையில் பலனின்றி பலியாகி உள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

பகிர்ந்துகொள்ள