தமக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை நுகர்வோர்மீது நகர்த்தும் பல்பொருள் வாணிப நிறுவனங்கள்!

You are currently viewing தமக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை  நுகர்வோர்மீது நகர்த்தும் பல்பொருள் வாணிப நிறுவனங்கள்!

தங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தொகையை நுகர்வோர்மீது கடத்துவதை தவிர தங்களுக்கு வேறுவழியில்லையென நோர்வேயின் பிரபல பல்பொருள் வாணிப நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

நோர்வேயில் பிரபலமாக விளங்கும் மூன்று பல்பொருள் வாணிப நிறுவனங்களாக “Norges Gruppen”, “Coop Norge” மற்றும் “Rema 1000” ஆகியவை புகழ்பெற்று விளங்குகின்றன. இம்மூன்று நிறுவனங்களின் கீழும் இயங்கும் “Kiwi”, Extra” மற்றும் “Rema 1000” அங்காடித்தொகுதிகள், நுகர்வோருக்கு தேவையான நாளாந்த மளிகைப்பொருட்களை விற்பனை செய்து வருகின்றன.

மேற்படி வாணிப நிறுவனங்கள், மக்களுக்கு மலிவு விலைகளில் அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்வதில் தமக்குள் போட்டி நிலவுவதாக வெளியுலகத்துக்கு காட்டி வந்திருந்தாலும், தமக்குள்ளான இரகசிய ஒப்பந்தங்களின் அடிப்படையில், அத்தியாவசிய நுகர் பொருட்களின் விலைகளை உயர்த்தி வந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டிருந்ததன் விளைவாக, இக்குற்றச்சாட்டை விசாரித்த, முறைகேடான வர்த்தக போட்டிகளை தடுக்கும் நோர்வேயின் அரச அமைப்பான “Konkurransetilsynet” மேற்படி மூன்று நிறுவனங்களும் குற்றமிழைத்ததாக அறிவித்துள்ளதோடு, அம்மூன்று நிறுவனங்களுக்கும் 21 பில்லியன் நோர்வே குறோணர்கள் அபராதமாக விதிக்கப்படலாமெனவும் தெரிவித்துள்ளது.

குறிப்பாக, “Norges Gruppen” நிறுவனத்துக்கு 8.8 பில்லியன் குறோணர்களும், “Rema 1000” நிறுவனத்துக்கு 7.4 பில்லியன் குறோணர்களும், “Coop Norge” நிறுவனத்துக்கு 4.7.பில்லியன் குறோணர்களும் அபராதம் விதிக்கப்படலாமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி அபராதம் பற்றிய அறிவிப்பு வெளியானதும் அதிர்ச்சியடைந்துள்ள வாணிப நிறுவனங்கள் மூன்றும், அறிவிக்கப்பட்ட அபராதத்தொகையை செலுத்துவதற்கு தம்மிடம் பணம் வைப்பில் இல்லையெனவும், அபராதத்தொகையை செலுத்துவதானால், தாம் விற்பனை செய்யும் அத்தியாவசியப்பொருட்களின் விலைகளை கணிசமாக உயர்த்துவதை தவிர தமக்கு வேறு வழியில்லை என தெரிவித்துள்ளன.

இவ்வாறு அத்தியாவசியப்பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படும்போது அதன் பாதிப்புக்களை நுகர்வோர்களே சுமக்கவேண்டி வரும் என்பதும், அதேவேளை, மேற்படி வாணிப நிறுவனங்கள் இழைத்த தவறுகளுக்கான அபராதத்தொகையை நுகர்வோரே செலுத்துவது தவிர்க்கப்பட முடியாததாகும் என்பதும், விலை அதிகரிப்பிலிருந்து கிடைக்கும் மேலதிக இலாபத்திலிருந்து தமக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை இந்நிறுவனங்கள் செலுத்தி விட்டு, தனிப்பட்ட முறையில் நட்டமேதும் அடைவதிலிருந்து தப்பித்துக்கொள்ளும் வாய்ப்புக்களும் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

அபராதத்தொகைகளை செலுத்துவதற்கு தம்மிடம் வைப்பில் பணமில்லையென இவ்வாணிப நிறுவனங்கள் தெரிவித்திருந்தாலும், “Norges Gruppen” நிறுவனம் தனது வைப்பில் 12.6 பில்லியன் குறோணர்களையும், “Rema 1000” நிறுவனம் தனது வைப்பில் 7.3 பில்லியன் குறோணர்களையும், “Coop Norge” நிறுவனம் தனது வைப்பில் 4.7 பில்லியன் குறோணர்களையும் வைத்திருப்பதும் வெளிச்சம் போட்டு காட்டப்பட்டுள்ளது.

அத்தியாவசிய நுகர்வுப்பொருட்கள் தொடர்பில் பாண்டித்தியம் பெற்றவரான “Odd Gisholt” தெரிவிக்கையில், மேற்படி சம்பந்தப்பட்ட மூன்று நிறுவனங்களும், பொருட்களின் விலைகளை உயர்த்துவதற்காக கையாண்ட வழிமுறைகள் பல்லாண்டு காலங்களாகவே நடைமுறையில் இருந்துவருவதால், அதனடிப்படையில் இவ்வாணிப நிறுவனங்களை குற்றவாளிகளாக கண்டிருப்பது வலுவானதாக இருக்காதென தான் கருதுவதாகவும், பெரும் தொகையில் சட்டவல்லுநர்களை பணிகளில் அமர்த்தியிருக்கும் இவ்வாணிப நிறுவனங்கள், சட்ட ரீதியாக இவ்விடயத்தை எதிர்கொண்டு வெற்றிபெறும் நிலை வந்தால், அபராத தொகையை விதிக்கும் நோர்வே அரச நிறுவனத்தின் இயக்குனரே பதவி விலகும் நிலை உருவாகலாமெனவும் கருத்து தெரிவித்துள்ளார்.

தமக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை நுகர்வோர்மீது நகர்த்தும் பல்பொருள் வாணிப நிறுவனங்கள்! 1

ஒவ்வொரு வாணிப நிலையங்களுக்கும் அனுப்பப்படும் “உளவாளிகள்”, அந்தந்த வாணிப நிலையங்களில் விற்பனை செய்யப்படும் குறிப்பிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைகள் தொடர்பான விபரங்களை சேகரிப்பது என்பது, அந்தந்த அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைப்பதற்கான அழுத்தங்களை ஏற்படுத்துவதற்காக பல்லாண்டுகளாக தாம் கையாண்டுவரும் வழிமுறையென தெரிவிக்கும் வாணிப நிறுவனங்கள், இவ்விடயம் குறித்த நோர்வே அரச நிறுவனத்துக்கும் நன்றாகவே தெரியும் என தெரிவித்திருந்தாலும், இதே வழிமுறையை கையாண்ட மேற்படி வாணிப நிறுவனங்கள், விலைகளை குறைக்கும் அழுத்தங்களை ஏற்படுத்தாமல், மாறாக, விலைகளை அதிகரிக்கவே அழுத்தங்களை கொடுத்திருப்பதாக தாம் அறிந்துள்ளதாக அபராதங்களை விதிக்கும் நோர்வே அரசு நிறுவனம் தெரிவித்துள்ளதும் இங்கு கூர்ந்து கவனிக்கத்தக்கது.

குற்றமிழைத்ததாக கருதப்படும் மூன்று வாணிப நிறுவனங்களும் தற்போது தம்மிடம் வைப்பிலிருக்கும் பணத்திலிருந்து அபராதத்தொகையை செலுத்தினால், வர்த்தக நோக்கங்களுக்கான முதலீடுகளை இந்நிறுவனங்கள் இழக்கும் நிலை தோன்றுமெனவும், வருடாந்தம் 240 பில்லியன் தொகையை வருமானமாக ஈட்டித்தரும் நோர்வேயின் அத்தியாவசிய பல்பொருள் வாணிபம் பெரும் சிக்கல்களை எதிர் நோக்கலாமெனவும் குறிப்பிடும் அவதானிப்பாளர்கள், இந்நிறுவனங்களின் வருட வருமானத்தின் 10 சதவிகிதமான தொகையை அபராதமாக செலுத்தும் வகையில், தண்டனை இலகுவாக்கப்பட்டால், மேற்படி வாணிப நிறுவனங்கள் பெரும் சிக்கல்களிலிருந்து விடுபட வாய்ப்புக்கள் ஏற்படுமெனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

பகிர்ந்துகொள்ள