தமிழர் வாழ்வில் மங்களம் பொங்க பொங்குவோம் பொங்குவோம்!

You are currently viewing தமிழர் வாழ்வில் மங்களம் பொங்க பொங்குவோம் பொங்குவோம்!

ஐம்பதிற்கு ஐம்பது என்னும் அரிசியிட்டு
எம்பதி ஜீ ஜீ பொன்னம்பலம் தலைமையில்
தன்மானத்தோடு சமத்துவப் பொங்கலொன்று
சமைக்க முயன்றோம் அன்று நாம்
சோல்பரியாரின் தூர நோக்கின்மையால்
அரிசியே மண்ணில் சிந்தியது

காந்தீய அரிசியெடுத்து கடமைப் பாலெடுத்து
தமிழுணர்வுப் பானை தேர்ந்தெடுத்து
இணைப்பாட்சி என்னும் சமஷ்டிப்
பொங்கலிட முயன்றோம் அன்று நாம்
காடையரை ஏவிவிட்டுப் கொடுமை செய்து
பொங்கலைச் சிதைத்தது கயவர் ஆட்சி

ஐந்து வீடாவது கொடு என்ற பாண்டவர்போல்
மாவட்ட சபை என்னும் மட்டமான அரிசியிலே
அரை வேக்காட்டுப் பொங்கலொன்று சமைத்தோம்
நூல் நிலையம் கொழுத்தி நோகடித்தனர் எம்மை

மிரட்டல் பானையிலே வஞ்சகப் பாலூற்றி
இந்திய நட்பென்னும் புழுத்துப் போன அரிசியிலே
பதின் மூன்றாம் திருத்தம் எனும்
பொங்கலை எம் வாயில் திணித்தனர்
தொண்டையில் இன்றும் சிக்கி நிற்கிறது நஞ்சாக

வீரத் தீமூட்டி தியாகப் பானை எடுத்து
தீரப் பால் வார்த்து உறுதி நெய்யூற்றி
தூய்மை அரிசியோடு வாய்மைத் தேனிட்டு
பொங்கிய ஈழப் பொங்கல் இறக்கும் வேளையிலே
பன்னாட்டுச் சமூகமென்னும் பன்னாடைக் கூட்டமும்
மானம் கெட்ட பாதக இந்தியாவும்
பொங்கல் பானை உடைத்துச் சென்றன

பன்னாட்டுப் பாவியர் குத்திய
பயங்கரவாத முத்திரைக்
குப்பை தனைப் பெருக்கி
தேசியக் கோலமிட்டு
பொங்குவோம் பொங்குவோம்
விடுதலைப் பொங்கல் பொங்குவோம்
தமிழர் வாழ்வில் மங்களம் பொங்க
பொங்குவோம் பொங்குவோம்

தாயகத் தாக அரிசியெடுத்து
துரோகமெனும் கல் நீக்கி
ஒற்றுமைப் பால் வார்த்து
புலமென்னும் பானையிலே – துணிந்தெழுந்து
பொங்குவோம் பொங்குவோம்
விடுதலைப் பொங்கல் பொங்குவோம்

ஈழ வேட்கை பட்டாசாக
தன்மானத் தேன் சேர்ந்து
தளரா மனக் கரும்பஞ் சாறூற்றி
வீரத் தீ மூட்டி தியாகக் கனி கூட்டி
பொங்குவோம் பொங்குவோம்
விடுதலைப் பொங்கல் பொங்குவோம்
தமிழர் வாழ்வில் மங்களம் பொங்க
பொங்குவோம் பொங்குவோம்

வழியிங்கு பிறந்ததென – ஞாயிறு
ஒளியிங்கு வந்ததென
வஞ்சகர் மறைந்தனர் என
எதிரிகள் எங்கோ ஒளிந்தனரென – மார்தட்டிப்
பொங்குவோம் பொங்குவோம்
விடுதலைப் பொங்கல் பொங்குவோம்
தமிழர் வாழ்வில் மங்களம் பொங்க
பொங்குவோம் பொங்குவோம்

ஆழ்கடலும் நீள் நிலமும் நம் வசமாக வளமாக
வாடும் மனங்கள் இசை பாடும் மீன்களாக
நாடும் நலமாக யாழிசைக்க – தோள்தட்டிப்
பொங்குவோம் பொங்குவோம்
விடுதலைப் பொங்கல் பொங்குவோம்
தமிழர் வாழ்வில் மங்களம் பொங்க
பொங்குவோம் பொங்குவோம்

-வேல்தர்மா-

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments