தேமுதிக நிறுவனத் தலைவர் நடிகர் விஜயகாந்த் காலமானார்!

You are currently viewing தேமுதிக நிறுவனத் தலைவர் நடிகர் விஜயகாந்த் காலமானார்!

தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி இன்று (டிச.28) காலை காலமானார். அவருக்கு வயது (71). அவரது மறைவால் தேமுதிக கட்சித் தொண்டர்கள், திரை ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். விஜயகாந்த் இல்லத்தில் உள்ள தேமுதிக கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது.

அவரது மறைவு தொடர்பாக மியாட் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், “நிமோனியா (நுரையீரல் அழற்சி) காரணமாக அனுமதிக்கப்பட்டு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்றுவந்த விஜயகாந்துக்கு மருத்துவப் பணியாளர்களின் கடின முயற்சி இருந்தபோதிலும் காலமானார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடல் நலக்குறைவால் சில ஆண்டுகளாக வீட்டிலேயே ஓய்வில் இருந்து வந்தார். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால், அவ்வப்போது மருத்துவமனைக்கு சென்று பரிசோதனைகளை மேற்கொண்டு வந்தார். வீட்டில் ஓய்வில் இருந்த விஜயகாந்துக்கு இருமல், காய்ச்சல், சளி தொந்தரவுகள் ஏற்பட்டதால் கடந்த மாதம் 18-ம் தேதி சென்னை கிண்டியை அடுத்த மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தீவிர சிகிச்சை பிரிவில் (ஐசியு) அனுமதிக்கப்பட்ட அவருக்கு சில நேரங்களில் சுயமாக சுவாசிப்பதில் சிரமம் இருந்ததால் அந்த நேரங்களில் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. நுரையீரல் நிபுணர்கள் அவரை கண்காணித்து சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து, உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதால், மருத்துவமனையில் இருந்து கடந்த 12-ம் தேதி தான் விஜயகாந்த் வீடு திரும்பி இருந்தார் .

 

கடந்த செவ்வாய்க்கிழமை விஜயகாந்த் மருத்தவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார். அப்போது தேமுதிக சார்பில் வெளியான செய்திக்குறிப்பில் வழக்கமான மருத்துவப் பரிசோதனை என தெரிவிக்கப்பட்டது.

இன்று (டிச.28) அவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. வென்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்படுவதாக தேமுதிக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. விஜயகாந்த் கடைசியாக கடந்த டிசம்பர் 14 ஆம் தேதி தேமுதிக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று காலையில் இருந்தே மியாட் மருத்துவமனையில் தேமுதிக தொண்டர்கள் குவியத் தொடங்கினர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் போலீஸார் குவிக்கப்பட்டனர். அதேபோல் சென்னை வளசரவாக்கத்தில் அவரது வீடு அமைந்திருக்கும் பகுதியிலும் தேமுதிக முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டனர். அவரது மறைவுச் செய்தி வெளியான சில நிமிடங்களிலேயே ஏராளமானோர் குவிந்துவிட்டனர். அங்கும் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

நாராயணன் விஜயராஜ் அழகர்சாமி, இதுதான் நடிகர் விஜயகாந்தின் இயற்பெயர். மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் 1952-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25-ஆம் தேதி அழகர்சாமி என்ற ரைஸ் மில் முதலாளியின் மகனாகப் பிறந்தவர். நடிப்பதற்காக சென்னை வந்த பிறகு தனது பெயரை “விஜயகாந்த்” என மாற்றிக்கொண்டார்.

சினிமா வாய்ப்பு இவருக்கு பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு தான் கிடைத்தது. அவரது முதல் படம், 1979-ஆம் ஆண்டு எம்.ஏ.காஜாவின் இயக்கத்தில் வெளியான ‘இனிக்கும் இளமை’. அவரது சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்திய திரைப்படம் ‘சட்டம் ஒரு இருட்டறை’. இந்த திரைப்படம் தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.

அதன் பிறகு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மாறினார். ‘புலன் விசாரணை’, ‘சேதுபதி ஐபிஎஸ்’, ‘சத்ரியன்’, ‘கேப்டன் பிரபாகரன்’,’வானத்தைப் போல’, ‘தவசி’, ‘ரமணா’ என இதுவரை 150 திரைப்படங்களுக்கும் மேல் நடித்துள்ளார் விஜயகாந்த்.

“தனது சினிமா வாழ்க்கையில் 54 புதிய இயக்குனர்களை அறிமுகம் செய்தவர் நடிகர் விஜயகாந்த். உலக சினிமாவில் இதை வேறு யாரும் செய்திருக்க மாட்டார்கள். அதிகமான புதிய தயாரிப்பாளர்களுக்கும், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் வாய்ப்பு அளித்தவர்”

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments