தேராவில் மாவீரர் துயிலும் இல்ல காணி விடுவிப்பு தொடர்பில் கலந்துரையாடல்!

You are currently viewing தேராவில் மாவீரர் துயிலும் இல்ல காணி விடுவிப்பு தொடர்பில் கலந்துரையாடல்!

விசுவமடு தேராவில் மாவீரர் துயிலுமில்ல காணியை விடுவிக்க கோரி தேராவில் மாவீரர் துயிலும் இல்ல பணிக்குழுவினர் மாவீரர்களின் பெற்றோர் உரித்துடையோர்  திங்கட்கிழமை (20) மாலை வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனை சந்தித்து கலந்துரையாடினர்.

தேராவில் மாவீரர் துயிலும் இல்ல பணிக்குழுவினர் மாவீரர்களின் பெற்றோர் உரித்துடையோர் தேராவில் மாவீரர் துயிலும் இல்ல காணி விடுவிப்பு தொடர்பில் அண்மையில் கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்தனர்.இதன் தொடர்ச்சியாக சேகரிக்கப்பட்ட சுமார் 2500 பேரின் கையெழுத்துக்கள் அடங்கிய மகஜரை நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு அனுப்பி வைக்க கையளிக்கும் முகமாகவும் ஆளுநருக்குரிய மகஜரை கையளித்து காணியை விடுவிக்க கோரும் முகமாகவும் குறித்த சந்திப்பு இடம்பெற்றது.

தேராவில் மாவீரர் துயிலும் இல்ல வளாகத்தை விடுவித்தல் தொடர்பானது.

கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள புன்னைநீராவி கிராமசேவையாளர் பிரிவில் குமாரசாமிபுரம் கிராமத்தில் தேராவில் பகுதியில் உள்ள தேராவில் மாவீரர் துயிலும் இல்ல வளாகத்தில் கடந்த 1995ம் ஆண்டு காலப்பகுத்தியிலிருந்து 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவடையும் இறுதிக்காலம் வரை போரில் வீரகாவியமான எண்ணாயிரத்திற்கும் அதிகமான எமது பிள்ளைகள் உரித்துடையோர் அனைவரையும் யுத்தவீரர்களுக்கான மரியாதையுடன் புதைக்கப்பட்டும் நடுகற்கள் நாட்டப்பட்டும் பராமரிக்கப்பட்டு பூசிக்கப்பட்டு வந்தமை இவ்வுலகமும் தாங்களும் அறிந்த உண்மை.

இறுதி யுத்தகாலத்தில் கனரக வாகனங்கள் கொண்டு வடக்கு கிழக்கில் உள்ள புனித துயிலும் இல்லங்கள் அனைத்தும் அழிக்கப்பட்ட போது எமது தேராவில் மாவீரர் துயிலும்  இல்லமும் முற்றுமுழுதாக சிதைத்து அழிக்கப்பட்டது. அதன் பின்னரான காலப்பகுதியில் துயிலுமில்ல வளாகமானது வேறு அரச இராணுவ தேவைகளுக்காக கடந்த அரசுகளால் பயன்படுத்தப்பட்டு வருகின்றமை நிதர்சனமான உண்மை.

மேற்படி விடயமானது பெற்றோர்களாகிய எமக்கும் உறவினர்களுக்கும் எங்களுக்கு மிகவும் புனிதமான துயிலும் இல்லங்களை இழிவுபடுத்தும் இத்தகைய செயல்கள் மிகுந்த மன வலியையும் சொல்லொணா மன உளைச்சல் மற்றும் துயரத்தையும் ஏற்படுத்துயுள்ளது.

போர் முடிந்ததிலிருந்து, இலங்கை இராணுவத்தின் 573 வது படையணி தேராவில் துயிலும் இல்லத்தை வலிந்து தமது ஆக்கிரமிப்பில் வைத்துள்ளது. ,14 வது இலங்கை தேசிய படையணி (14 SLNG)   அங்கு தங்கி சீமெந்து கற்களை உற்பத்தி செய்யும் இடமாக அதைப் பயன்படுத்தினர். தற்போது அந்த செயல்பாடும் அங்கு இல்லை.

உயிரிழந்தவர்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள இடங்களை வேறு நோக்கங்களுக்காக, அதிலும் குறிப்பாக வணிக நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவது சர்வதேச விதிமுறைகள் மற்றும் மரபுகளை அப்பட்டமாக மீறுவதாகும், மேலும் அது புனிதத்தை களங்கப்படுத்துவதற்குச்  சமம். தற்போது, அங்கு ஐந்து இராணுவத்தினர் மட்டுமே தங்கியுள்ளனர், மேலும் அவர்கள் எந்த வேலையிலும் ஈடுபடவில்லை.

இராணுவம் வேண்டுமென்றே அந்த நிலத்தை தங்களின் வலிந்த ஆக்கிரமிப்பின் கீழ் வைத்திருக்க விரும்புகிறது என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது.

எங்கள் பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் விதைக்கப்பட்டுள்ள தேராவில்  துயிலும் இல்ல நிலத்தை விடுவிக்குமாறு நாங்கள் இப்போது உங்களை பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இந்த துயிலும் இல்லம் எங்களுக்கு மிகவும் புனிதமானது, அங்கு சென்று நாங்கள் வீழ்ந்த எமது உறவினர்களுக்கு  புனித அஞ்சலி செலுத்துவதற்கும், மரியாதை செலுத்துவதற்கும் தனிநபர் சுதந்திரத்தை பாதிக்காத வகையில், சட்ட வழிமுறைகளுக்கு அமைவாக அந்த நிலத்தை விடுவித்து கொடுக்குமாறு வேண்டுகிறோம்.

மேலும், அந்த நிலத்தை விடுவிக்கும் போது, அங்கு நல்லடக்கம் செய்யப்பட்டவர்களின் குடும்பங்கள் ஆண்டு முழுவதும், குறிப்பாக ‘மாவீரர் நாளன்று’  பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் வந்து அஞ்சலி செலுத்துவதற்கு வசதியாக, தடையற்ற அணுகலை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் பிரதிகளாக பிரதமர், வடக்கு மாகாண ஆளுனர், மீன்வளத்துறை அமைச்சர், யாழ்ப்பாண நாடாளுமன்ற உறுப்பினர், வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோருக்கு வழங்கி வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply