“நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை முதல்வர் ஸ்டாலின் அள்ளி வீசியிருக்கிறார்‌” – எடப்பாடி குற்றச்சாட்டு!

You are currently viewing “நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை முதல்வர் ஸ்டாலின் அள்ளி வீசியிருக்கிறார்‌” – எடப்பாடி குற்றச்சாட்டு!

“தமிழகத்தின்‌ கடன்‌ அளவு எவ்வளவு என்று தேர்தல்‌ சமயத்தில்‌, திமுகவின்‌ தேர்தல்‌ அறிக்கையிலேயே தெளிவாகக்‌ கூறப்பட்டிருக்கிறது. இதையெல்லாம்‌ அறிந்துதான்‌, நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை திமுக தலைவர்‌ அள்ளி வீசியிருக்கிறார்‌” என, எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது;”ஏமாறுவதற்கு ஆள்‌ இருக்கின்றவரை ஏமாற்றிக்‌ கொண்டிருக்கலாம்‌ என்ற கொள்கையின்‌ அடிப்படையில்‌ திமுகவின்‌ விடியா அரசு செயல்படுகிறது. இந்த ஆட்சியின்‌ 100 நாள்‌ செயல்பாடுகளிலேயே ஏமாற்றம்‌ அடைந்த மக்கள்‌ விழி பிதுங்கி நிற்கிறார்கள்‌. நாங்கள்‌ ஆட்சிக்கு வந்தால்‌ 5 சவரன்‌ வரை நகைக்‌ கடன்‌ தள்ளுபடி செய்வோம்‌ என்று வாக்குறுதி அளித்தவர்கள்‌, இப்போது பசப்பு வார்த்தைகளைப்‌ பொழிகிறார்கள்‌.

தமிழக மாணவர்கள்‌ வங்கிகளில்‌ வாங்கிய உயர்‌ கல்விக்கான கல்விக்‌ கடனை ரத்து செய்வோம்‌ என்று வாக்குறுதி அளித்து, வாக்குகளைப்‌ பெற்ற ஆட்சியாளர்கள்‌ அதைச் சுத்தமாக மறந்துவிட்டார்கள்‌. தற்போது ஆட்சியில் உள்ள திமுக அரசு, தேர்தல்‌ வாக்குறுதிகளை நிறைவேற்ற பல்வேறு நிபந்தனைகளை விதிக்க இருப்பதாக செய்திகள்‌ வருகின்றன. 5 சவரன்‌ நகைக்‌ கடன்‌ தள்ளுபடி சலுகை பலருக்கு கிடைக்கக்‌ கூடாது என்னும்‌ அளவுக்கு நிபந்தனைகளை விதிக்க திமுக அரசின்‌ கூட்டுறவுத்‌துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள்‌ வருகின்றன.

கூட்டுறவு சங்கங்களில்‌ நகைக்‌ கடன்‌ பெற்ற அனைவரும்‌, கடன்‌ ரத்தாகும்‌ என்று மகிழ்ச்சி அடைந்த நிலையில்‌, 2018ம்‌ ஆண்டு ஏப்ரல்‌ முதல்‌ 2020ம்‌ ஆண்டுவரை பெறப்பட்ட நகைக்‌ கடன்களை மட்டுமே தள்ளுபடி செய்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாம்‌. இதை செயல்படுத்துவதற்கான அரசாணை விரைவில்‌ வெளியிடப்படும்‌ என்று பத்திரிகைகளில்‌ செய்திகள்‌ வந்துள்ளன.

நகைக்‌ கடன்‌ தள்ளுபடி பெற, கடன்‌ பெற்றவர்‌ கூட்டுறவு சங்கங்களில்‌ பயிர்க்‌ கடன்‌ பெற்றிருக்கக்‌ கூடாது. மத்திய – மாநில அரசு ஊழியராக இருக்கக்‌ கூடாது. வருமான வரி செலுத்துபவராக இருக்கக்‌ கூடாது. ஆண்டு வருவாய்‌ ஒரு லட்சத்திற்கு மேல்‌ இருக்கக்‌ கூடாது. கூட்டுறவு சங்கங்களில்‌ பணிபுரியக்‌ கூடாது. குடும்பத்தில்‌ ஒருவர்‌ மட்டுமே கடன்‌ பெற்றிருக்க வேண்டும்‌ என்பன போன்ற பல்வேறு நிபந்தனைகள்‌ விதிக்கப்பட உள்ளதாகத்‌ தெரிகிறது.

இதனால்‌, நகைக்‌ கடன்‌ தள்ளுபடி செய்யப்படும்‌ என்று இந்த அரசு அறிவித்தாலும்‌, நிபந்தனைகளால்‌, பலரால்‌ கடன்‌ தள்ளுபடி சலுகை பெற முடியாது. கூட்டுறவு சங்க நிர்வாகிகள்‌ மூலம்‌ இவற்றை தெரிந்துகொண்ட மக்கள்‌ கொதிப்படைந்துபோய்‌ உள்ளனர்‌.

தமிழகத்தின்‌ கடன்‌ அளவு எவ்வளவு என்று தேர்தல்‌ சமயத்தில்‌, திமுகவின்‌ தேர்தல்‌ அறிக்கையிலேயே தெளிவாகக்‌ கூறப்பட்டிருக்கிறது. இதையெல்லாம்‌ அறிந்துதான்‌, நிறைவேற்ற முடியாத 505க்கும்‌ மேற்பட்ட வாக்குறுதிகளை திமுக தலைவர்‌ அள்ளி வீசியிருக்கிறார்‌. ஆனால்‌, அதனை நிறைவேற்ற எண்ணம்‌ இல்லாமல்‌, நிதி அமைச்சரை வைத்து ஒரு வெள்ளை அறிக்கையை தாக்கல்‌ செய்துள்ளனர்‌. அந்த வெள்ளை அறிக்கையும்‌, ஒவ்வொரு ஆண்டும்‌ அதிமுக அரசு வெளியிட்ட நிதி அறிக்கையின்‌ தொகுப்பாகவே உள்ளது.

மேலும்‌, இந்த நிதி அறிக்கையில்‌ தமிழ்‌நாட்டின்‌ கடன்‌ இவ்வளவு உள்ளது என்று புதிதாகக் கண்டுபிடித்தது போலவும்‌, இதனால்‌ நலத்‌ திட்டங்களைத்‌ தொடர்ந்து செயல்படுத்த பல்வேறு நிபந்தனைகள்‌ விதிக்கப்படும்‌ என்றும்‌, அரசு ஊழியர்களுக்கு நாங்கள்‌தான்‌ பாதுகாப்பு என்று கூறிக்கொள்ளும்‌ திமுக, அவர்களது பணப்‌ பயனில்‌ கை வைப்பதும்‌, தேர்தல்‌ அறிவிப்புகளில்‌ ஒன்றிரண்டை நிறைவேற்றுவதாகக்‌ கூறி, அதிலும்‌ புதிய புதிய நிபந்தனைகளை விதித்து, பயனாளிகளின்‌ எண்ணிக்கையைப் பெருமளவு குறைக்கத்‌ திட்டமிட்டுள்ளதும்‌, உள்ளங்கை நெல்லிக்கனி போல்‌ தெளிவாகத்‌ தெரிகிறது.

எனவே, திமுகவின்‌ தோதல்‌ வாக்குறுதிகளை நம்பி வாக்களித்த தமிழ்‌நாட்டு மக்களை இனியும்‌ ஏமாற்றாமல்‌, அவர்கள்‌ விழிப்படைந்து போராட்டக்‌ களத்தில்‌ குதிப்பதற்கு முன்பு, அதிர்ஷ்டவசத்தால்‌ ஆட்சிக்கு வந்த இந்த அரசு தன்னை திருத்திக்கொள்ள வேண்டும்‌. கூட்டுறவு சங்கங்களில்‌ விவசாயிகள்‌ பெற்றுள்ள பயிர்க்‌ கடன்களையும்‌ மற்றும்‌ 5 சவரன் வரை அடமானம்‌ வைத்து நகைக்‌ கடன்‌ பெற்றவர்களுடைய கடன்களையும்‌ உடனடியாகத்‌ தள்ளுபடி செய்ய வேண்டும்‌ என்று கேட்டுக்‌ கொள்கிறேன்‌” என தெரிவித்துள்ளார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments