பாப்பரசர் பிரான்சிஸ் கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் காலமானார். அவருக்கு வயது 88. இன்று காலை வாடிகனில் உள்ள அவரது இல்லத்தில் மறைந்தார் என்று தகவல் வெளியாகியுள்ளது. சுவாசப் பாதையில் ஏற்பட்ட பூஞ்சை, பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்று காரணமாக போப் பிரான்சிஸ் தொடர் சிகிச்சை பெற்று வந்தார்.
கடந்த மார்ச் மாதம் வயோதிகம் சார்ந்த உடல்நலப் பிரச்சனைகளால் கடந்த 14 ஆம் தேதி ரோம் நகரில் உள்ள ஜெமல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிறு வயதிலேயே நுரையீரலின் ஒரு பகுதி அகற்றப்பட்ட நிலையில், நுரையீரல் மற்றும் சுவாசப்பாதையில் ஏற்பட்ட தொற்றுக்கு முதலில் சிகிச்சை அளிக்கப்பட்டது. போப் பிரான்சிஸ் இயற்கையாக சுவாசிக்க சிரமப்படுவதால், மூக்கின் வழியாக குழாய் பொருத்தப்பட்டு ஆக்ஸிஜன் செலுத்தப்பட்டும், இரவில் வெண்டிலேட்டர் உதவியுடன் அவர் சுவாசிக்கும் வகையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர், சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.
மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியபோதும், அவர் முழுமையாக குணமடைய 2 மாதங்கள் ஆகும் எனக் கூறப்பட்டது. எனினும், ஈஸ்டர் பிரார்த்தனையில் போப் பிரான்சிஸ் பங்கேற்றிருந்தனர். இந்நிலையில் இன்று காலை வாடிகனில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.