புனல் விழுங்கிய கணங்கள்..

You are currently viewing புனல் விழுங்கிய கணங்கள்..

புனல் விழுங்கிய கணங்கள்..

பெரும் சினம் கொண்டு
மணல் மேட்டில் உன் தலை
மோதி அடிக்கும் போதெல்லாம்
உன் உடல் தடவி கொடும் பசி தீர்க்க
நின் தலை கோதி கலமேறி
மீன் அள்ளிவர துள்ளி ஓடுவோம்!

நீலமேனியெங்கும் நீர்விழி துடைக்க
நீள்தூரம் வலைவீசுவோம்!
புயலும் காற்றும் போர் தொடுக்கும் போதெல்லாம்
உப்புக்காற்றை உடலிலேற்றி
உறுதியாய் எதிர்போம்!

பொருளாதாரத்தடையும்
மருத்துத்தடையும்
மக்களை துன்புறுத்தும் கணங்களில்
பாக்குநீரிணை கடந்து
தொப்புள் கொடி உறவுகளின்
உதவிகளை பெற்றிட
உறுதுணையாய்
நிற்பாய்!

இரண்டாம் தாயாய்
உயிர் வாழ உணவளித்து
இருண்டுபோன தேசத்திற்கு
ஒளியேற்றினாய்!

பசியாற படகேறிப் போனவனை
இனவாத பூதங்கள் புசித்து
உண்ணும் போதெல்லாம்
கரைவந்து தலைமோதி
கவலைதனைத் தீர்ப்பாய்!

ஆனால்?
சோறு தந்த நீயே
சோதரர்களை தின்பாயென்று
யார் நினைத்தார்!
ஆறுதலாய் இருந்த நீயே
ஆணவமாய் அழிப்பாயென்று
யார் ஊகித்தார்!

எப்போதுமே
காணாத இராட்சத தலைகளாய்
நீ வாயைப் பிளந்து வந்தது
அப்பப்பா
இப்போதும்
ஈரக்குலை நடுங்குகிறது!

ஊரெல்லாம் அவலக்குரலை
தந்துபோன உனக்குள்
ஏன் இவ்வளவு வன்மம்
என்றே எண்ணத்
தோன்றுகின்றது!

எதிரிக்கு ஒத்தாசையாய்
உலகத்தைப்போல் நீயும் ஆனாயென்றே
இன்றும்
இதயம் விம்மி
வெடிக்கிறது!

புனல் விழுங்கிய பொழுதில்
உயிர் பலியான உறவுகளுக்கு
அகவணக்கம்!

✍️தூயவன்

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments